அமெரிக்க எச்.1பி விசா பதிவு செய்ய கட்டணம் டிச.9ம் தேதி அறிமுகம்
அமெரிக்க அரசு ஆண்டுதோறும் 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1பி விசா வழங்குகிறது. இதில், வேலைக்கு வருபவர்கள் 65 ஆயிரம் பேர், உயர்கல்வி படிக்க வருவோர் 20 ஆயிரம் பேர், இவர்களை தேர்வு செய்வதற்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் எலக்ட்ரானிக் ரெஜிஸ்ட்ரேஷன் முறையை அந்நாட்டு அரசு அமல்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு செல்வோர் எச்.1பி விசா பெற வேண்டும். அந்நாட்டில் டி.சி.எஸ், சி.டி.எஸ், விப்ரோ, டெக்மகேந்திரா உள்ளிட்ட இந்திய ஐ.டி. கம்பெனிகள், இந்தியாவில் இருந்து ஊழியர்களை தேர்வு செய்கின்றன. அதே போல், அமேசான், ஆப்பிள், கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்களும் இந்தியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களை வேலைக்கு சேர்க்கின்றனர். இவர்களுக்கு எச்1பி விசா பெற வேண்டும்.
இது குறித்து, யுஎஸ்சிஐஎஸ் இயக்குனர் கென்ஹுக்கிநெல்லி கூறுகையில், தொழில் நிறுவனங்கள் எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்களின் விண்ணப்பங்களை எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்ய வேண்டும். அப்போது ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 10 டாலர்கள் (சுமார் 700ரூபாய்) கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த கட்டணம் விசாவுக்கான வழக்கமான 490 டாலருடன் கூடுதலாக செலுத்த வேண்டியதாகும். புதிய எலக்ட்ரானிக் முறையில் மோசடிகள் அறவே தவிர்க்கப்படும். மேலும், பணிகளை விரைவுபடுத்தவும் உதவும் என்றார்.