டென்னிஸில் இன்னொரு சானியா!
டென்னிஸில் இன்னொரு சானியா!
இறகுப் பந்தாட்டத்தில் சர்வதேச அளவில் ஆட்சி செய்யும் வீராங்கனைகள் பி. வி. சிந்து, சாய்னா நேவால் போன்று இந்திய டென்னிஸ் ஆட்டத்தில் சானியா மிர்ஸாவுக்குப் பிறகு வீராங்கனைகள் யாரும் பிரபலமாகவில்லை என்ற குறை இருந்தது. அந்தக் குறையை தீர்த்து வைக்க வந்திருப்பவர் கார்மன் தாண்டி. 21 வயது டென்னிஸ் வீராங்கனை. டென்னிஸ் ஆட்டத்திற்காக வெளிநாடுகள் சென்று வெற்றிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் கார்மன் வளரும் சானியா மிர்ஸா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். ஒற்றையர், இரட்டையர் ஆட்டத்தில் பங்கு பெற்றிருக்கும் கார்மன், டென்னிûஸ சிறுவயதிலிருந்து ஆடத் தொடங்கியவர். இளையோர் பிரிவில் சர்வதேச போட்டிகளில் கார்மன் பங்கெடுத்துள்ளார்.
“உடல் பயிற்சிக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் டென்னிஸ் ஆடத் தொடங்கினேன். இப்போது போட்டிகளில் பங்கெடுக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்… இருபதாவது வயதில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடத்திய நான்கு போட்டிகளில் முதலாவதாக வந்துள்ளேன். சென்ற ஆண்டு ஹாங்காங்கில் நடந்த போட்டியில் இருபத்தைந்தாயிரம் டாலர்கள் பரிசுத் தொகையாகப் பெற்றேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒற்றையர் ஆட்டத்தில் உலகத் தர வரிசைப் பட்டியலில் 196 -ஆவது இடத்திலும், இரட்டையர் பிரிவில் 180 -ஆவது இடத்திலும் நிற்கிறேன். இந்திய ஒற்றையர் தர வரிசையில் நான் மூன்றாவது இடத்தில்.
டென்னிஸில் எனது கனவு வீராங்கனைகள் மரியா ஷரப்போவா, செரினா வில்லியம்ஸ். ஆண் ஆட்டக்காரர்களில் சுமித் நாகல் பிடிக்கும். என்னை வளரும் சானியா என்கிறார்கள். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது சாதனைகளைச் செய்வதுடன் அதனையும் தாண்டி ஒற்றையர் ஆட்டத்தில் சாதனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் “வளரும் சானியா’ என்ற பதம் அர்த்தம் உள்ளதாகும்.
டென்னிஸில் எனக்கு விராட் கோலி, மகேஷ் பூபதி தங்கள் அறக்கட்டளை மூலம் நிதி உதவி செய்கிறார்கள். உலகத்தரத்தில் முதல் 200 பேர்களுக்குள் வருவது சிரமம். நான் முதல் 200-க்குள் வரும் பெருமையைப் பெற்றுவிட்டேன். முதல் நூறுக்குள் வர வேண்டும் என்பதுதான் லட்சியம்…” என்கிறார் கார்மன்.