டைரக்டர் & ஆக்டர் கே.விஸ்வநாத்

 டைரக்டர் & ஆக்டர் கே.விஸ்வநாத்

!🔥

டைரக்டர் & ஆக்டர் கே.விஸ்வநாத் நினைவு நாளின்று 😢

50 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

ஒவ்வொரு படமும் ஒரு பாடமாக அமைந்தது.

இவர் படங்களை இயக்கும் போது காக்கி நிற பேன்ட் சட்டை அணிந்து தானும் ஒரு தொழிலாளி என்பதை உணர்ந்து படத்தை இயக்குவார்.

இவர் படங்களின் முதல் எழுத்து ‘எஸ்’ என தொடங்கும் விதத்தில் பெயர் சூட்டுவார்.

குறிப்பாக ‘சங்கராபரணம்’,‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி), ‘ஸ்வாதிமுத்யம்’ (சிப்பிக்குள் முத்து) உட்பட இவர் இயக்கிய 90 சதவீத படங்களும் அப்படியானவைதான்.

கர்நாடக சங்கீதத்தை மையமாகக் கொண்டு இவர் இயக்கிய ‘சங்கராபரணம்’, 1980-ம் வருடம் இதே பிப். 2-ம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் கழித்து, அதே பிப் 2-ம் தேதி கடந்தாண்டு மறைந்தார் இயக்குநர் விஸ்வநாத்.

இவர் தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இச்சூழலில் இந்த *சங்கராபரணம் குறித்து நம்ம ஆந்தை சினிமா அப்டேட்ஸ் நண்பார்களுக்காக சுவையான சில சேதிகள் இதோ*:

ஒரு காலத்தில் வெற்றிபெற்று பேசப்பட்ட படங்களில் சிலவற்றுக்கு மட்டுமே காலம் கடந்து நிற்கும் தகுதி இருக்கும். அவை வேற்று மொழியில் இருந்தாலும் பல ஆண்டுகள் கழித்து மறு வெளியீடு செய்கிற போதும் வெற்றி பெறும். இதற்கு இன்னிக்கும் உதாரணமான படம் ‘சங்கராபரணம்’.இத்திரைப்படத்தின் பாடல்களைக் கேட்பதற்காகவே பலர் டேப்ரிக்கார் டர்களை வாங்கினர் எனக் கூறுவ துண்டு. இத்திரைப்படம் 4 தேசிய விருதுகளையும், ஆந்திர அரசின் நந்தி விருதையும் வாங்கி குவித்து சாதனை புரிந்தது. தெலுங்கில் வெளியான இத்திரைப்படம்,

இந்த சங்கராபரணம் படத்தை இயக்கியவர்தான் மேலே சொன்ன பிரபல டைரக்டரான கே.விஸ்வநாத். இவர் எடுத்த திரைப்படங்கள் அத்தனையிலுமே நிச்சயமாக கலாப்பூர்வமான ரசனை அதிகம். தெலுங்கில் எடுக்கப் பட்ட இவரது திரைப்படங்கள் பின்னர் நிச்சயம் தமிழ் பேசவும் மறந்ததில்லை. அப்படி நமக்குக் கிடைத்தவையே சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உள்ளிட்ட திரைப்படங்கள்.

இவற்றில் சங்கராபரணம் திரைப்படத்தை எடுத்து முடித்து விட்டு அத்திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காண்பித்த போது அன்று அதை வாங்க ஒருவரும் முன் வரவில்லை.

இயக்குனரின் சொந்த பெரியம்மாவின் மகனான பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் அத்திரைப்படத்தில் சோமையாஜூலுவின் மருமகனாக நடித்திருப்பார். அவரிடம் கூட கே. விஸ்வநாத், இந்தப் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உனக்குத் தருகிறேன். ஒன்றரை லட்ச ரூபாய் அளித்தால் போதும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், காசே பெரிது, தனக்கு சம்பளம் தராமல் தட்டிக் கழிக்கவே இயக்குனர் இப்படிக் கூறுகிறார் என்று நினைத்து ‘அதெல்லாம் முடியாது, என் நடிப்புக்கு சம்பளம் கொடுங்கள், அது போதும் என்று பிடிவாதம் செய்து அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டதாக நடிகர் சந்திரமோகன் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இந்தப் படம் வெளின முதல் நாளில் கூட்டமே இல்லை. அதே சமயம் படத்தைப் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் கூறிய அபாரமான புகழ்மொழிகளால் அடுத்த நாளிலிலிருந்து கூட்டம் அலை மோத ஆரம்பித்தது.

