ஸ்ரீவித்யா – துயர விழிகளின் தேவதை.

 ஸ்ரீவித்யா – துயர விழிகளின் தேவதை.

இவரைக் கொண்டாடத் தவறி விட்டோமோ?

ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில், அவர் “நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது என் தாயார் எச்சரித்தார்” எனக் கூறியுள்ளார்.

1970 காலகட்டங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிசியான நடிகையாக ஸ்ரீவித்யா வலம் வந்தார்.

பின் நாட்களில் ஸ்ரீவித்யா ஜார்ஜ் தாமஸ் என்பவரை மணந்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என ஒதுங்கி இருந்தார்.

எனினும் கணவனின் நிர்பந்தத்தை தொடர்ந்து மீண்டும் படங்களில் நடித்தார் எனவும் கூறப்படுகிறது.

அவரின் வழக்கறிஞர் என்ற நிலையில் என்னிடம் சொன்னதுண்டு.

நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் ஸ்ரீவித்யாவுக்கு தொல்லை தந்தபோது கவர்னர், எம்.ஜி.ஆரிடம் என் மூலம் சொல்லப்பட்டு அந்த அதிகாரி எச்சரிக்கப்பட்டார்

ஸ்ரீவித்யா – தென்னிந்திய திரையுலகம் கொண்டாடத் தவறிய பெரும் பேரழகி. இப்படி ஒரு ஹீரோயின், எப்படி குணச்சித்திர வேடங்களில் மட்டும் பிக்ஸ் ஆனார்?

ஒரு நடிகையின் கண்களுக்கு அடிமையென்றால் நம் மனது நேரடியாக சில்கை நினைக்கும். ஆனால், அதைவிட பவர்ஃபுல் கண்கள் வித்யாவினுடையது.

சிறந்த கர்நாடகப் பாடகி, சிறந்த நடிகை. இதெல்லாம் சொல்லும் போது நிச்சயம் அவரின் அழகை சொல்லியே ஆக வேண்டும்.

நூற்றுக்கு நூறு திரைப்படம். ஆசிரியர் மேல் காதல் கொண்ட ஒரு பெண்ணாக நடித்திருப்பார். திரைப்படம் முழுக்க அவரை விட அவர் கண்களே அதிகம் பேசியிருந்தது.

அவரின் கண்கள், இதழ்களின் அமைப்பு போல் சிறப்பாக அமைந்த நடிகைகள் விரல்விட்டு கூட எண்ணிவிடலாம். இப்படி ஒரு நடிப்பு அரக்கியை ஏன் கதாநாயகியாகக் கொண்டாடவில்லை நாம்?

அதற்கடுத்து படம் புன்னகை மன்னன். சாப்ளின் செல்லப்பா ஒரு சிறுவனிடம் மாட்டி தலைகீழாக தொங்கும்போது அங்கு வந்து ஒரே அரைதான் விடுவார்.

அந்த படம் முழுவது ஒரு முப்பத்தைந்து வயதுடைய பெண்ணுக்கே உரிய முதிர்ச்சியும், முக அழகும் உடல்வாகும் அப்படி… அபூர்வ ராகங்கள் படத்தில் கிளைமாக்ஸில் கேள்வியின் நாயகனே பாடல் வரும். கருப்பு வெள்ளை படத்திலும் ஸ்பெஷல் கலராக தெரிவார்.

அதில் அவரின் நடிப்பும் கமல்மேல் காட்டும் காதலும் எத்தனை இலக்கியத்திற்குள்ளும் அடக்கவே முடியாது. நிஜ வாழ்வில் கமலை ஒருதலையாக காதலித்து அதில் தோல்வியும் அடைந்தார்.

இப்படி வர்ணிக்க வேண்டிய ஸ்ரீவித்யாவை மலையாள தேசம் மொத்தமாக சூறையாடி விட்டது.

முதல் காதல் தோல்விக்குபின் ஒரு மதமாற்றத் திருமணம் அதுவும் தோல்வி. பரதனிடம் இருந்த காதலும் தோல்வி இப்படி பர்சனல் பக்கங்களில் ரொம்பவே….

பாவம் அறியாத வயதில் தகப்பன் நோய்வாய்பட தாயாரோ பம்பரமாக உழைக்க தாய்ப்பாலின் சுவைகூட அறியவில்லை நான் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் ஸ்ரீவித்யா.

என்ன கொடுமை. அதன் பிறகு தாயார் மரணம் நிகழ்ந்து 10 ம்நாள் காமிரா முன் நின்ற போதும் நடிப்பில் துளி சமரசம் செய்யாத பேதை இவர்.

இவரின் நடிப்பிற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதில் தவிர்க்கவே முடியாதது தளபதி. தன் கணவனாக நடித்தவருக்கு தன்னை விட மூன்று வயது அதிகமான ரஜினி அவர்களுக்கு தாயார் வேடம். கோவிலில் அந்த இரயில் சப்தம் கேட்கும் போது அந்த கண்களை மட்டும் பாருங்கள் நடிப்பின் உச்சம் தெரியும்.

அதற்கு பிறகான 90கிட்ஸின் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ சிம்ரனின் அம்மாவாக ஒரு தாயின் பரிதவிப்பை வேறு யாரும் நமக்குள் கடத்தியிருக்க முடியாது. இதெல்லாம் விட ‘காதலுக்கு மரியாதை’ கிளைமாக்ஸ் தான் இப்பவும் வந்து போகுது…

ஷாலினி அம்மாவிடம் மினியை அவனுக்கு கொடுத்துடுங்கனு கெஞ்சும் போதும், அடுத்த சீனில் சிவகுமாரிடம் இதைவிட ஒரு பொண்ணை தேட முடியாது என்றும் சொல்வார் அதே கண்களில்.

அந்த கண்களில் தான் எத்தனை நடிப்பு. இவரின் இன்னொரு ப்ளஸ் அவரின் கூந்தல். கொஞ்சம் கரடுமுரடான திக்கான சுருள் முடி இந்த படங்கள் எல்லாவற்றிலும் அவரின் கூந்தல் கூட இரசிக்க வைக்கும். பற்பல படங்கள். கமலின் நம்மவர் படத்தில் அவரின் அக்காவாக வரும்போதும் கிளைமாக்ஸிலும் எக்ஸ்ட்ரா அழகாகத் தெரிந்தார்.

புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மரணப்படுக்கையில் இருந்தார். அப்போதும் அவரிடம் இருந்தது அதீத அன்பு மட்டுமே.

அந்தக் கண்களில் சோகம் இருந்தது, காதல் இருந்தது, ஏக்கம் இருந்தது. ஆனால் தேவையானதை மட்டும் தரும் கலை அவரிடம் இருந்தது.

ஸ்ரீவித்யா – துயர விழிகளின் தேவதை.

தூசு தட்டுங்கள் அவரின் திரைப் படங்களை, ரசித்துப் பாருங்கள் அந்தக் கண்களை.

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

நன்றி: தாய்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...