சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடைப்பெற்ற “மலர்வனம்” விருதுகள் வழங்கும் விழாவின் சிறப்பம்சங்கள்

 சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடைப்பெற்ற “மலர்வனம்” விருதுகள் வழங்கும் விழாவின் சிறப்பம்சங்கள்

சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நேற்று மாலை நடைபெற்ற மலர்வனம் விருதுகள் வழங்கும் விழா” நடைபெற்றது. பாட்டும் பரதமும், மலர்வனம் போன்ற இரு பத்திரிக்கைகளின் ஆசிரியர். குறித்த நேரத்தில் துவங்கி சுவையான உணவுடனும், செவிக்கு விருந்தாகவும் இருந்தது நிகழ்வு.

விருதுகள் வழங்கப்படுவதற்கான தேர்வுகள் அனைத்தும் வெகு பொருத்தமாகவே இருந்தது. அனைத்து பெண்மணிகளும் பல்வேறு துறையில் மகுடமாய் பளிச்சிடுபவர்கள். ராமகிருஷ்ணன்-சீதாம்மா இருவரின் பெயர் பொருத்தம் போலவே மேடையிலும், அத்தனை அழகாக, அன்பாக உபசரித்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தினார்கள். அதிலும் முக்கியமாக டாக்டர். சுருதி பிரகாஷ் அவர்களின் அன்னையுடன் சேர்ந்து பாடிய பாடல் அரங்கத்தையே பக்தியில் ஆழ்த்தியது. இயக்குநர் மணிபாரதி அவர்களின் கரடி கதை சந்தோஷ சலலசப்பை ஏற்படுத்தியது.

சுழன்று சுழன்று புகைப்படம் எடுத்த நானா எத்தனை பெரிய காரியம் செய்து அமைதியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் என்பதை மேடையில் அறிவிக்க கரகோஷம் அதிகரித்தது. உரத்தசிந்த​னை உதயம்ராம். விஜிகிருஷ்ணன்,திவன்யா, நண்பர் கணேஷ்பாலா, என்.சி.மோகன்தாஸ், சரோஜா சகாதேவன், என்று எத்தனையோ விவிஐபிக்கள் கலந்து கொண்ட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மகிழ்வளித்தது.

சிறப்பு விருந்தினர் லதா சரவணன் அவர்களுக்கு முதல் மரியாதை…. நினைவுப்பரிசும்..சான்றிதழும்… வருகைக்கு மிக்க நன்றி லதா அவர்களே,,, வாழ்க பல்லாண்டு.

சிறப்பு விருந்தினர் டாக்டர் ஸ்ருதி ப்ரஷாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம்… சிறிய நினைவுப் பரிசுடன்…

மலர்வனம் சாதனை மகளிர் விருது விழாவை அழகாக தொகுத்து வழங்கிய உமா பிரேம்….மிக்க நன்றி உமா அவர்களே,…

மலர்வனம் கோல அரசி விருது ராதா கல்யாணராமன் இவருக்கு சிறுவயதில் கோலம் போட சொல்லி கொடுத்து, ஊக்கிவித்தவர், இவரது தந்தையாம். இவரது ஊரில் தொடர்ந்து பல கோல போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான விருதுகளை பெற்றுவந்த இவரை ஒரு கட்டத்தில் கோல போட்டிகளுக்கு ஜட்ஜ்ஜாக ஆக்கிவிட்டார்கள். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் கோலங்கள், ரங்கவல்லி, கோலம் என்தூசியேஸ் மற்றும் கோல ஜாலங்கள் போன்ற ஆன்லைன் வாட்ஸப் குரூப்களில் இணைந்து தனது கோலங்களை அவற்றில் பதிவேற்றம் செய்வது மட்டுமின்றி, மற்றவர்களின் கோலங்களையும் ரசித்து மேலும் தன் கோலத்திறமையை மேலும் வளர்த்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் வெள்ளிக்கிழமை அம்பாள் தங்க ரதத்தின் முன் மிக பிரம்மாண்டமான மா கோலம் போட்டு அசத்திவருகிறார். மயிலாப்பூர் கோலப் போட்டி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தி ஹிண்டு மற்றும் தீபம் எண்ணெய், முகி ஹோம் கேர் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளார். இவருக்கு மலர்வனம் கோல அரசி விருது அளித்து வாழ்த்துகிறது.

