எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் எழுத்துலகின் 50 ஆண்டுகள் பாராட்டு விழா
கிரைம் கதை மன்னன் எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் எழுத்துலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததன் பொருட்டு அவருக்கு வாசகர்கள் சார்பாக 13.10.19 ஞாயிறு மாலை நடத்திய பாராட்டு விழா நடைபெற்றது. விழாவை குங்குமம் ஆசிரியர் திரு. கே. என். சிவராமன் அவர்களும், உதவி ஆசிரியர் திரு. யுவகிருஷ்ணா அவர்களும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
தமிழகத்தில் இந்தத் துப்பறியும் கதைகளின் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர்களில் ராஜேஷ்குமார் மிகவும் முதன்மையானவர். விவேக் ரூபலா என்ற கற்பனை கதாபாத்திரங்களை மிக அழகாக வடிவமைத்து அதை அந்தக் கதாபாத்திரங்களோடு இணைந்து பயணிக்கும் அளவிற்கு, ஒவ்வொரு கதைகளும் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்பதுதான் ஒரு சிறப்புக்குரிய விஷயம். இவர் எழுதும் கதைகளில் அடுத்தது என்ன என்று யூகிக்க முடியாத அளவிற்கு, கதையைக் கொண்டு செல்வது தான் இவரது தனித்தன்மை என்றால் அது மிகையல்ல.
முடிவும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு இருக்கும். அது இவருடைய மிகப்பெரிய ஆற்றல். கிட்டத்தட்ட 50 வருடங்களாகக் கதைகளைக் காவியங்களைப் படைத்து 80 – 90 – களிலும் மிகப்பெரிய பொழுதுபோக்கின் பொக்கிஷமாக நம்மையெல்லாம் பயணிக்க வைத்திருந்தது. கிட்டத்தட்ட 1500 நாவல்கள் என்றால் வியப்பாகவே இருக்கிறது எழுதுவது என்பது அசாத்தியமான ஒரு திறமைதான். அதற்காக மாபெரும் பாராட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
அதில் மின் கைதடி மின்னிதழ் சார்பாகப் பொறுப்பாசிரியர்கள் லதா சரவணன் மற்றும் கமலகண்ணன் இருவரும் கலந்துகொண்டார்கள். அனைவரும் மாலை ஐந்து முப்பது மணி அளவில் விழா அரங்கில் ஒன்று சேர்ந்தார்கள். மிகச்சரியான நேரத்தில் திரு. சிவராமன் அவர்கள் மேடையேறி, தனது அன்பு மொழியால் இந்த விழாவின் நடத்துவதின் காரணத்தைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக உரையாற்றினார்.
அவர் மிகப்பெரிய பத்திரிகையாளராக இருப்பதற்குத் திரு. ராஜேஷ்குமார் அவர்கள்தான் காரணம் என்று முன்மொழிந்தார். அவரும் யுவகிருஷ்ணா அவர்களும் படித்து முடித்து இந்தத் துறைக்குக் காலடி வைக்கும் பொழுது திரு. ராஜேஷ்குமார் அவர்களின் கதைகளே உந்துசக்தியாக இருந்தது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார். இன்று தான் எல்லா வசதிகளுடனும் சொந்த வீட்டில் இருப்பதாக மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவித்தார். தொடர்ந்து, அந்த வீட்டுக்கு இஎம்ஐ கட்டி முடிச்சாச்சு என்று மகிழ்வுடன் சொன்னது, ஆரவாரமாக இருந்தது.