மேடை நாடகங்களில் புதுமை புகுத்திய ஆர்.எஸ். மனோகர், தமிழ் நாடக வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயம்.
நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் பிறந்த தினமின்று
தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்.இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி கொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது. அதேநேரம் சினிமாவிற்கு வந்து புகழ் பெற்றபின் பலர் நாடகங்களை மறந்துவிட்டனர். சிலர் அதனை மறைத்தார்கள்; வெகு சிலரே மறுபடியும் நாடக மேடைக்கு வந்தனர்.அப்படி நாடகத்திலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்தான் ஆர்.எஸ்.மனோகர்.
உண்மையில் இந்த சினிமா விசித்திரமானது. யாரை எங்கே எப்போது உயர்த்தும் என்பதும் அறியமுடியாது. யாரை எங்கே எப்போது தாழ்த்தும் என்றும் உணரமுடியாது. சிலர் சில வெற்றிகளை அதிர்ஷ்டம் என்பர். சிலர் அதீத திறமை என்பர். அதிர்ஷ்டமும் திறமையும் கலந்துகட்டி விளையாடும் இந்த வினோத விளையாட்டில் அடையாளம் அழிந்துபோன பல திறமைசாலிகள் உண்டு. இவருக்குப் பின்னால் இப்படி ஒரு வரலாறா என்று ஆச்சர்யப்படும் கதைகள் நிறைய உண்டு. அந்த ஆச்சர்யக் கதைகளில் ஒன்றுதான் ஆர்.எஸ்.மனோகர் என்கிற ராசிபுரம் சுப்பிரமணியன் மனோகருடையதும்.
லட்சுமி நரசிம்மன்தான் இவரது இயற்பெயர். பள்ளிக்காலங்களில் மனோகரா நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றதால் மனோகர் என்கிற அந்த நாடகப்பெயரே வாழ்நாள் முழுதும் நிலைத்தது.
காலம் முழுக்க, தான் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைத் தாங்கி வாழும் பேறு எல்லாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. அதேநேரத்தில் பெயர் எடுப்பது பெரிதில்லை. அந்த பெயரைக் காப்பாற்ற ஒரு கலைஞன் தன் வாழ்நாள் முழுக்க என்ன செய்தான் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளுதல் அவசியம். அவ்வகையில் பல தலைமுறைகள் கொண்டாடவேண்டிய அளவிற்கு சாதனைகள் செய்துவிட்டே மண்ணுலகில் இருந்து விடைபெற்றார் மனோகர்.
பட்டம் பெற்று தபால் துறையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த மனோகர், தயாரிப்பாளர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி தயவில், 1951இல் ராஜாம்பாள் படத்தின் கதாநாயகன் வேடம் பெற்றார். அதன்பின்னர் நிறைய படங்களில் நடித்தாலும்கூட, 1959இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸின் வண்ணக்கிளிதான் மனோகரின் பெயர் சொல்லும் சித்திரமாக விளங்கியது. பிரேம் நசீர் போன்ற நடிகர் நடித்த ஒரு படத்தில், மற்ற எல்லோரையும் தாண்டி ஒருவர் ஜொலிப்பது சாதாரண காரியமில்லை. பூச்சி என்ற பெயர் கொண்ட அந்த ரவுடி வேடத்தில் அட்டகாசமாக பொருந்திப்போனார் மனோகர்.
“அடிக்கிற கைதான் அணைக்கும்..” பாடலின் மிகப்பெரிய வெற்றிக்கு மனோகரும் ஒரு காரணம். மொத்தப் படத்தையும் தன் தோள்களில் சுமந்த மனோகர், தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் 18 படங்களில் தொடர்ந்து நடித்தவர் என்கிற பெருமையைப் பெற்றார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் இந்த சாதனையைச் செய்தவர் யாருமே இல்லை.
பிச்சுவா பக்கிரி என்ற பெயரை நீங்கள் தமிழ் சினிமாவில் பலமுறை கேட்டிருப்பீர்கள். அந்த பெயரைத்தாங்கி முதன்முதலில் திரையில் தோன்றியவர் ஆர்.எஸ்.மனோகர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? வல்லவனுக்கு வல்லவன் என்கிற மாடர்ன் தியேட்டர்ஸின் நூறாவது படத்தில்தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடந்தார். சொல்லப்போனால் அந்தப்படத்தின் நாயகனாக நடித்த அசோகனை விட, மிகவும் பலமான கதாபாத்திரம் மனோகருக்கு அமைந்தது. சுந்தரம் அவர்களின் அன்பிற்கு பாத்திரமான மனிதராக மனோகர் மீண்டும் ஒருமுறை உயர்ந்த தருணம் அது.