ஹைதராபாத் ராயல் தியேட்டரில் 216 நாட்கள் ஓட, நாட்டின் இதர பகுதிகளில் உள்ள பல திரையரங்கங்களில் சுலபமாக நூறு நாட்களைத் தாண்டியது! ஆந்திராவில் ஓராண்டை தாண்டி ஓடியது இப்படம்.

தமிழ்நாட்டிலும் தெலுங்கிலேயே வெளியாகி வசூல் செய்தது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம். இப்படம் சிறந்த இயக்கம், சிறந்த பாடகர்கள் என நான்கு தேசிய விருதுகள் வென்றது .

கொஞ்சம் டீடெய்லா சொல்றதானா தெலுங்கு திரைப்பட உலகமும் தமிழ்த் திரைப்பட உலகமும் மிக அன்யோன்யமாகவே ஆரம்ப காலம் முதல் இருந்து வந்துள்ளது. இதற்கான காரணம் பண்பாட்டின் அடிப்படையில் மனதால் அனைவரும் ஒன்று பட்டிருந்த காரணத்தினால் தான்! அரசியல் அந்தக் காலத்தில் திரையுலகில் புகவில்லை! சென்னையில் இருந்த ஸ்டுடியோக்களைத் தாராளமாகப் பயன்படுத்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இரு மொழிகளில் ஒரே சமயத்தில் படம் எடுப்பது சுலபமாக இருந்தது. ஆடல் பாடல், கிளுகிளுப்புப் படங்களையே தெலுங்கு உலகம் விரும்பியது என்று சிலர் கூறுவது சரியில்லை. மிக அழகான கலைப் படங்களையும் இதிஹாச புராணப் படங்களையும் தெலுங்கு உலகம் தந்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். சம்பூர்ண ராமாயணம், லவகுசா, ஶ்ரீ ராமராஜ்யம், சங்கராபரணம் போன்ற படங்கள் போதாதா, இதை நிரூபிக்க! (கட்டிங் கண்ணையா)

தியாகராஜ ஸ்வாமிகள், மைசூர் வாசுதேவாச்சார், பத்ராசல ராமதாஸ் ஆகியோரின் கீர்த்தனைகளை பாடல்களாக வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்றால்.. அதுவும் அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெரும் வண்ணம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு தனி தைரியம் வேண்டும்.

அந்த தைரியம் படத்தின் இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இருந்தது. அதே துணிச்சல் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனுக்கும் இருந்தது.அதுவும் எப்படி? கர்நாடக சங்கீத வாசனையே இல்லாத எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை ஒரு கர்நாடக இசை வல்லுநர் கதாபாத்திரத்துக்கு பின்னணி பாடவைக்கும் அளவுக்கு துணிச்சல் இருந்தது.

சங்கராபரணம் சங்கர சாஸ்திரி என்ற கர்நாடக இசை மேதைக்கும், தேவதாசி குலத்தில் பிறந்த துளசி என்ற நடன மங்கைக்கும் இடையில் ஏற்பட்ட குரு சிஷ்யை பந்தத்தையும் மீறி துளசி அவர் மீது வைத்திருக்கும் புனிதமான பக்தியையும் மூலக் கருவாகக் கொண்டு பின்னப்பட்ட கதை.

