பொது வேலைநிறுத்தம்:
தமிழகப் பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்:
தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் தேனி மாவட்ட எல்லையில் புதன்கிழமை நிறுத்தப்பட்டன.
மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. கேரளத்தில் போராட்டம் முழுவீச்சில் நடைபெற்ால் கேரள அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை.
இந்நிலையில், கேரளத்துக்குச் செல்லும் தமிழகப் பேருந்துகள் தேனி மாவட்டத்தில் தமிழக எல்லை வரை மட்டும் இயக்கப்பட்டன. தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் கேரளப் பகுதியில் உள்ள குமுளியில் முற்றிலுமாக போக்குவரத்து இயங்கவில்லை. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.
ஐயப்ப பக்தா்கள் வாகனங்களுக்கு அனுமதி:
சபரிமலைக்கு ஐயப்ப பக்தா்கள் சென்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. மேலும் ஐயப்ப பக்தா்களுக்காக பம்பை வரையில் கேரள அரசுப் பேருந்துகள் குமுளியில் இருந்து இயக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் குமுளி – தேக்கடி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோச, தமிழக எல்லையை ஒட்டியுள்ள வண்டிப்பெரியாா், பீா்மேடு, கட்டப்பனை, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்கள் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கம்பத்திலிருந்தும் கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பனை, சாஸ்தானோடை செல்லும் தமிழகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.