கைதானார் புறாகார்த்திக் வியூகம் அமைத்த போலீசார்
சென்னை, அனகாபுத்தூர் லட்சுமி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த சத்யவாணி (57) என்பவர், கடந்த 18.11.2019-ல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். சிகிச்சை காரணமாக `நான் என் மகள் வீட்டில் கடந்த ஒரு மாதமாகத் தங்கியுள்ளேன். எனது சொந்த ஊர் சேலம், தாராமங்கலம். சேலம் கலெக்டர் அலுவலகக் கருவூலத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறேன்.
18- ம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் வீட்டின் தரைதளத்தில் நான் அமர்ந்திருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வந்தார். அவர், என்னிடம் டேங்க் செக் பண்ண வந்திருப்பதாகக் கூறி மாடிக்குச் செல்லவதைப்போல் திடீரென்று என் பின்னால் வந்து கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாகச் சென்றுவிட்டார்.என்று புகார் கொடுக்க இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.
இந்தச் சம்பவத்துக்கு முன்பு 12-ம் தேதி இதே ஸ்டைலில் இன்னொரு வழிப்பறி சம்பவம், பம்மல் வ.உ.சி. நகரில் நடந்ததாக காவல் நிலையத்தில் புகார் வந்திருந்தது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட நபர் ஒரே ஆளாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது
இதையடுத்து இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையில் தனிப்படை ஒன்று அமைத்து. வழிப்பறிச் சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பிச் செல்லும் இளைஞரை சிசிடிவி மூலம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்தனர். மொத்தம் 175 சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்ததில் இளைஞர் குறித்த தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. அதன்அடிப்படையில் அனகாபுத்தூர், பாடி நகரில் சென்னை சூளையைச் சேர்ந்த கார்த்திக் என்கிற `புறா’ கார்த்திக்கை (28) போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளையும் பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், “ஒரே ஸ்டைலில் வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்ததால் குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞரைப் பிடிக்க வியூகம் அமைத்தோம். வழிப்பறி செய்யும் நகைகளை குறிப்பிட்ட அடகு கடையில் அந்த இளைஞர் விற்பதை சிசிடிவி மூலம் கண்டறிந்தோம். அடகுக் கடை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில்தான் அந்த இளைஞரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. பின்னர் அந்த இளைஞர் குறித்து விசாரித்தபோது அவர் சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி கார்த்திக் எனத் தெரியவந்தது. வேப்பேரியில் நடந்த கொலையில் கார்த்திக்கிற்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புறா கார்த்திக்கைப் பிடிக்க முடிவு செய்தபோது அவர் ஈரோட்டில் குடும்பத்தோடு தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. மேலும், புறா கார்த்திக்கிற்கு புறாக்கள், நாய்களை வளர்ப்பது என்றால் ரொம்ப பிடிக்கும் எனத் தெரியவந்தது. இதனால் நாய் ஒன்று விலைக்கு இருப்பதாகக் கூறி அவரை சென்னைக்கு வரவழைத்தோம். அதை நம்பி அவர் வந்தபோது மடக்கிப் பிடித்தோம்” என்றார்.
புறா கார்த்திக்கை குறித்து போலீஸார் சுவாரஸ்ய தகவல் ஒன்றைத் தெரிவித்தனர். “மற்ற செயின் பறிப்பு கொள்ளையர்களைப் போல அடாவடியில் புறா கார்த்திக் ஈடுபட மாட்டார். வழிப்பறி செய்வதற்கு முன் பெண்களிடம் அன்பாகவும் அக்கறையாகவும் பேசுவார். அதற்காக முகவரி, வீடு வாடகை, தொட்டியைச் சுத்தம் செய்வது என ஏதாவது ஒரு காரணத்தைக் கூறுவார். புறா கார்த்திக்கின் முகமும் அப்பாவி போல இருக்கும் என்பதால் அவர் மீது சந்தேகம் எளிதில் வராது. புறா கார்த்திக்கிடம் பேச்சுக் கொடுக்கும் பெண்கள் அசந்திருக்கும் சமயத்தில் செயினைப் பறித்து விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்” என்கின்றனர் போலீஸார்
புறா கார்த்திக் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பரங்கிமலை காவல் சரக போலீஸார் புறா கார்த்திக்கைத் தொடர்ந்து ஒரு மாதங்களாக இரவு, பகல் எனப் பாராமல் தேடி கைது செய்துள்ளனர். சென்னையில் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபடும் புறா கார்த்திக், நகைகளை விற்றுவிட்டு அடுத்த சில மணிநேரங்களில் ஈரோட்டுக்குப் பயணமாகிவிடுவார்.
இதனால்தான், அவரைப் பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் புறா கார்த்திக், தன் மனைவியிடம் தான் ஒரு திருடன் என்ற தகவல் தெரியாதளவுக்கு நடித்துவந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்ட பின்னர் புறா கார்த்திக்கின் மனைவி கைகுழந்தையுடன் கதறி அழுத தகவலும் வெளியாகியுள்ளது.