“புன்னகை” – The Hero.
“புன்னகை” – The Hero.
——————–
“Acting is not acting-its just behaving”. It is the method showing the true behaviour of that character under imaginary circumstances!!
என்பது Sansford Meisner உன்னத நடிப்பு பற்றி சொன்ன சினிமொழி.
உன்னத சினிமாவின் விளக்கமும் இதை போன்றதே, எந்த சினிமா நம்முடைய “Behavioural aspect”-ஐ கொஞ்சம் உலுக்குகிறதோ, அதுவே உன்னதம்! அது உலக சினிமாவாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை!
ஒரு சினிமாக்கதை..
சத்யன் (Gemini கணேசன்), ராஜன்(முத்துராமன்), கலசலிங்கம்(M.R.R வாசு), ஹனீஃப்(K.S கோபாலகிருஷ்ணன்) & பாபு(நாகேஷ்-the Narrator of the story) எனும் ஐந்து கல்லூரி நண்பர்கள், படிப்பு முடிந்த இறுதி நாளில் “எத்தனை கஷ்டம் வாழ்வில் வந்தாலும் நேர்மையும் உண்மையுமாகவே இருந்து ஜெயிப்போமென காந்தி சிலை முன்பு சத்தியம் செய்து கொண்டு பிரிகின்றனர்.
ஆனால் யதார்த்த வாழ்க்கை இவர்களை வேறு மாதிரி விரட்டுகிறது. இவர்களில் நன்கு படிக்கும் புத்திசாலி ஹனீஃப் ஒரு விபத்தில் இறந்து விடுகிறான். so, மரணம் எனும் நிஜத்துக்கு ஜாதி, மதம், புத்திசாலி, முட்டாள், ஏழை, பணக்காரன்,கொள்கை உடையவன் & இல்லாதவன் என்று எந்த வித்தியாசமும் இல்லை. மரணத்தின் முன்பு அனைவரும் சமம். நமக்கான நேரம் வந்தால் போய்விட வேண்டியதுதான் என்னும் உன்னத தத்துவதுடன் கதை தொடங்குகிறது.
பிறகு?
வறுமையும், வேலை வாய்ப்பின்மையும் தன்னை விரட்ட விரட்ட பதவி, கௌரவம், பணம், அதிகாரம் எனும் மாயைகள்தான் நிதர்சனம் என நம்பிடும் ராஜனும், கலசலிங்கமும் கொள்கை மறந்து தடம் மாற,ஒரு சாதாரண ஜூனியர் என்ஜினியராக இருந்தும் அலுவலகத்தில் அத்தனை தில்லு முல்லுகளும் செய்யும் ராஜன், அசால்டாக மிகப்பெரிய அதிகாரி ஆகிறான். பதவியும் கௌரவமும் தானாய் உயர்கிறது அவனுக்கு. கலசலிங்கமோ ஊரின் மிகப்பெரிய காண்ட்ராக்டரின் பெண்ணிற்கு இரண்டாம் கணவன் ஆகி எளிதில் பணக்காரன் ஆகிறான்.அவனை பொருத்தவரை பணம்தான் வாழ்வின் அச்சாணி. ஆனால் இவ்விடம் அடைவதற்கு ராஜனும், கலசலிங்கமும் தங்கள் கொள்கை மட்டுமல்ல, தங்களையே இழக்க வேண்டி இருக்கிறது.வேலை,பதவி உயர்வு, “Status symbol” என்று அலையும் ராஜன் தன் ஒழுக்கமான மனைவியை கண்டு கொள்ளாது போக-அவளோ தடம் மாறுகிறாள்.இன்னொருவனுடன் இடம் மாறுகிறாள்!.கொள்கைக்கான மனமில்லா ராஜன், அன்றோடு மானமில்லா ராஜனாகவும் ஆகிறான்! இன்னொரு பக்கம் தன்னையே விற்று பணக்காரன் ஆன “Never care minded” கலசலிங்கம்-ஊரில் உள்ள அத்தனை திருட்டுத்தனமும் செய்கிறான்.ராஜனை விட இன்னும் உயர்கிறான்.ஆனால் என்ன, அவனிடம் விற்பதற்கு மானமுமில்லை, அவன் போலொரு ஈனமுமில்லை!.