சங்கர சாஸ்திரியாக கே.வி. சோமயாஜுலு நடிக்கவில்லை..வாழ்ந்தே காட்டி இருந்தார். அதுவரை சினிமாக்களில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடும் க்ரூப் டான்ஸ் ஆர்டிஸ்டாக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த மஞ்சு பார்கவி (ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த “பில்லா” படத்தில் இடம்பெற்ற “மை நேம் இஸ் பில்லா” பாடல் காட்சியில் ரஜினியோடு சேர்ந்து ஆடிவிட்டுப் போவாரே அவரேதான்) கதாநாயகி துளசியாக நடித்தார். மொத்தப் படத்துக்கும் சேர்த்து இவர் பேசிய வசனம் கால் பக்கம் இருந்தாலே அதிகம். கண்களாலேயே பேசி நடித்து அனைவர் கவனத்தையும் வெகுவாகக் கவர்ந்தார்.

இந்தப் படம் நமது பாடகர் எஸ்.பி.பி. அவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம். ஆரம்பத்தில் எஸ்.பி.பி. யின் பெயரை பின்னணி பாடகருக்காக பரிந்துரைத்தபோது அனைவரும் அதிர்ந்துதான் போனாங்களாம்.. “வேண்டாம் இந்த விஷப் பரீட்சை. கர்நாடக சங்கீதம் மேலோங்கிய கதை. பேசாம பாலமுரளி கிருஷ்ணாவைப் பாடவைத்து விடலாம்.” என்ற கருத்தும் மேலோங்கியது. ஆனால் கே.வி.மகாதேவனிடம் கேட்டபோது “மணியை (எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை “மணி” என்றுதான் மகாதேவன் அழைப்பார்.) நான் பாட வச்சுடறேன். அவன் சம்மதிச்சான்னா போறும்.” அப்படீன்னார். இத்தனைக்கும் இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களின் சிற்றப்பா மகன் தான் எஸ்.பி.பால சுப்ரமணியம். ஆரம்பத்தில் பாலுவிடம் அவர் கேட்டபோது “ஆளை விடுங்க சாமி. நம்மால முடியாது” என்று அவர் மறுத்துட்டார்.

தினமும் காலையில் வாக்கிங் போகும் போது பாலுவின் வீட்டுக்கும் விஸ்வநாத் போவது வழக்கம். ஒருநாள் அப்படிச் சென்றபோது “சங்கராபரணம்” படத்தின் கதையை தனது சிற்றப்பாவிடம் விஸ்வநாத் சொன்னபோது அதைக் கேட்டு பெரியவர் நெகிழ்ந்து போனார். பின்னணி” பாடுவதற்கு யாரை போடலாம் என்று இருக்கே?” என்று அவர் கேட்க, “நம்ம பாலுவைத்தான் நான் செலெக்ட் பண்ணி இருக்கேன். ஆனால் அவன் தயங்கறான் சித்தப்பா” என்றார் கே.விஸ்வநாத்.

“இப்படி ஒரு வாய்ப்பை அவன் இழந்துட்டான்னா இனிமே ஜென்மத்துக்கும் அவனுக்கு அது கிடைக்கவே கிடைக்காது. கவலையை விடு. பாலு பாடுவான்” என்று அவர் வாக்கு கொடுக்க பயத்துடனே சம்மதித்தார் எஸ்.பி.பி. அசுர சாதகம் என்பார்களே அதற்கு அர்த்தம் அப்போதுதான் அவருக்கு புரிந்தது.

“இருபத்தைந்தே நாட்களுக்குள் அவரைத் தயார் பண்ணவேண்டும்” என்பதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டு மகாதேவனும் புகழேந்தியும் இயங்கினார்கள்.

ஒலிப்பதிவில் அவருடன் பாடிய வாணி ஜெயராமும், எஸ். ஜானகியும் கர்நாடக இசையில் நன்கு தேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து அவர் பாடிய சங்கராபரணம் பாடல்கள் காலங்களைக் கடந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் “மாமாவும், புகழேந்தியும் தான்” என்பார் எஸ்.பி.பி. அபேர்ப்பட்ட படமோன்னோ இது🥰

From The Desk of கட்டிங் கண்ணையா

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...