வரி செலுத்த சமரசத் திட்டம் நீட்டிப்பு!
வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம், கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருமான வரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வரி மற்றும் கூடுதல் வரி செலுத்தி, வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம்.
ஆனால், கடுமையான வரி ஏய்ப்பு, பொருளாதார குற்றம், பயங்கரவாத நிதி உதவி, வெளிநாட்டு சொத்து குவிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இது பொருந்தாது என்றும் நேரடி வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்தத் திட்டம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்த அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.