திரைப்படம் தாண்டி அவரிடமிருந்த சில திரை பண்புகள்தான்

 திரைப்படம் தாண்டி அவரிடமிருந்த சில திரை பண்புகள்தான்

அழியாத கோலங்களின் இறுதிக்காட்சி போல நம்மைப் பெரும் துக்கத்தில் வீழ்த்தும் காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது.

நான் பலமுறை அந்த இறுதி காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்த்து வரும்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் அது என்னுள் பெரும் பாறாங்கல்லைக் கயிற்றில் கட்டி மெல்ல இறக்கி நெஞ்சடைக்க செய்வதாய் இருந்துள்ளது. மூன்றாம்பிறை ,மறுபடியும் , யாத்ரா (மலையாளம்), வீடு, சந்தியாராகம் என அவரது திரைக்கதைகளின் முடிவு பெரும் காவியத்தன்மைக்குள் நம்மை நகர்த்திச் செல்வதாகவே இருந்து வந்துள்ளது. காட்சி ரீதியான பெரும் அழகியல் தன்மை கொண்ட யாத்ராவின் இறுதிக்காட்சி அவரது மேதைமையின் உச்சம் எனச் சொல்லலாம்.உண்மையில் நீங்கள்கேட்டவை அவருக்கான வகைமாதிரியான படம் அல்ல என்றாலும் அதன் மூலம் பானுச்சந்தர் அர்ச்சனா என இரண்டு நட்சத்திரங்களின் உதயத்திற்கு அத்திரைப்படம் தன் கடமையை நிறைவேற்றியிருக்கின்றது.

‘ஓ வசந்த ராஜா ‘ பாடல் காட்சி மூலம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் காமிரா மூலம் இரண்டாவது முறையாகக் கட்டியமைத்து ராஜேந்திரச் சோழன் அவர். கருத்த அழகியைத் தமிழ் முதன் முதலாகப் பார்த்து ஆச்சரியப்பட்டது. வெள்ளை தோல்தான் அழகு என்ற தமிழரின் பொதுப்புத்தியில் கரடுதட்டிபோன ரசனையைத் தடம் மாற்றிக் கருத்த பெண்களின் கவர்ச்சியான அழகை மாற்றி நிறுவியவர்.

திரைப்படத்துறையின் இத்தகையை சாதனைகள் மட்டுமே அவரது புகழுக்குக் காரணமில்லை. மாறாக அவர் திரைப்படம் தாண்டி அவரிடமிருந்த சில திரை பண்புகள்தான் அவரது நிலைத்த புகழுக்குக் காரணம். வணிகச் சினிமாவுக்காக எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதவர். புகழின் உச்சத்தில் இருந்த போதும் அவர் சாதராண மனிதருக்கான வாழ்க்கையையே வாழ்ந்தார். சாதாரண அம்பாசிடர் கார்மட்டுமே வெகுநாட்களாக வைத்திருந்தார் அதுவும் கூட இல்லாமல் பல சமயங்களில் ஆட்டோவில் செல்பவராக இருந்து வந்தவர் அவரது வளர்ப்பு மகனான இயக்குநர் பாலாவின் நிர்பந்தத்தின் பேரில் அவர் வாங்கிக் கொடுத்த உயர்ந்த ரகக் காரைப் பயன்படுத்தத் துவங்கினார்.

தாஜ் ஹோட்டலில் நடந்த மறுபடியும் வெற்றி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா உங்களைப் போல எந்தச் சமரசத்துக்கும் ஆட்படாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்வது என்னை வெட்கம் கொள்ள வைக்கிறது என வெளிப்படையாகப் பாராட்டியிருந்தார்.

அவரது அலுவலகம் சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகிலிருந்த போது எனது ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ நூலின் முன்னுரைக்காக அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என்னுடைய நண்பர் ஞானச்சம்பந்தன் அப்போது அங்கு உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் தான் முன்னுரைக்காக முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்தார். அச் சமயத்தில் அவர் ஹாலில் வாசலை நோக்கினார் போல் நேரடியாக மேசையைப் போட்டு அமர்ந்திருப்பார். நான் ஒருமுறை அவரிடம் இது குறித்துக் கேட்டேன் .தனியாக அறையில் இருந்தால் கொஞ்சம் பிரைவசி கிடைக்குமே என்று அதற்கு அவர் சொன்ன பதில் தான் அவரது உயரங்களுக்குகெல்லாம் மூல அடிப்படை. என்னைத் தேடி வருபவர்களை நான் நேரடியா பார்ப்பது மூலம் நான் அவர்களை விட்டு விலகாமல்; இருக்கிறேன்.. ஒரு வேளை என்னைப் பார்க்க வந்து வாசலிலேயே அவர்கள் தயங்கிச் சென்று விடும் பட்சத்தில் ஒரு மனித உறவு என்னை விட்டு விலகிப் போகிறது என்றார். அவரது இந்த மனித நேயமும் சக மனிதனோடு எப்போதும் பிணைத்திருக்க விரும்பும் அவரது அவாவும் தான் இயக்குநர் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைகளைக் கடந்து ஒரு சமாந்திரனாக காலத்தின் அடையாளமாக அவரை உயர்த்திக் காட்டியுள்ளது.

சிறுபத்திரிக்கை சார்ந்தோ அல்லது தீவிரச் சினிமா சார்ந்தோ நடத்தப்பட்ட எந்தக் கூட்டத்துக்கும் அவர் மறுப்பு சொன்னதில்லை. எவ்வளவு சிறியவராக இருந்தாலும் எவ்வளவு புதியவராக இருந்தாலும் தட்டாமல் அக்கூட்டங்களுக்குச் சென்று கலந்துகொண்டு வாழ்த்திப் பேசுவதோடு அல்லாமல் அதைக் கடமையாக உணர்ந்து செய்தவர் நான் அவரது உதவியாளனாகப் பணி புரியாவிட்டாலும் அவருக்கு மனதளவில் நெருக்கமானவனாக இருந்து வந்திருக்கிறேன்

. ஒருமுறை இந்தியா டுடே பேட்டியில் அவர் எதிர்பார்க்கும் வருங்கால இயக்குநர்களில் அவரது உதவியாளர்கள் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருந்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகவே கருதுகிறேன்.. அவரோடு நெருங்கி நிற்கும்போது எனது அறிவுணர்ச்சி கனம் கூடிக்கிடப்பதைப் பலமுறை உணர்ந்துள்ளேன்.

அஜயன் பாலா

நன்றி: மின்னம்பலம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...