வரலாற்றில் இன்று – 29.12.2019 – ராஜேஷ் கன்னா
இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா.
1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்து ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தை பெற்றார்.
இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் இவரை ‘இந்தித் திரையுலகின் சிவாஜி’ என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்பு நண்பரானார்.
இவர் மூன்று முறை சிறந்த நடிகருக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மேலும் 2005ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 1990-களில் சினிமாவை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார்.
இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 2012ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு, பத்ம பூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.