10 ரூபாய்க்கு வழங்கப்படும் மலிவு விலை உணவகம் ‘சிவ்போஜன்’

 10 ரூபாய்க்கு வழங்கப்படும் மலிவு விலை உணவகம் ‘சிவ்போஜன்’

மராட்டிய சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் இந்த மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. மாவட்ட தலைநகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் உணவகங்களை திறந்து வைத்தனர்.

மும்பை நகர பொறுப்பு மந்திரி அஸ்லாம் சேக், நாயர் மருத்துவமனையில் உள்ள மருத்துவமனை கேண்டீனில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை மந்திரியும், மும்பை புறநகர் பொறுப்பு மந்திரியுமான ஆதித்ய தாக்கரே பாந்திரா கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தாராவி பிரேம்நகரில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு ‘சிவ்போஜன்’ என பெயரிடப்பட்டு உள்ளது. 10 ரூபாய்க்கு வழங்கப்படும் மதிய உணவில் 2 சப்பாத்தி, அரிசி சாதம், பருப்பு குழம்பு போன்றவை வழங்கப்படும்.

மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இந்த உணவகங்கள் திறந்து இருக்கும். ஒவ்வொரு உணவகங்களிலும் ஒரு நாளைக்கு குறைந்தது 500 தட்டு உணவுகள் தயாரித்து வழங்கப்பட உள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு மருத்துவமனைகள், பஸ் நிறுத்தங்கள், ரெயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் சிவ்போஜன் உணவகங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

திட்டத்தின் தொடக்க நாளிலேயே பல்வேறு பகுதிகளில் மக்கள் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டனர். உணவின் தரத்தை பலரும் பாராட்டினர். ஆனால் உணவகம் திறந்து இருக்கும் நேரத்தை, மேலும் 2 மணி நேரம் அதிகரிக்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர்.

வெள்ளோட்ட அடிப்படையில் குறைந்த இடங்களில் தொடங்கப்பட்டு உள்ள இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மாநிலத்தில் பரவலாக இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.

மந்திரி ஆதித்ய தாக்கரே இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சாதி, மதம், பொருளாதார சூழ்நிலை அனைத்தையும் கடந்து அனைவருக்கும் மலிவு விலையில் தரமான உணவு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...