மாணவன் எடுத்த விபரீத முடிவு!

 மாணவன் எடுத்த விபரீத முடிவு!

‘தோட்டத்திற்கு போன பெற்றோர்’… ‘தனியாக இருந்த 10- வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு’… ‘சிக்கிய உருக்கமான கடிதம்’!

 

    தன்னிடம் டியூசன் படிக்க வராததால் ஆசிரியர் கண்டித்ததாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, தொட்டப்ப நாயக்கனுாரைச் சேர்ந்தவர்கள் சிங்கம் – அமுதா தம்பதியினர். இவர்களது மகன் பாலாஜி (15). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவர் பாலாஜி, யாரிடமும் பேசாமல் இருந்தாகக் கூறப்படுகிறது. அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று, பெற்றோர் தோட்டத்திற்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த பாலாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய பெற்றோர், தங்களது மகன் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து கதறித் துடித்தனர்.

    இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார், பாலாஜியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மாணவர் பாலாஜி பள்ளி நோட்டில் எழுதிவைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், ‘தன்னுடைய சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணமென்றும், அவன் கொடுமை தாங்காமல் இம்முடிவை எடுத்ததாகவும், அவனுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டுமென்றும், அனைவருக்கும் இறுதி வணக்கம்’ என்றும் மாணவர் பாலாஜி எழுதி இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். 

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர் பாலாஜி படித்து வந்த பள்ளியில், கணித ஆசிரியரான ரவி, தனியாக டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவரது டியூசன் சென்டரில், கடந்த வருடம் 9-ம் வகுப்பு படித்தபோது மாணவர் பாலாஜி படித்து வந்தநிலையில், இந்த வருடம் 10-வகுப்பு என்பதால், வேறொரு  டியூசன் சென்டருக்கு சென்று படித்துள்ளார். இதனால் மாணவர் பாலாஜி மீது ஆசிரியர் ரவி கடும் கோபத்தில் இருந்ததாகவும், அடிக்கடி ஏதேனும் காரணத்தைக் கூறி, வகுப்பில் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

   இது குறித்து வீட்டில் தெரிவித்தபோது, அவரை சமாதானப்படுத்தி பெற்றோர் பள்ளிக்கு அனுப்பிவைத்ததாகத் தெரிகிறது. கடந்த 6 மாதங்களாகவே இந்தப் பிரச்சனை தொடர்ந்த நிலையில், சனிக்கிழமை அன்று கணித பாடவேளையில் ஆசிரியர் ரவி வகுப்பறைக்கு வந்ததும், பாலாஜியை கோபத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் ரவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...