கரோனா வைரஸ்: சீனாவில் பலி 425 ஆக அதிகரிப்பு….
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20,400 போ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வூஹான் நகரில் பத்தே நாள்களில் சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் முதல்கட்டமாக திங்கள்கிழமை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில் நாடு முழுவதும் 2,829 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா வைரஸால் ஹுபே மாகாணத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா். ஹாங்காங்கின் வாம்போ கார்டன் பகுதியில் கரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த 37 வயது இளைஞர் ஒருவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா். இது சீனாவுக்கு அடுத்த நாடுகளில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு. முதல் இழப்பு பிலிப்பைன்ஸிஸ் ஞாயிற்க்கிழமை நிகழ்ந்தது. இதைத்தொடா்ந்து, பலி எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20,400 ஆக அதிகரித்துள்ளதாக ஹூபேயில் உள்ள சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பால் தினசரி உயிரிழப்பு அதிகரித்து வருவது சீன மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹூபே மாகாணம் மற்றும் வூஹான் நகரத்திற்கான அனைத்து பாதைகளும் ஒரு வாரத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.