கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை!

 கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை!

கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை!

            கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம். இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால், இந்நாளில் சோமவார விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

விரதம் இருக்கும் முறை: 

       சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கித் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

        அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர், கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள் பொடி போன்றவற்றைப் போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

         கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். வழிபாட்டின்போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.

        பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, சேலை, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சணை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்.

கார்த்திகை சோமவார விரதம் ஏற்படக் காரணம்?

      சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் கூறுவர். சந்திரன், கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் தோன்றினான். தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதனை செய்து, நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பேறு பெற்றான். அவனது பெயரால் தோன்றியதுதான் சோமவார விரதம். அதுவும் சந்திரன் தோன்றிய இந்தக் கார்த்திகை மாத சோமவாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் சிவதலங்களில் சங்காபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

       திங்கள் கிழமையான இந்த நாளில், சோமனாகிய சந்திரன் தன் பெயரால் இந்த விரதம் புகழ்பெற வேண்டும் என சிவபெருமானைப் பிரார்த்தித்தான். பெருமான் வரமருள, இந்த விரதம் சோமவார விரதமாகச் சிறப்பு பெற்றது.

       தட்சனின் மருமகன்தான் சந்திரன். தட்சனின் இருபத்தியேழு பெண்களையும் மணந்து கொண்டான் சந்திரன். தட்சனோ தனது அனைத்துப் பெண்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். ஆனால் அதை மீறி ரோகிணியுடன் மட்டும் சந்திரன் அன்பாக இருந்தான். எனவே மற்ற 26 பேரும் தட்சனிடம் முறையிட, கோபமுற்ற தட்சன் சந்திரன் தேயக்கடவது என்று சாபம் கொடுத்தான். அதனால் தேய்ந்து கொண்டே வந்த சந்திரன் சிவபெருமானைத் தஞ்சமடைந்தான்.

       அவர் சந்திரனைத் தன் திருமுடியில் தாங்கி சோமநாதர் ஆனார். சந்திரசூடராக, சந்திரமெளலீஸ்வரராக ஆனார். இவ்வாறு சிவபெருமான் திருமுடியில் சந்திரன் அமர்ந்ததும் இந்தக் கார்த்திகை சோமவாரத்தில்தான்.

        சந்திரன் சிவபெருமானிடம் “14 ஆண்டுகள் சோமவாரம் தோறும் பூஜை செய்து, இரவு கண் விழித்து சிவபுராணம் படித்து காலையில் ஹோமம் செய்து, கலச நீரால் அபிஷேகம் செய்து கணவனும் மனைவியுமாக பூஜை செய்பவர்களுக்கு நற்கதி அருள வேண்டும்” என்று வேண்டினான். எனவே, சோமவார விரதம் இருப்பவர்களின் பாவங்களைப் போக்கி, பகைவர் பயம் அகற்றி, அவர்களை நற்கதி அடையச் செய்வார் சிவபெருமான் என்பது ஐதீகம். 

        இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...