தோண்டும் வருமான வரி அதிகாரிகள்!
தி.மு.க., பிரமுகர் உள்பட மூவர் எங்கே?
கோவையில் செல்லாத பழைய, 1000 ரூபாய் நோட்டுக்கள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்ட, தி.மு.க., பிரமுகரின் பங்களாவில், பாதாள அறைகள் உள்ளனவா என, வருமான வரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கோவை, சொக்கம்புதுாரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 52; தி.மு.க., பிரமுகர். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். ஆறு மாதங்களுக்குமுன், வடவள்ளி – தொண்டாமுத்துார் ரோட்டில் உள்ள, ஜெயலட்சுமி நகரில் ஆடம்பர சொகுசு பங்களாவை பல கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கி, ரஷீத் என்பவருக்கு ஆறு மாதங்களுக்கு முன், மாதம் 2.5 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இப்பங்களாவில் மத்திய அரசால் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.
ரகசிய அறையில் 268, பழைய 1,000 ரூபாய் நோட்டு கட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில், 100 தாள்கள் கொண்ட ஒரு கட்டின் மேற்பகுதியில் ஒரு பழைய 1,000 ரூபாய் நோட்டும், அடிப்பகுதியில், 99 வெற்று தாள்களும் இருந்தன.
மொத்தம், 2.68 லட்சம் ரூபாய் பழைய நோட்டுகளும், போலி பண பண்டல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தது உறுதியானது.
இதையடுத்து ஆனந்தன், ரஷித், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ேஷக் மற்றும் பெரோஸ் ஆகியோர் மீது, தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருத்தல், கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில், வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
நேற்று சொகுசு பங்களாவில், வருமானவரித்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமையிலான அதிகாரிகள், பாதாள ரகசிய அறைகள் ஏதும் உள்ளதா என, ஆய்வு செய்தனர். சோதனை தொடரும் என்பதால் இவ்வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.