மாடர்ன் தியேட்டர்ஸ் எந்த அளவிற்கு மனோகரை உயர்த்தியது என்பதை வரிசையாக வெளிவந்த படங்களின் மூலமே அறியலாம். ஜெய்சங்கர் சி.ஐ.டி வேடத்தில் முதன்முதலில் நடித்து, தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்கிற பட்டம் பெற காரணமாக அமைந்த வல்லவன் ஒருவன் படத்தில் மெயின் வில்லன் ஆர்.எஸ்.மனோகர். மிக பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற இதைத் தொடர்ந்து வந்த இரு வல்லவர்களில் அதே ஜெய்சங்கர், அதே மனோகர், அதே மாடர்ன் தியேட்டர்ஸ். இதுவும் வெற்றி. ஆக வல்லவன் சீரிஸில் வெளிவந்த மூன்றுமே வெற்றி. மூன்றிலும் இருந்த ஒரே ஆள் மனோகர் மட்டுமே. எப்படி எம்ஜிஆர்-சிவாஜி கோலோச்சுகையில் ஜெய்சங்கர் தனி ஆவர்த்தனம் நடத்தினாரோ, அப்படிதான் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் கோலோச்சியபோது அங்கே மாடர்ன் தியேட்டர்ஸ் தயவில் மனோகர் தனக்கான பாதையை வகுத்துக்கொண்டிருந்தார்.
ஆனால் உண்மையில் இவரது திறமையை தமிழ்த் திரையுலகம் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டதா என்று கேட்டால் அதற்கான உண்மையான பதில் இல்லை என்பதே! இங்க மேற்குறிப்பிட்ட படங்களை தவிர பெரிய வேடங்கள் மனோகருக்கு தொடர்ந்து கிடைக்கவில்லை. கிடைத்த வேடமெல்லாம்,”எஸ் பாஸ்..ஓகே பாஸ்..” வகையறா அடியாள் வேடங்களும், மொட்ட பாஸ் வகையறா மொக்க சண்டைக்காட்சிகளில் அடிவாங்கும் கதாபாத்திரங்களுமே. ஆனால் அதற்கு நடுவிலும் கூட தன்னால் முடிந்தளவு வில்லத்தனங்களை இவர் செய்துகொண்டுதான் இருந்தார். உண்மையில் நாம் மனோகரை கொண்டாட வேண்டியதன் காரணம் மேடை நாடக உலகிற்கு அவர் செய்த தொண்டுகளுக்காகத்தான். “நாடகக் காவலர்” என்ற பட்டம் பெறும் அளவிற்கு இவர் திறமையும் சிறப்பும் கொண்டிருந்தார் என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ் நாடக உலகின் மிக முக்கியமான ஆளுமையான நவாப் ராஜமாணிக்கத்தின் காலத்திற்கு பிறகு, அந்நாடக மேடையை அலங்கரித்த பல சரித்திரம் வாய்ந்த நிகழ்வுகளுக்கு சொந்தக்காரராக மனோகர் விளங்கினார். ஆயிரத்துக்கும் அதிகமான மேடைகள் கண்ட இலங்கேஸ்வரன் நாடகம் அதற்கு மிகப்பெரிய உதாரணம். ராவணனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம்,மேடையேற்றப்பட்ட இடங்களில் எல்லாம் பெரும்வெற்றி பெற்றது. இதுபோக சாணக்கியன் சபதம், சிசுபாலன், சூரபத்மன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன், திருநாவுக்கரசர் என இவர் தந்த நாடகங்கள் அநேகம். இவரது 31 நாடகங்கள் எட்டாயிரத்துக்கும் அதிகமான முறை மேடை ஏறியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நாடகங்கள் புராண, இதிகாசங்களில் வில்லனாக அறியப்பட்ட கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அமையப்பட்டதுதான். இதன்மூலம் சினிமாவில் செய்யமுடியாத வில்லன் வேடங்களை மனோகர் அவர்கள் மேடையில் செய்து தன் தாகம் தீர்த்துக்கொண்டார் என்று கூறலாம்.
இவரது நாடகங்கள் வெறும் புராண, இதிகாச கதைகளின் தொகுப்பு என்பதோடு முடிந்துவிடவில்லை. மேடை நாடகங்களில் தமிழில் அதுவரை பலரும் காணாத தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதில்தான் மனோகர் உயர்ந்து நிற்கிறார். டிராமாஸ்கோப் என்கிற புதுவித உ்ததியை ஸ்டிரியோபோனிக் ஒலி நுட்பத்தோடு மேடையில் அறிமுகப்படுத்தினார். அதுபோக, முன்னரெல்லாம் ஒரு காட்சி முடிந்து மறுகாட்சி தொடங்குவதற்கோ அல்லது ஒரு பின்னணி திரையிலிருந்து இன்னொரு திரைக்கு மாற்றுவதற்கோ மேடை நாடகங்களில் சற்று நேரம் பிடிக்கும். அதையும் உடைத்து மைக்ரோ நொடிகளில் காட்சிகளை மாற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். அதேபோல் போர்க் காட்சிகளில் ஸ்பெஷல் எபெக்ட்ஸிற்காக வாணவேடிக்கை போன்ற விஷயங்களை மேடையிலேயே நிகழ்த்திக் காட்டி பார்வையாளர்களை அசத்தினார்.
