கலைவாணர் எனும் மாகலைஞன் – 8 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன்
8 ) தேசபக்தி: நாட்டு விடுதலையைப் பேசிய நாடகம்…
————————————
டி.கே. முத்துச்சாமிக்கும் என்.எஸ். கிருஷ்ணனுக்கும் “தேசபக்தி” – என்று பெயர் மாற்றப்பட்ட சாமிநாத சர்மாவின் “பாணபுரத்து வீரன்” – என்ற அந்த நாடகத்தில் புதுமையாக ஏதாவது சேர்க்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியிருந்தது. இருவரும் ஒருநாள் புத்தகக் கடைக்குச் சென்றார்கள். மகாத்மா காந்தியின் வரலாற்று நூலை வாங்கிவந்தார்கள். காந்தியடிகளின் கதையை வில்லிசை வடிவில் இந்த நாடகத்தில் இணைத்துப் பாடலாம் என்று கிருஷ்ணன் யோசனை சொன்னார். அன்று இரவே சாப்பாட்டை முடித்த கையோடு அமர்ந்து சண்முகமும் கிருஷ்ணனும் முழு மூச்சாக, இரவோடு இரவாக “காந்தி மகான் கதை” – வில்லுப்பாட்டுக்குத் தேவையான பாடல்களை எழுதி முடித்தார்கள்.
1931 ஆம் ஆண்டு மே மாதம் 19 அன்று டி.கே.எஸ். குழுவினரின் அந்த இலட்சிய நாடகமான தேசபக்தி அரங்கேற்றம் கண்டது. கிருஷ்ணனுக்கு இந்த நாடகத்தில் பல வேடங்கள். ஒவ்வொரு வேடத்திலும் ஒவ்வொரு விதமாக வித்தியாசங்களைச் காட்டி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார் அவர். அத்துடன் “காந்தி மகான் கதை” – என்ற தலைப்பில் அந்த நாடகத்தில் நடத்திய வில்லுப்பாட்டு பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டலைப் பெற்றது. அந்நாளில் நெல்லைச் சீமையின் கலையான வில்லிசைக் கலை நலிவடைந்து, மறைந்தே போயிருந்த நிலைமை. கலைவாணரின் புதிய முயற்சியாக இந்த “காந்தி மகான் கதை” வில்லிசை அந்தக் கலைக்கு மீண்டும் உயிர் தந்தது. மறுபடியும் வில்லுப்பாட்டுக் கச்சேரிகளை ரசிகர்கள் விரும்பத் தொடங்கினார்கள். வில்லிசைக் கலைஞர்கள் மறுவாழ்வு பெற்றார்கள்.
என்.எஸ். கிருஷ்ணன் இந்த நாடகத்தில் பல்வேறு வேடங்களை ஏற்றிருந்தார் என்று பார்த்தோம். சிஐடி வேடம் அவற்றில் ஒன்று. டி.கே. சண்முகத்துக்கு தேசபக்தனாகிய புரேசன் வேடம். புரேசன் பொதுக்கூட்ட மேடையில் பேசுவார். அதனை சிஐடி வேடத்திலிருக்கும் கிருஷ்ணன் குறிப்பெடுப்பார். புரேசன் வேடத்தில் சண்முகம் பேசப் பேச சிஐடி வேடத்தில் கிருஷ்ணனின் முகபாவம் அவரின் பேச்சிலிருக்கும் பொருளுக்கு ஏற்ப மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
புரேசன் வேடத்தில் சண்முகம் இப்படி வசனம் பேசுவார்:
“இதோ எங்கள் சொற்பொழிவைக் குறிப்பு எடுக்கிறாரே இவரும் நம் நாட்டவர்தான். நம் சகோதரர்களில் ஒருவர்தான். ஆனால், இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டில் வளர்ந்து, இந்த நாட்டு உப்பையே தின்று கொண்டிருக்கும் இந்த மனித உருவம் தன் சொந்த சகோதரர்களையே அந்நிய நாட்டானுக்குக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலைச் செய்துகொண்டிருக்கிறது. பாவம்… என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்பு.”
கிருஷ்ணனுக்கு இதைக் கேட்கக் கேட்கக் கை காலெல்லாம் பதட்டத்தில் வெடவெடவென நடுங்கும். இந்தக் காட்சியில் கிருஷ்ணனின் நடிப்பு அபாரமாக இருக்கும். ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் கரவொலி எழுப்புவார்கள்.
இன்னொரு காட்சி. அதில் கிருஷ்ணன் வெள்ளையராட்சியை ஆதரிக்கும் மிதவாதி. அவருக்கும் தீவிரவாதி சண்முகத்துக்கும் வாக்குவாதம். நீண்ட நேரம் நடக்கும் இந்த வாக்குவாதத்தின் இறுதியாக சண்முகம் மிகவும் கடுமையாக இப்படிக் கேட்பார்:
“தாய் நாட்டை அந்நியருக்குக் காட்டிக்கொடுக்கும் சண்டாளர்கள் தம் தாயை மாற்றாரிடம் கூட்டிக்கொடுக்கும் கொடுமையைச் செய்கிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?”
