அமெரிக்காவில் நாளை ஓட்டுப்பதிவு..!
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவ.,5ல் நடக்கிறது. உலகின் ஒரே வல்லரசு நாடு என்ற பெருமைக்குரிய அமெரிக்க அதிபர் தேர்தல், நான்காண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. இப்போது நடக்கும் தேர்தலில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் நேரடியாக மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தாலும், மக்கள் நேரடியாக அதிபரை தேர்வு செய்வதில்லை. ‘எலக்ட்ரோல் காலேஜ்’ முறை பின்பற்றப்படுகிறது. இந்த எலக்ட்ரோல் காலேஜ் மொத்த ஓட்டு எண்ணிக்கை 538 ஆகும். இதில், 270 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை பெறுபவர், அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக அர்த்தம். ஒவ்வொரு மாநிலத்துக்கும், மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு விதமான எலக்ட்ரோல் காலேஜ் ஓட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு, அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு 54 எலக்ட்ரோல் காலேன் ஓட்டுகள் உள்ளன. சிறிய மாநிலமான வியாமிங் 3 ஓட்டுகளை மட்டுமே கொண்டுள்ளது. இதில், 48 மாநிலங்களில், அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவோர், அனைத்து எலக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளையும் கைப்பற்றி விடுவர். மைன், நெப்ரஸ்கா மாநிலங்களில் மட்டும் விகிதாச்சார அடிப்படையில், இரண்டாமிடம் பெறுபவருக்கும் கொஞ்சம் ஓட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அமெரிக்காவின் 50 மாநிலங்களில் சிலவற்றில் வழக்கமாக குடியரசு கட்சிக்கும், சில மாநிலங்களில் ஜனநாயக கட்சிக்கும் ஆதரவாக ஓட்டுக்கள் கிடைக்கும். ஆனால், சில மாநிலங்களில் இரு கட்சியும் மாறி மாறி முன்னிலை பெற்று ஓட்டுகளை கைப்பற்றுவர். அப்படிப்பட்ட 7 முக்கிய மாநிலங்களில், டிரம்ப், கமலா ஹாரிஸ் இருவரும், இந்த வாரம் முழுவதும் கவனம் செலுத்தினர். அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய அந்த 7 மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது.
இதில், மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களில் மட்டும் கருத்துக்கணிப்பில் கமலா முன்னிலையில் இருக்கிறார். மற்ற மாநிலங்களில் டிரம்ப் தான் முன்னிலையில் இருக்கிறார். தேர்தலில் ஒரு வேளை தோற்றுப்போனால், கடந்த தேர்தலில் நடந்தது போல, இம்முறையும் வன்முறையை துாண்டி விடவும், முடிவை ஏற்காமல் முரண்டு பிடிக்கவும் டிரம்ப் தயாராகி விட்டதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், நான் வெற்றி பெறுவது உறுதி என்று டிரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக எக்ஸ் தளம் உரிமையாளர் எலான் மஸ்க்கும் தீவிர பிரசாரம் செய்கிறார். இத்தகைய சூழ்நிலையில், முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறைப்படி, மெயில் மூலம் ஓட்டுப்பதிவு அனைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடிகளில் வந்து ஓட்டளிக்கும் முறைப்படியான தேர்தல் நாளை நவ.,5ல் நடக்கிறது.
கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் முன்னணியில் இருப்பதாகவும், அவருக்கும், கமலா ஹாரிசுக்கும் நுாலிழை அளவு மட்டுமே வித்தியாசம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. டிரம்பும், அவரது ஆதரவாளர்களும், வெற்றிக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதால், கடந்த தேர்தலை போலவே, இந்த முறையும் இறுதி வரை திக்…திக்… மனநிலையுடன் தான் தேர்தல் நிலவரம் இருக்கும் என்று உறுதியுடன் சொல்கின்றனர், அமெரிக்க வாக்காளர்கள்.