வேலை வெட்டி ஏதும் கிடைக்காத பாபு இக்கதையின் “The narrator” ஆகிறான். ராஜன்,கலசலிங்கம்,சத்யன் இவர்கள் மூன்று பேரின் கதையை அவர்கள் கூடவே இருந்து நமக்கு narrate செய்யும் ஒரு கதை யாத்ரீகன் அவன். ரொம்ப simple, அடுத்தவனை பற்றி கதை சொல்லும் வேலை என்பதால் அவன் பிழைப்பு அப்படியே இருந்து விடுகிறது. அவன் உயரவும் இல்லை, தாழவும் இல்லை.அவனை பொருத்த வரை அடுத்தவர் உள்ள வரை அவன் வண்டி ஓடும்.
எனக்கு தெரிந்த அனுபவத்தில் இங்கு நம்மில் முக்கால்வாசி பேர் ராஜனாவகோ, கலசலிங்கமாகவோ இல்லை பாபுவாகவோ ஜஸ்ட் லைக் தட் வாழ்ந்தும்,இறந்தும் விடுகிறோம்.அதுதான் சுலபமும் கூட.ஒருவேளை சீக்கிரமே இறந்துவிட்டால் நாம் விதிப்படி ஹனீஃப். இறக்காது போனால் விவேகத்தின்படி இவர்கள் 3 பேரில் எவனோ ஒருவன்.
சத்யன்??
He is the real hero. உண்மை மட்டுமே பேச வேண்டும் என்ற ஒரே கொள்கைக்காக அவன் இறுதி வரை இரும்பாகவே இருக்கிறான். ராஜனின் senior ஆஃபிஸராக இருந்தும் அவன் தன்னை விட உயரும் போது அது கண்டு பொறாமை படாது அவன் அவனாகவே இருக்கிறான். அவன் வாழ்க்கை நேர்மையால் உயரவில்லை என்று தெரிந்தும், நேர்மையை அவன் உயர்த்துகிறான்.விதிவசத்தால் விபச்சாரி என்று நம் society பழி போதும் ஷாந்தியை (ஜெயந்தி) மணக்க நேரிடுகிறது. ஊரே அவளை இழித்துப்பேச இவனோ அவளை முழுதாய் நம்புகிறான்.ஒரு கட்டத்தில் ராஜனின் மனைவி தான் கள்ளக்காதலனுடன் இருப்பதை ஷாந்தி பார்த்து விட,தான் தப்பிப்பதற்காக எல்லோருக்கும் முன்பாக பழியை அவள் மீதே போடுகிறாள் ராஜனின் மனைவி. தான் மீது தவறில்லை என்று புரிந்து மௌனியாய் நிற்கும் ஷாந்தியை பார்த்து சத்யன் சொல்கிறான்-நான் ராமன் இல்லை. ஏனெனில் ராமன் கூட சீதையை சந்தேகப்பட்டான், ஆனால் இந்த சத்யா தன் மனைவியை சந்தேகப்படமாட்டான். ஊர் பேச்சு பற்றி எனக்கு கவலை இல்லை-வீட்டுக்கு போகலாம் வா என்று கரம் பிடிக்கிறான்.
தன் கண்ணீராலேயே அவன் காலை கழுவுகிறாள் ஷாந்தி.!!
நேர்மையும் உண்மையுமாய் இருப்பதற்க்கு பரிசு வேண்டுமே? அவன் வேலை போகிறது,பணம் போகிறது, வீடு போகிறது.ஆனால் உண்மை போக வில்லை. பணம் சம்பாதிக்க உன்னையும், உண்மையும் விட்டுக்கொடு எனும்”Convincing tactics” of ராஜன்&கலசலிங்கமும் எடுபடாமல் போக, இறுதி வரை “the Hero” ஆகிறான் சத்யன்.
மரணப்படுக்கையின் இறுதியில் தன் மனைவியிடம் அவன் சொல்வது-இறுதி வரை கொள்கையோடு இருந்தேன். அந்த கொள்கை என்னையும் காப்பாற்ற வில்லை. என்னை நம்பி வந்த உன்னையும் காப்பாற்ற வில்லை. இரண்டே விஷயம் சொல்ல விரும்புகிறேன். என் மரணம் நிம்மதியாய் இருக்கிறது. உன் கற்பு போலவே அதுவும் பரிசுத்தம் என நம்புகிறேன்.உன்னை இறுதி வரை காப்பாற்ற முடியாது போனாலும், எனக்கு நம்பிக்கையாய் இருந்த உனக்கு என் நன்றிகள் என்னும் வார்த்தையோடு நிம்மதியாய் இறக்கிறான்!! இறக்கும் தருணம் அவன் சிந்தும் சந்தோஷப்புன்னகைதான் படத்தின் பெயரும் – “புன்னகை” (1971).