அந்த நாளில், அதுவும் விடுதலை இயக்கத்தில் தீவிரம் காட்டியவர்களின் கோபம் புரிந்துகொள்ளத் தக்கதாகவே இருந்தது. இந்தப் படியான கடும் சொற்கள் அவற்றின் சரியான நோக்கங்களிலிருந்து புரிந்துகொள்ளப்பட்டன. எனவே, இவற்றைச் செவிமடுப்பவர்கள் தங்களின் மனசாட்சிக்குப் பதில் சொல்ல நேர்ந்ததாக உணர்ந்தார்கள். மாறாக, இவ்வாறு கடும் சொற்களைப் பேசுவோர்மீது தனிப்பட்ட குரோதம் கொள்ளவில்லை.
இந்தக் காட்சி மிகவும் உணர்ச்சி ததும்ப அமைக்கப்பட்டிருந்தது. வெள்ளையரை ஆதரித்து நின்ற மிதவாதி கிருஷ்ணன் இந்தக் காட்சியில் சண்முகத்தின் கனல் பேச்சுக்கு தன் முகபாவத்தாலேயே பதிலுரைப்பார், எதிர்வினை புரிவார், மனம் நோவதை உணர்த்துவார். இப்படி முகபாவனை நடிப்பால் இந்தக் காட்சியிலும் ரசிகர்களை மிகக் கவர்ந்தார் என்.எஸ். கிருஷ்ணன்.
நாடகத்தின் இறுதிக் காட்சியில் கிருஷ்ணனின் தலைமையில் விடுதலைப் போராட்டப் படையொன்று மேடையில் தோன்றும். அந்தப் படையின் தளபதி கிருஷ்ணனின் கையில் மிகப் பெரியதொரு கைராட்டை இருக்கும். அதைச் சுமந்தபடி கிருஷ்ணன் வருவதைக் கண்டு ரசிகர்கள் அரங்கமே அதிரும்படி கையொலியெழுப்பி ஆரவாரம் செய்வார்கள்.
தேசபக்தி நாடகம் பெரும் வெற்றி பெற்றது. தமிழ் நாடக ரசிகர்கள் இந்த நாடகத்துக்கு அமோக வரவேற்பளித்தார்கள். மதுரை முகாமை முடித்துக்கொண்டு டி.கே.எஸ். குழுவினர் திருநெல்வேலிக்குக் கிளம்பினார்கள். நெல்லையிலும் முதல்நாள் அரங்கம் நிறைந்த காட்சியாக நாடகம் சக்கைபோடு போட்டது. தேசபக்தி நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் முதல்நாள் காட்சிக்கு வந்திருந்து, குறிப்புகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
மறுநாள் இரண்டு போலீஸ்காரர்கள் அந்தக் குழுவைத் தேடி வந்துவிட்டார்கள். நாடகத்தின் ஆசிரியரையும், கம்பெனியின் உரிமையாளரையும் காவல் ஆய்வாளர் உடனே அழைத்துவரச் சொன்னதாகச் சொன்னார்கள் அவர்கள். அப்போது டி.கே. முத்துச்சாமிதான் முகாமிலிருந்தார். எனவே, அவரும் கிருஷ்ணனும் காவல் நிலையம் சென்றார்கள்.
இன்ஸ்பெக்டர் அவர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசினார். தேசபக்தி நாடகம் தொடர்ந்து நெல்லையில் நடைபெற வேண்டுமானால் தான் சொல்கிற சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அப்படித் திருத்தங்களைச் செய்யவில்லையென்றால் அந்த நாடகம் தடை செய்யப்படும் என்றார் மிகவும் கண்டிப்புடன். அவர் நீக்கச்சொன்ன காட்சிகளைக் கேட்டு மனம் கொந்தளித்தார் கிருஷ்ணன்.
தங்களின் இலட்சிய நாடகத்தின் ஜீவனான காட்சிகளை வெட்டச் சொல்கிறதே பிரிட்டிஷ் போலீஸ்… என்ன செய்வது? இந்தக் காட்சிகளை வெட்டிவிட்டால் நாடகத்தின் ஓட்டம் கெடாதா? நாடகத்தின் நோக்கத்தில் பழுதேற்படாதா? ரசிகர்களுக்கு இது சுவைக்குமா?
இப்படியெல்லாம் கலைவாணரின் மனதினுள் கேள்விகள் எழும்பிய வண்ணமிருந்தன. போலீசுக்குக் கட்டுப்படவில்லையெனில் நாடகமே நெல்லைச் சீமையில் தடை செய்யப்படுமே என்ற கவலையும் மேலோங்கியது.
( கலைப் பயணம் தொடரும்)
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |