திரு.டி.கிருஷ்ணகுமார் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்..!
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளையுடன் (நவ.21) ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ண குமாரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது.
இதனை ஏற்றுக்கொண்டு டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக குறைந்து, காலியிடங்கள் ஒன்பதாக அதிகரித்துள்ளது.
கடந்த 1963ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தாராபுரத்தில் பிறந்த டி. கிருஷ்ணகுமார், அங்கு பள்ளி படிப்பை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்.சி.பட்டப்படிப்பை முடித்த அவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.
1987ஆம் ஆண்டுமுதல் பணியை தொடங்கிய டி. கிருஷ்ணகுமார் மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராக பணியாற்றிய நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.