திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில், மீண்டும் வாயுக்கசிவு..!
இரண்டு வார விடுமுறைக்கு பிறகு இன்று (நவ.,04) திறக்கப்பட்ட திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில், மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டது; மாணவியர் 3 பேர் மயக்கம் அடைந்தனர்.
சென்னை திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த அக்.,25ம் தேதி, திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதால், பள்ளியில் இருந்த 45 மாணவியர் பாதிக்கப்பட்டனர். இதனால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. வாந்தி, மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு, திருவொற்றியூரில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாசு கட்டுபாட்டு வாரியம், பள்ளி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.
தீபாவளி பண்டிகை, சனி, ஞாயிறு உள்ளிட்ட தொடர் விடுமுறைக்கு பின், இன்று(நவ.,04) மீண்டும் திறக்கப்பட்டது. பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இன்று மீண்டும் திடீரென வாயு கசிவு காரணமாக, 3 மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார், தீயணைக்கும் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.