மலர்வனம் சிறந்த புகைப்பட கலைஞர் விருது காயத்ரி சுந்தரகந்தன் இவர் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர். கடந்த 13 ஆண்டு காலமாக சுயமாக கற்றுக்கொண்டு இயற்கை, காட்டுயிர், கோயில் மற்றும் நடன புகைப்படங்கள் எடுத்து வருகிறார். கடந்த 9 வருடங்களாக போட்டோ கிராபிக் சொசைட்டி ஆப் மெட்ராஸ் கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளார். இவரது புகைப்படங்கள் பல பிரபல பத்திரிகைகள் மற்றும் மாத இதழ்களில் வெளிவந்திருக்கிறது. இவரது புகைப்படங்கள் பல போட்டோ கண்காட்சிகளில் வைக்கப்பட்டு பாராட்டு பெற்றுவருகிறது. மலர்வனம் இவருக்கு சிறந்த புகைப்பட கலைஞர் விருது அளித்து பாராட்டுகிறது.

மலர்வனம் சாதனை மகளிர் விருது விழாவில் எழுத்தாளர் வெ. தயாளன் அவர்களை கௌரவித்த​போது..

வாழ்த்துரையை சிறப்பாக ஆற்றி பலத்த கைதட்டலைப் பெற்ற கவிஞர் இராஜகுமார்.

மலர்வனம் சிறந்த மொழிபெயர்பாளர் விருது ஸ்நேஹா நாராயணசுவாமி ஸ்நேஹா திரைப்பட பின்னணிப் பாடகி மற்றும் வேற்று மொழி பெயர்பாளர். 8 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசை கற்ற இவர், இசையில் நிறைய வொகேஷனல் கோர்ஸ் செய்துள்ளார். இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கொரிய மொழிகளில் பாடுவதில் வல்லவர். மற்ற மொழிகளின் மீது ஆர்வமிக்க இவர், கொரிய மொழியை கற்பிக்கும் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்றவர். தற்போது கொரிய மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். கொரியாவிலிருந்து சென்னைக்கு வரும் கொரிய தொழில் அதிபர்களுக்கு கொரிய மொழிப்பெயர்பாளராக பணிசெய்து, கொரிய தொழிலதிபர்களுக்கும் இங்கு நிறுவனத்தில் பணியாற்றிவரும் இந்தியர்களுக்கிடையேயான மொழித் தடையை உடைக்க இவர் உதவுகிறார். இவருக்கு பல மொழிகள் தெரிந்திருப்பதால், நிறுவனத்தில் பணியாற்றிவரும் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடம் சுலபமாக உரையாடி பிஸினஸ் மீட்டிங்கில் மொழி தெரியாதவர்களுக்கு மொழிபெயர்பாளராக பணி செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் சென்னையில் நடைபெறும் பல கொரிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு கொரிய பாடல்களைப் பாடி அசத்தி வருகிறார். இவருக்கு மலர்வனம் சிறந்த மொழிபெயர்பாளர் விருது அளித்து பாராட்டுகிறது ஸ்நேகா நாராயசுவாமி பாடியும் அசத்தினார்.

வாழ்த்துரை வழங்கிய மடிப்பாக்கம் வெங்கட் அவர்களுக்கு மலர்வனம் சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்திய உதயம் ராம்.

மலர்வனம் சிறந்த பத்திரிக்கை எழுத்தாளர் தனுஜா ஜெயராமன் கொரானா காலகட்டத்தில் முழு நேரமாக சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், தொடர்கள் என பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்த இவர் கல்கியில் ஆன்லைன் செய்திப்பிரிவில் கன்டன்ட் ரைட்டராக அனுபவம் பெற்றவர். குங்குமம், தோழி , குமுதம் ஸ்நேகிதி , தினகரன் மகளிர் மலர், மின்மினி போன்ற பத்திரிக்கைக்காக பலரையும் நேர்காணல் செய்துள்ளார். அமேசான் கிண்டிலில் நகைச்சுவை‘ சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். கல்கியில் அரசியல், சமூக, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சினிமா சார்ந்த செய்திகளை எழுதியுள்ளார்.. குமுதம் பக்தி ஸ்பெஷல், கல்கி தீபம், குங்குமம் தோழி இதழ்களில் பக்தி கட்டுரைகள் மட்டுமின்றி பல மின் இணைய இதழ்களில் எழுதி வருகிறார். எழுத்தார்வம் மிக்க இவருக்கு மலர்வனம் சிறந்த பத்திரிக்கை எழுத்தாளர் விருது வழங்கி ஊக்குவிக்கிறது.

