உண்மையான ஹீரோ
ஸ்வச் ருவாண்டா……
ஒரு ஐந்து நட்சத்திர விடுதியை மத்திய அரசும், மாநில அரசும் 10 நாட்கள் தங்கள் வசம் கொண்டு வந்து துடையோ துடையோ என்று துடைத்து வைத்து விட்டு, பின்னர் சுத்தப்படுத்திய இடத்தில் 10 பிளாஸ்டிக் பொருட்களை அவர்களே போட்டு விட்டு, தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையால், நமது பிரதமர் குப்பை அள்ளிய காட்சியை, ஒரு ப்ரொஃபஷனல் வீடியோகிராஃப் டீம் படம் பிடித்த நாடகம் நேற்று கொஞ்சம் அசிங்கமாகவே தமிழகத்தில் அரங்கேறியது.
அவர் விளம்பரத்திற்காகவே பண்ணியிருந்தாலும் கூட, இதைப் பார்த்து ஒரு நாலு பேர் தங்கள் இடங்களை சுத்தப்படுத்த ஆரம்பிப்பார்களே. அந்த வகையில் இதுவும் ஒரு நல்ல முயற்சிதானே என்று பிஜேபி பக்தர்களும், சங்கிகளும் ஒத்து ஊத ஆரம்பித்து விட்டார்கள்.
உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லையாங்க ?
நம் தமிழகத்தை, வெள்ளம், கஜா புயல், ஒக்கி புயல் எல்லாம் வந்து தலை கீழாக புரட்டிப் போட்டது போது, நமது பிரதமர் வந்து இந்த வேலையைச் செய்திருந்தால், ஒட்டு மொத்த இந்தியாவே தமிழகத்திற்கு வந்து தோள் கொடுத்திருக்கும். அப்போது அவர் பிரியங்கா சோப்ரா திருமணத்தில் பிசியாக இருந்தது நமக்கு இன்னொரு அவமானம்.
அப்போது, ஒரு ஆறுதல் செய்தி கூட வெளியிடாமல், இப்போது யாருமில்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துகிறார் நமது பிரதமர் ? ( ஒரு பழமொழிக்காக இந்த டீ மேட்டரைச் சொன்னேன். அவருடைய பழைய தொழிலை கிண்டல் செய்யவில்லை )
ஆனால், இந்தக் கட்டுரை, நமது மார்க்கெட்டிங் குரு மோடிஜீயைப் பற்றியது அல்ல.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக அழகிய ஒரு சிறு நாடே ருவாண்டா. தலைநகர் கிகாலி. 1000 குன்றுகள் கொண்ட நாடு என்ற செல்லப் பெயர் உடைய நாடு. மலையும் , ஆறுகளும், பச்சை பசேலென்ற நிலப்பரப்பும் இந்த நாடு முழுவதும் கண் கொள்ளாக் காட்சி.
1994- இல் இங்கு ஒரு கொடூர வன்முறை வெடித்து லட்சக் கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்
அந்த வன்முறை நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த நாடு இனி எழுதிருக்கவே எழுந்திருக்காது என்று அனைத்து மேற்கத்திய நாடுகளும் கனவு கண்டு கொண்டிருக்கையில், “சாரி…யூ ஆர் ராங்” என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அந்த நாட்டின் அதிபர் “பால் ககாமே” . இவர்தான் அந்தக் கலவரத்துக்கே காரணம் என்று ஒரு தரப்பு சொன்னாலும், இவர்தான் அந்த நாட்டின் மறுமலர்ச்சிகும் காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
சுத்தத்திற்குப் பேர் போன சிங்கப்பூரிலும், அதற்கு இணையான பேர் வாங்கிய கனடாவிலும், நான் ஏகப்பட்ட குப்பை கூளங்களைப் பார்த்து, படம் எடுத்து வைத்திருக்கிறேன்.
ஆனால், ருவாண்டாவில் அதைப் பார்ப்பது மிகவும் கடினம். காரணம் அந்த நாட்டின் அதிபர் “பால் ககாமே”. ஒரு முறை கிகாலியில் , ஒரு பொது இடத்தில் பிளாஸ்டிக் கலந்த ஒரு குப்பை அதிபர் கண்களில் தென்பட, கிகாலி நகரின் மேயர் அன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அன்று நான் கிகாலியில்தான் இருந்தேன் ( ஆனால், அந்தக் குப்பையை நான் போடவில்லை).
எல்லா இடங்களும் கண்களில் ஒற்றிக் கொள்கிறார்போல் பளீரென்று சுத்தமாக இருக்கும். இது எப்படி சாத்தியமாகியது.
ஒரு 10 வருடங்களுக்கு முன்னர் அதிபர் ஒரு சட்டம் கொண்டு வந்தார். மாதத்தின் கடைசி சனிக் கிழமை, நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் ஏரியாக்களை சுத்தம் செய்ய வேண்டும் . இந்தச் சட்டம் அதிபருக்கும் பொருந்தும். அன்றே பிளாஸ்டிக் தடை பைகளும் தடை செய்யப்பட்டன. அது மட்டுமல்லாது, தெருக்களை சுத்தம் செய்யும் பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டனர். சரியாக தங்கள் பணிகளைச் செய்யாத துப்புரவுப் பணியாளர்கள் தண்டிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்படுகிறார்கள்.
அதிபர் கிகாலியில் இருந்தால் அவரும் வெளியில் வந்து துப்புரவு செய்வதைக் காணலாம். அவர் இதை உண்மையான நோக்கத்துடன் செய்வதால், அதைப் படம் எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ அனுமதிக்கப்படுவதில்லை . ஃபோட்டோகிராஃபர்களும் அன்று தெருவில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்பதால் , அனைவரும் அந்த வேலையில் பிஸி.
அன்று எங்கேனும் பயணம் செல்பவர்களும், வெளிநாட்டினரும் மட்டுமே இதற்கு விதி விலகு.
நான் அடிக்கடி கிகாலி செல்லுபவன். ஒரு சனிக்கிழமை , அதிபர் பால் ககாமே ஷார்ட், டீ ஷர்ட்டுடன், ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ ஒன்று போட்டுக் கொண்டு அவருடைய ஸ்டேட்ஸ் ஹவுஸ் இருந்த தெருவை சுத்தம் செய்வதை நானே என் கண்ணால் பார்க்க நேர்ந்தது. அவருடன் சில அலுவலக அதிகாரிகளும், சில செக்யூரிட்டி அதிகாரிளும் மட்டுமே. அதில் அந்த செக்யூரிட்டி அதிகாரிகளைத் தவிர மற்ற அனைவரும் துப்புரவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அது ஒரு வழக்கமான நிகழ்ச்சி என்பதால் அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. அதை மொபைல் ஃபோனில் ஃபோட்டோ எடுக்க முயற்சித்த என்னை , என்னுடைய டாக்சி டிரைவர் தடுத்து விட்டார். “இதுவும் என்னுடைய பணி. இதை யாரும் ஃபோட்டோ எடுக்கவும், ஊடகங்களில் வெளியிடவும் கூடாது” என்று அவரே உத்தரவு போட்டிருப்பதாகவும் அப்போதுதான் அறிந்தேன்.
அவர்தான் உண்மையான ஹீரோ என்று நான் நினைக்கிறேன்.
நீங்க ??????
வெ.பாலமுரளி