தீவிரமாகும் ரஷ்யா- உக்ரைன் போர்..!
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மீண்டும், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, கச்சா எண்ணெய் வணிகம் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க துவங்கியுள்ளது. இது சீனாவை தாண்டி, நம் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், இந்தியாவில் எரிபொருளின் விலை எவ்வளவு அதிகரிக்கப்படலாம் என்பதையும், மற்ற நாடுகளில் எவ்வளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாகவே, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் போர் கூட உலகின் மொத்த பொருளாதாரத்தில் கணிசமான சதவீதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்படியிருக்கையில், உலகின் கச்சா எண்ணெய் அதிகம் கிடைக்கக்கூடிய முதன்மையான நாடுகளுள் ஒன்றாக விளங்கும் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் கச்சா எண்ணெய் இருப்பை வெகுவாக குறைத்து வருகிறது.
இதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு 0.3% அதிகரித்து 71.24 டாலர்களாக உள்ளது. அமெரிக்க மேற்கு டெக்ஸாஸ் இடைநிலை கச்சா எண்ணெய்யின் விலை 0.1% அதிகரித்து பீப்பாய்க்கு 67.11 டாலர்களாக உள்ளது. இது தற்போதைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சிறிய அதிகரிப்பு ஆகும். வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் தற்போதைக்கு முடிவதுபோல் தெரியவில்லை. சொல்லப் போனால் நாளுக்கு நாள் போர் சூழல் மேலும் பதற்ற நிலையை உருவாக்கி வருகிறது. இதற்கேற்ப, அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய இராணுவத்தினருக்கு அதிபர் விளாடிமிர் புதின் அனுமதி அளித்துள்ளார். அதேபோல், உக்ரைன் இராணுவமும் அமெரிக்காவின் ஆயுதங்களை பெற உள்ளது.
இதனால், உக்ரைனில் இருந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், அதற்கேற்ப ரஷ்ய இராணுவம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு உதவும் வகையில் வடகொரிய படை களத்தில் குதித்துள்ளது. இருப்பினும், ரஷ்ய படைகளை நோக்கி தாக்குதல் நடத்தும்படி உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார். இது உலக கச்சா எண்ணெய் வணிகத்தை பாதிக்கும் என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உக்ரைனின் பல்வேறு பவர் சிஸ்டங்களை ரஷ்யா காலி செய்துள்ளது என்றாலும், அதேநேரம் ரஷ்யாவிலும் ஏற்றுமதி தடையினால் கிட்டத்தட்ட 3 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் போய் உள்ளன. இதுவும், கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவு நம் இந்தியாவை பதம் பார்க்க போகிறது என்றாலும், அதற்கு முன்னதாகவே சீனாவை ஆட்டம் காண வைத்துள்ளது.
சீனாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்திறன் ஆனது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரை காட்டிலும் இந்த ஆண்டு அக்டோபரில் 4.6% குறைந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் இருந்து, உலகின் கச்சா எண்ணெய் தேவை ஆனது நாள் ஒன்றுக்கு 10 இலட்சம் பீப்பாய்களை தாண்டி, கச்சா எண்ணெய்க்கு பெரிய தேவை ஏற்படும் என சர்வதேச எனர்ஜி ஏஜென்சி ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும் எண்ணெய் தொட்டிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 478இல் இருந்து ஒன்று குறைந்துள்ளது.
இவ்வாறு, ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் இரு நாடுகள் இடையேயான போரினால் மற்ற நாடுகளும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும், சில சமயங்களில் நிலையான & தெளிவான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு போர் தேவைப்படுகிறது. அதைதான் ரஷ்யாவும், உக்ரைனும் செய்து வருகின்றன. இந்த போரினால் வேறு என்னென்ன பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்பட உள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.