மலர்வனம் சாதனை மகளிர் விருது விழாவில் கலந்து கொண்டு ரசித்தவர்கள்

வைஷ்ணவி ராமதாஸ் இன்று மருத்துவ துறையில் நவீன, அபார வளர்ச்சி நாம் அறிந்ததே. முதியோரின் கடைநாட்களை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்ற, அவர்தம் செவித்திறனை எவ்வாறு மேம்படுத்துவது? இந்த எண்ணங்களை கருவாகக்கொண்டு ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் தமது ஆராய்ச்சியை திருமதி வைஷ்ணவி ராமதாஸ் துவங்கினார். இசையானது செவிவழி கேள்வித்திறன், உணர்தல் மற்றும் மீட்டெடுக்கும் திறன்களை மீண்டும் மேம் படுத்துகிறது – என்பது அவரது ஆரம்பநிலை கண்டுபிடிப்புகளில் ஊர்ஜிதம் செய்யப்பட்டு பன்னாட்டு ஆய்விதழில் பதிப்பேறி உள்ளது. இவர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பேச்சு,மொழி மற்றும் கேட்பியல் துறையில் இளங்கலைப் பட்டம் (BASLP) பெற்றார். முதுகலை பட்டப்படிப்பை பெங்களூரில் தொடர்ந்த இவர் இரண்டிலும் தங்கப் பதக்கத்துடன் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்று தேர்ந்தவர். 6 வயதில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அவர் ஒரு சிறந்த கர்நாடக இசைப் பாடகர் மற்றும் பெங்களூரு அகில இந்திய வானொலியின் கலைஞர் ஆவார். திருமதி வைஷ்ணவிக்கு சமீபத்தில் சென்னை சுஸ்வரா டிரஸ்ட் மூலம் யுவ சங்கீத கலா ஜோதி என்ற பட்டம் வழங்கப்பட்டது, முதியவர்களுக்கு இயல்வாகவே நாளாவட்டத்தில் பாதிப்படையும் செவித்திறன், உணர்தல் மற்றும் மீட்டெடுப்பு திறன்களை மேம்படுத்துவதற்கு ஒரு ஊடகமாக இசையைப் பயன்படுத்துவதற்கான அவரது இந்த முயற்சி முதியோரின் கடைசி நாட்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழித்தோன்றல் முயற்சியாக அமையும் என்பது உறுதி. இவரது இந்த வித்யாசமான முயற்சிக்கு கேவி நாராயணனின் நினைவாக மலர்வனம் செவிநுகர் இசைமணி விருது பாராட்டுகிறது.

மலர்வனம் சிறந்த எழுத்தாளர் விருது இராஜலட்சுமி பிரபாகரன் குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர் அகவை ஐம்பதுக்குப் பிறகு எழுதுவதில் அவருக்குள் இருந்த திறமையை கண்டு கொண்டு முழுநேர எழுத்துப் பணியை கையில் எடுத்துள்ளார். இவர் நூலாசிரியர், கவிஞர், திரைக்கதை மற்றும் வசனகர்த்தா, திரைப்பட பாடலாசிரியர், மொழியாக்க நிபுணர், உள்ளடக்க எழுத்தாளர் என்று பல்வேறு தமிழ் எழுத்துசார் தளங்களில் இயங்கி வருகிறார். இவர் எழுதிய ஒரு சரித்திர நாவல் மற்றும் ஒரு சமூக நாவல் புத்தகமாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரின் மேடை நாடகம் மின்மினி இதழில் தொடராக வெளிவந்தது. மலர்வனம், வாங்க பேசலாம், கொலுசு, ஆதிரை ஆகிய இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் பல வெளி வந்துள்ளன. உதிரிகள் இலக்கிய இதழ் நடத்திய சிறுகதை போட்டி 2023 -ல் இவரது “பேய்க்கொம்பன்” பரிசு பெற்றுள்ளது. இவரது புதிய படைப்புகள் பல விருதுகளைப் பெற வாழ்த்தி, எழுத்தாளர் குட்டிபாலாவின் தாய் தர்மாம்பாள் சார்பாக, இவருக்கு மலர்வனம் சிறந்த எழுத்தாளர் விருது அளித்து பாராட்டுகிறது.