இந்த தொழில்நுட்பங்கள் இன்றைய காலகட்டங்களில் மிக எளிதாக எல்லோராலும் செய்யப்படக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால் மேற்கண்ட வித்தைகளை எல்லாம் 1960-களில் மனோகர் செய்துகாட்டினார் என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாயிருப்பார் மனோகர். ஆனால் அந்த படத்திற்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட் தேதிகள் எக்கணமும் நாடகத்திற்காக ஒதுக்கப்பட்ட தேதிகளோடு மோதாமல் பார்த்துக்கொள்வார். அப்படி ஏதேனும் நிலை வந்தால், இவர் நாடகத்தை கேன்சல் செய்யமாட்டார். திரைப்படத்தில் நடிப்பதைத்தான் கேன்சல் செய்வார். அந்தளவிற்கு நாடகத்தை நேசித்தவர் இவர். என்னதான் நாடகம் உயிராக இருந்தாலும் கூட அதன்மூலம் கிடைக்கும் வருமானம் அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. அதிலும் சினிமா கோலோச்ச தொடங்கிய பிறகு பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைய தொடங்கியது. அதனால் தொடர்ந்து சினிமாவில் நடித்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு மனோகர் தள்ளப்பட்டார். அதனாலேயே கிடைத்த எல்லா சிறு வேடங்களையும் கூட மனதார ஏற்றுக்கொண்டார். அந்த பணத்தின் மூலம் நாடகம் போடுவதை தனது வழக்கமாக மாற்றிக்கொண்டார்.
இன்னுமோர் ஆச்சரியமான விஷயம் சொல்கிறேன். இலங்கேஸ்வரன் நாடகத்தின்படி, சீதை, ராவணனின் மகள் என்ற ஒரு கூற்றை முன்வைத்திருப்பார் ஆர்.எஸ்.மனோகர். இதைப் பலரும் ஏற்றுக்கொள்ளாததால் பல இடங்களில் பெரும் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டி இருந்தது. பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் தலையிட்டு, மனோகரின் இந்த கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்று கருத்து தெரிவித்த பின்னரே சலசலப்பு அடங்கியது. அந்தளவிற்கு புராண, இதிகாசங்களின் பல வடிவங்களை படித்து அதிலிருந்து தனது நாடகத்திற்கான திரைக்கதையை எழுதினார். 81 வயது வரை வாழ்ந்த இந்த நாடகக்காவலர், தமிழ்ச் சமூகத்தில் தோன்றிய ஜாம்பவான்களில் ஒருவர், சினிமாவையும், மேடை நாடகத்தையும் இறுதிவரை ஒரே கண்ணாகக் கண்ட மனிதர் ஆர்.எஸ்.மனோகர் அவர்கள். வழக்கம்போல் இந்த பெருமைகள் எல்லாம் மண்ணோடு புதைந்து மக்கிப்போனதுதான் காவிய சோகம்.
வில்லாதி வில்லன் – எதிர்நாயகன் ஆர்.எஸ். மனோகர்
நரகாசுரனாக இவர் நடித்த நாடகம் ஒன்றைப் பார்த்த ஜெமினி கணேசன், “மனோகர்.. நரகாசுரன் கெட்டவன் என்பதை நான் அறிவேன். அவன் கொல்லப்பட வேண்டியவன் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும் கூட போர்க்களத்தில் நீ நரகாசுரனாக நின்று கொண்டிருக்கிறாய். உன்னை வீழ்த்த எதிரில் கிருஷ்ணன் நிற்கிறான். எல்லாமே தர்மத்திற்கு உட்பட்டதுதான். ஆனால் நரகாசுரனாகிய உன் மரணத்தை தாங்கும் சக்தி இல்லாது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அந்தளவிற்கு உன் நடிப்பால் நரகாசுரனை எனக்குள் ஏற்றி வைத்திருந்தாய். நீ பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினாராம்.
வில்லன்களையே நாயகனாக்கி, மேடை நாடகங்களில் புதுமை புகுத்திய ஆர்.எஸ். மனோகர், தமிழ் நாடக வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயம்.
by The Deak of கட்டிங் கண்ணையா!