‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ – ரோகித்சர்மா கருத்து

 ‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ – ரோகித்சர்மா கருத்து

‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ – ரோகித்சர்மா கருத்து

       வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்தார்.

           நாக்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்னும், லோகேஷ் ராகுல் 52 ரன்னும் எடுத்தனர்.

          பின்னர் ஆடிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் 144 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த வங்காளதேச அணி அதன் பிறகு பெருத்த சரிவை சந்தித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற 27 வயது வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 12-வது ‘ஹாட்ரிக்’ சாதனை இதுவாகும். அத்துடன் அவர் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் 81 ரன்கள் குவித்தும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

               பந்து வீச்சாளர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. மிடில் ஓவரில் பனித்துளியால் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதை நான் அறிந்து இருந்தேன். ஒரு கட்டத்தில் வங்காளதேச அணி வலுவான நிலையில் இருந்தது. கடைசி 8 ஓவர்களில் அந்த அணி வெற்றிக்கு 69 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை முன்னேற்ற பாதையில் பயணிக்க வைத்தனர். நான் வீரர்களிடம் நாட்டுக்காக விளையாடுவதை நினைவில் வைத்து செயல்படும்படி அறிவுறுத்தினேன். இந்த போட்டியில் எல்லா பாராட்டுகளும் பந்து வீச்சாளர்களையே சாரும்.

             பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் சிறப்பாக செயல்பட்டார்கள். அணியில் தங்களது பொறுப்பை உணர்ந்து எல்லா வீரர்களும் செயல்பட்டனர். உலக கோப்பை போட்டிக்கு முன்பு சில ஆட்டங்கள் தான் நமக்கு இருக்கிறது. நமது அணியின் கலவை நன்றாக உள்ளது. சில வீரர்கள் வாய்ப்பை தவற விட்டுள்ளனர். அவர்களும் அணிக்கு திரும்புவார்கள். அணியில் உள்ள எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதனால் வீரர்களை தேர்வு செய்வது தேர்வாளர்களுக்கும், கேப்டன் விராட்கோலிக்கும் தலைவலியாக இருக்கும். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

தோல்வி குறித்து வங்காளதேச அணியின் கேப்டன் மக்முதுல்லா கூறுகையில், ‘20 ஓவர் போட்டியில் நாங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது. எங்களிடம் அதிரடியாக ரன் குவிக்கக்கூடிய வீரர் இல்லை. சாதுர்யமாகவும், மனரீதியாகவும் நிலை யாக செயல்பட்டால் தான் நாங்கள் முன்னேற்றம் காண முடியும். பேட்டிங்கில் நாங்கள் முன்னேற்றத்தை எட்டினால் அதிக வெற்றிகளை பெற முடியும். சமீபகாலமாக பல ஆட்டங்களில் நாங்கள் இதே மாதிரியான தவறை தான் செய்கிறோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 174 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள்.                               ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் பணியை சரியாக செய்யவில்லை. இந்த போட்டி தொடரில் 3 ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன். 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் உத்வேகத்தை இழந்து விட்டால் அதனை மீட்டு எடுப்பது என்பது மிகவும் கடினமானதாகும். இந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்கு நெருக்கமாகவே வந்தோம். 6-7 பந்துகளில் 3-4 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. முஷ்பிகுர் ரஹிமை நான் குறை சொல்லமாட்டேன். டெல்லி போட்டியில் அவர் தான் எங்களுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அல் அமின் ஹூசைன் நன்றாக பந்து வீசினார். முகமது நைம் பேட்டிங் அருமையாக இருந்தது. நாங்கள் பேட்டிங்கை சரியாக நிறைவு செய்யவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. முஸ்தாபிஜூர் ரகுமான் சிறந்த பவுலர். ஆனால் அவர் இந்த தொடரில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை.                           எல்லா வீரருக்கும் இதுபோல் நிலைமை வரத்தான் செய்யும். அதற்காக அவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை. அவர் நல்ல பார்முக்கு திரும்புகையில் வங்காளதேச அணி வெற்றி பெறும்’ என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...