மலர்வனம் வெற்றிக்கு முக்கிய காரணமான வடிவமைப்பாளர் கிருஷ்ணகுமார் அவர்களை பாராட்டிய உதயம் ராம் அவர்கள்.

அருமையான வாழ்த்துரை வழங்கி என்சி மோகன்தாஸ் அவர்கள்

மலர்வனம் சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது காம்கேர் கே. புவனேஸ்வரி காம்கேர் கே. புவனேஸ்வரி, காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐ.டி நிறுவனத்தின் CEO, Ai- ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பன்முக சாதனையாளர். இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் இவர் அசத்தும் Ai – Part1 , அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு நூல்களை வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார்.. இதுவரை 250 நூல்களுக்கும் மேல் எழுதியுள்ள இவர் தன் நிறுவனம் தொடங்கிய 1992 முதல் இன்று வரை தனது நிறுவனத்தில் தயாரிக்கும் சாஃப்ட்வேர்கள் மூலம் தனக்குக் கிடைக்கும் அனுபவங்களை எல்லாம் அந்தந்த காலகட்டதிலேயே நூல்களாகவும், ஆடியோ வீடியோ படைப்புகளாகவும், கருத்தரங்குகள் வாயிலாக நேரடியாகவும் இந்த சமுதாயத்துக்குக் கொண்டு செல்வதால் தனது நூல்களை ‘சமுதாயத்தின் தொழில்நுட்ப டைரி’ என பெருமையுடன் குறிப்பிடுகிறார். இவருக்கு மலர்வனம் சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது கொடுத்து கௌரவிக்கிறது.

மலர்வனம் சிறந்த வளரும் தொழிலதிபர் விருது அக்சயா கிருஷ்ணகுமார் அக்சயா  அதிக சம்பளம் தரும் கார்ப்ரேட் நிறுவன வேலையை உதரி விட்டு, சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு HAPPY PIQUE என்ற நிறுவனத்தை துவக்கினார். பல வணிக நுட்பங்களை தானாகவே கற்று, முழு முயற்சியோடு முன்னேறி இன்று HAPPY PIQUE என்பது ஒரு பிரபல BRAND NAME என பெயர் பெற்றுள்ளது. அனைத்து பெண்களையும் கவரக்கூடிய அழகிய artificial jewelleries. return gifts and accessories போன்றவற்றை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறார். இவர் புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வமிக்கவர். மலர்வனம் இவருக்கு சிறந்த வளரும் தொழிலதிபர் விருது அளித்து வாழ்த்துகிறது.

மலர்வனம் ரத்ன கமலம் விருதுகதக் நிருத்ய & பரத நாட்டியம் லட்சுமி கண்ணன் ஜதீஸ்வரலயா நடனப் பள்ளியின் கலை இயக்குனரான இவர் கடந்த 27 வருடங்களாக கதக் மற்றும் பரத சங்கீத் பிரபாகர் விருது பெற்றவர். கதக்கில் இளங்கலை பட்டம் மற்றும் பரத நடனத்தில் பட்டம் பெற்றவர். இவரின் தன்னலமற்ற கதக் நிருத்ய & பரத நாட்டிய கலைச் சேவைக்காக மலர்வனம் ரத்ன கமலம் விருது வழங்கி கௌரவிக்கிறது.

