இனிமே லட்டு பிரசாதம் மதுரையிலும்
உலகப் பிரசித்தி பெற்று தமிழோடு இணைந்த பல வரலாறுகளைக் கொண்டது மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வெளிநாடுகளில் இருந்து கூட அம்மனை தரிசிசக்க பக்தர்கள் வருகிறார்கள். லட்டு என்றாலே நமது நினைவிற்கு வருவது திருப்பதிதான். அதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலிலும் கடந்த 27ந் தேதியே லட்டு பிரசாதமாக தரப்படும் என்ற அறிவிப்பு வந்தது ஆனால் அது அறிவிப்பாக மட்டுமே இருந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோரும், அறநிலையத் துறை அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இத்திட்டத்தின்படி, கோயிலில் மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு, மூலவரான சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் பிரகாரத்தில் அமைந்துள்ள முக்குருணி விநாயகர் சந்நதி அருகே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
காலையில் கோயில் நடை திறந்தது முதல், இரவு நடை சாத்தும் வரை பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். தினமும் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு இந்த பிரசாதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.