அந்த இறுதி நிமிடங்கள்தான் highlight. தான் தானாகவே வாழ விரும்பும் மனிதனுக்கு விதியும் சரி, சமூகமும் சரி, எதுவும் தரப்போவதில்லை. அவன் பெரிதும் நினைத்த கொள்கை, உண்மை, நேர்மையும் அவனை பெரிதாய் வாழ விடவில்லை. பிறகு என்ன அவன் Hero.??
மரண நொடி!!! எவனொருவன் மரணப்பொழுதில், தான் வாழ்ந்தது உருப்படியான, நிஜமான, தனக்கு பிடித்த வாழ்க்கை என்ற நிறைவுடன் இறக்கிறானோ அவனே “The Hero”.
படத்தின் இன்னொரு அழகான விஷயம்-symbolic representation of characters. பாபுவை காட்டும்போதெல்லாம் கூடவே ஒரு காகிதமும் வரும், காற்றடிக்கும் போதெல்லாம் அதன் திசை நோக்கி பறக்கும் காகிதம் போல தான் பாபுவும், எங்கெல்லாம் நண்பர்களோ அங்கெல்லாம் அவன். ஹனீஃபிற்கு விட்டில் பூச்சி, அன்றே மலர்ந்து அன்றே மடியும் உயிர் அவன். ராஜனுக்கும் கலசலிங்கத்திற்கும் பறக்கும் பட்டம்.(என்னதான் உயர உயர பறந்தாலும், என்றேனும் ஒரு நாள் இறக்கமும் உறுதி!). ஆனால் சத்யாவுக்கோ கோவில் கோபுரம்.அவன் நிலை உயராது அப்படியே இருந்தாலும், புனிதமாய் இறுதி வரை நிலைத்து நிற்பான் அவன். நீ இறக்கும்போது சத்யன் போல நிம்மதியாய் இறக்க வேண்டுமெனில், இருக்கும்போதும் சத்யனாக இருந்தால் மட்டும் அது சாத்தியம் எனும் சின்ன touch-ஓடு படம் முடிகிறது. இன்றிருக்கும் சூழலில் இங்கே ராஜன்களும் கலசலிங்கமும் மிக அதிகம், ஆனால் சத்யாக்கள் தான் தேடினாலும் கிடைப்பதில்லை.
அதை விடுங்கள்..
நேற்று பார்த்த பிகிலும்,கோமாளியும் மறந்து விட, 1990களில் சின்ன பையனாய் 25 வருஷத்துக்கு முன் பார்த்த இப்படம் இன்றும் வரி மாறாது நினைவில் நிற்கக்காரணம்??
அப்படம் முடிந்து ஸ்கூல்-காலேஜ்-வேலை-திருமணம் எனுமிந்த நாற்கட்டங்களிலும், ஏதேனும் தெரிந்தே தவறு செய்ய நேரும்போது சத்யன் தானாகவே நினைவுக்கு வருகிறான். நல்லவனாகவே, கொள்கை மாறாதவனாகவே நிம்மதியுடன் இறக்கும் சத்யன் எனக்குள் இன்றும் ஹீரோவாகவே நிரம்பியிருந்தும், நாம் மட்டும் Practical life எனும் போர்வையில் வில்லனாகவே இருக்கிறோமேயெனும் விந்தையோடு திரிகையில்,
பழைய விகடனின் பேட்டி ஒன்றில், ரஜினி-கமல் படம் எல்லாம் இயக்கி முடித்து விட்டீர்கள்.. நீங்கள் இயக்கிய 100 படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எதுவெனும் கேள்விக்கு , “என் 100 படங்களில் பிடித்த படம் நிறைய உண்டு. ஆனால் சிறந்த படமென்றால் அது “புன்னகை”. I love Sathyan… என்னால் அவனை இயக்க முடிந்ததே தவிர, அவனாய் ஆக முடியவில்லை!!” என்ற பதிலிருந்தது. பத்து வயசுப்பையனை ஒரே திரைப்படத்தால் குழப்பி விட்டு, இருபத்தைந்து வருஷமாய் இதயதுக்குள் சுற்ற வைத்து, அதை பற்றி எழுதவும் வைத்த பெருமை, பதிலுரைத்த அந்த ஜீனியஸ்-ற்கு உண்டென்றால்…
அவர் பெயர் கே.பாலசந்தர்!!!!!