                                                                      சிறப்பு விருந்தினர்கள்

மலர்வனம் ரத்ன கமலம் விருதுபரத நாட்டியம் அகிலா சத்தியநாராயணன் தஞ்சாவூர் பாணியில் பரதக்கலையை இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவிலும் கடந்த 40 வருடங்களாக வளர்த்துவருகிறார். தன் அன்னை ரங்கநாயகியிடம் முதன் முதலில் நடனத்தை கற்றுக் கொண்டார். 1978ல் ஆர் ஆர் மால்னி ஆர்ட்ஸை துவக்கி, ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். 3000 சலங்கைபூஜைகள் மற்றும் 388 அரங்கேற்றங்களை நடத்தியவர். முதியவர்களுக்கும், மனநலம் குன்றிவர்களுக்கும் இந்த நாட்டிய கலையை கற்றுக் கொடுத்துவருகிறார். அமெரிக்காவில் இவரது மகளும் நடனபள்ளியை நடத்திவருகிறார். தன் மகளுடன் இணைந்து ஆர்ட் அண்டு அனாடமி என்ற தலைப்பில் ஒரு workout பயிற்சியை லாரன்ஸ் பல்கலைக் கழகத்தில் துவக்கியவர். பல நாட்டிய நாடகங்களுக்கு நடன வடிவமைப்பு செய்துள்ளார். இவரின் பரத நாட்டிய கலை சேவையைப் பாராட்டி மலர்வனம் ரத்ன கமலம் விருது வழங்கி கௌரவிக்கிறது.

மலர்வனம் சிறந்த மருத்துவ சேவை ஆர்வலர் விருது டாக்டர் ஆர். நித்யஸ்ரீ அக்குபஞ்சர் மற்றும் எலெக்ட்ரோ ஓமியோபதிக் மெடிசின்ஸ் மருத்துவர். எளிய, வலியில்லாத மற்றும் குறைந்த செலவில் சிகிச்சை அளித்து வருகிறார். சைக்காலஜி மற்றும் மலர் மருத்துவத்திலும் நிபுணர். சிறுநீரக்கற்கள், தைராய்டு, கொளஸ்ட்ரால், டயாபெடிக்ஸ், வீஸிங், கார்டியாக் பிரச்சனைகள் போன்ற ஏராளமான நோய்களுக்கு இவர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து வருகிறார். பல இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மருத்துவ முகாம்கள் மூலம் இவரது துறை சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஏராளமானவர்களுக்கு இலவச ஆலோசனைகளையும் வழங்கி சமூக சேவையில் ஈடுபட்டுவருவது பாராட்டத்தக்கது. இவரது சிறந்த சேவைக்கு மலர்வனம் சிறந்த மருத்துவ சேவை ஆர்வலர் விருது வழங்கி வாழ்த்துகிறது.

மலர்வனம் சார்பாக சிறப்பாக, சுவைபட நன்றியுரை வழங்கிய அன்பு சகோ டி எஸ் ஸ்ரீதரன்….

மலர்வனம் சிறந்த உடற்கல்வி ஆர்வலர் விருது ஜி. மஹதேஸ்வரி

மலர்வனம் இசைச்சேவை திலகம் விருது டாக்டர். ஜி. ராஜலட்சுமி

மலர்வனம் சிறந்த பட்டையக் கணக்காளர் & வரி ஆலோசகர் விருது திவ்யா அபிஷேக் அவர்களுக்கு இளம் வயதிலேயே CMA பட்டம் பெற்று சாதனைபடைத்தவர். SIRC ICA of Indiaவின் தலைவியாகவும் பதவி வகித்துவருகிறார். 1,050 நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும் பங்கு கொண்டுள்ளார். Social Stock Exchange என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் சுதந்திர போராட்ட வீரரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர். மலர்வனம் சிறந்த பட்டையக் கணக்காளர் & வரி ஆலோசகர் விருது அளித்து கௌரவிக்கிறது.

இயக்குநர் மணிபாரதி விஜிகிருஷ்ணன் அவர்கள்

சரோஜா சகாதேவன்                                                    
வடிவமைப்பாளர் கணேஷ்பாலா
தோழி திவன்யா                         

மலர்வனம் விருதுகள் வழங்கும் விழா”  இவ்வாறாக இனிதே துவங்கி பல இனிய நினைவுகளை உள்ளக்கிடக்கையில் பதிந்து அன்றைய மாலைப் பொழுதை மனதிற்கினியதாய் மலர்வனம் எனும் மலர் மலரச் செய்தது .

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...