ஆர்தர் ஆஷர் மில்லர் (Arthur Asher Miller)
அமெரிக்க நாடகாசிரியரும், கட்டுரையாளருமான ஆர்தர் ஆஷர் மில்லர் (Arthur Asher Miller) காலமான தினமின்று
*அமெரிக்காவின் நியூயார்க் நகரில், புலம்பெயர்ந்த யூதக் குடும்பத்தில் (1915) பிறந்தார். தந்தையின் ஜவுளி உற்பத்தி தொழில் நலிவடைந்ததால், இவரது 13-வது வயதில் குடும்பம் ப்ரூக்ளினில் குடியேறியது.
*அப்போதைய பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட சமூகப் பிரச்சினைகளும், குடும்பத்தை வாட்டிய சிக்கல்களும் இவரிடம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தின. பள்ளிக்கல்வியை முடித்ததும் ரேடியா பாடகர், லாரி ஓட்டுநர், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையாளர் என கிடைத்த வேலைகளைச் செய்தார்.
*வருமானத்தை கல்லூரிப் படிப்புக்காக சேமித்து வைத்தார். 1934-ல் மிச்சிகன் கல்லூரியில் சேர்ந்தார். நிறைய எழுதிப் பயிற்சி பெற்றார். பல நாடகங்கள் எழுதினார். அவை நல்ல வரவேற்பை பெற்றன. மாணவப் படைப்பாளியாக பல விருதுகள் பெற்றார்.
*பட்டப்படிப்பு முடிந்தவுடன், நியூயார்க் சென்று, ஃபெடரல் தியேட்டரில் இணைந்தார். முழுநேரப் படைப்பாளியாக மாறினார். இவர் எழுதிய ‘த மேன் ஹு ஹேட் ஆல் த லக்’ என்ற முதல் நாடகம் 1944-ல் அரங்கேறியது. அது மோசமாக விமர்சிக்கப்பட்டு, தோல்வியைச் சந்தித்தது.
*மனமுடைந்தவர் புதுஉத்வேகத்துடன் எழுதத் தொங்கினார். அடுத்த ஆண்டில் ‘ஃபோகஸ்’, ‘சிச்சுவேஷன் நார்மல்’ ஆகிய நாவல்களை எழுதினார். பின்னர், ‘ஆல் மை சன்ஸ்’ என்ற நாடகம், பிரபல பிராட்வே அரங்கில் மேடையேறி மாபெரும் வெற்றி பெற்றது.
*மிகப் பிரபலமான ‘டெத் ஆஃப் ஏ சேல்ஸ்மேன்’ நாடகத்தை 1949-ல் எழுதினார். இது 700-க்கும் மேற்பட்ட முறை மேடைகளில் அரங்கேறியது. இந்த நாடகம் சுமார் 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேறியது. இது இவருக்குப் புகழையும் செல்வத்தையும் வாரி வழங்கியது.
* சாமானிய மக்களின் வாழ்வில் நடக்கும் அசாதாரண சோகங்களை இவரது நாடகங்கள் வெகுஇயல்பாக எடுத்துரைத்தன. நலிவுற்ற மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களின் ஆழமான அர்த்தத்தை எடுத்துக் கூறின. இவரது படைப்புகள் தொழிலாளர் வர்க்கத்தினர் மீதான இவரது கவலைகளையும் வெளிப்படுத்தின.
*சமூகம், இனவெறி, மக்களின் நிலை குறித்து 1960, 1970-களில் எழுதி வந்தார். பின்னர் இவரது படைப்புகளில் நகைச்சுவை அதிகம் காணப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் பின்னர் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டன. தனது சில படைப்புகளுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
‘டைம்பெண்ட்ஸ்’ என்ற சுயசரிதையை எழுதினார். அமெரிக்க தேசிய கலை அமைப்பின் தங்கப்பதக்கம், புலிட்சர் பரிசு, பலமுறை டோனி விருதுகள், கென்னடி வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றவர். ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
*வாழ்நாள் முழுவதும் எழுதிவந்த இவர், மனசாட்சியுடனும், சமூக விழிப்புணர்வுடன், தெளிவான சிந்தனையுடனும், பொறுப்புணர்வுடனும், சமுதாய அக்கறையுடனும் செயல்பட்ட படைப்பாளி என பாராட்டப்பட்டவர். அமெரிக்க நாடகத் துறையின் வெற்றிகரமான, முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்த ஆர்தர் மில்லர் 90-வது வயதில் இதே பிப் 10ல் (2005) மறைந்தார்