“ஓட்டைக்கை” – சிறுகதை | லதா சரவணன்

 “ஓட்டைக்கை” – சிறுகதை | லதா சரவணன்

ட்டென்று விழிப்பு வந்துவிட்டது புஷ்பாவிற்கு, சீக்கிரம் எழுந்திருக்கணுமே.! எழுந்து செல்போனைப் பார்த்தாள். ’3 மணிக்கு அலாரம் வைத்திருந்தேனே!’ ஏன் அடிக்கவில்லை. சந்தேக உணர்வு மன்னிப்பாய் மாறியது நேற்று இரவு போனை சைலண்ட் மோடில் போட்டு இருந்ததால் – அது தன் கடமையைச் செய்யவில்லை.

பக்கத்தில் அவளின் கணவன். விழித்திருந்தால் ’இபிகோ செக்ஷன் படி கடமை தவறிய…’ என்று வாதத்தை ஆரம்பித்திருப்பான் கேசவன் ஹைக்கோர்ட்டில் முக்கியமான லாயர்களில் ஒருவன். கிட்டதட்ட 20 வருடத்திற்கும் மேல் அனுபவம். ’பிக்கல் பிடுங்கல் இல்லாத ஆளுய்யா.!’ தேவையில்லாம செலவு வைக்கமாட்டாரு, வாய்தான்னு உயிரை வாங்க மாட்டாரு, நல்ல மனுஷன் என்று தேடி வரும் கேஸ்கள் அதிகம், அதைவிடவும், ’இந்தாபாரு எங்கிட்ட ரொம்ப செலவாகும்.! உங்களுக்கு எல்லாம் – அந்த கேசவன்தான் லாயக்கு’ என்று கோர்ட் வட்டாரத்தில் இருந்து திருப்பி அனுப்பும் கேஸ்கள் அதிகம்.

கேவசனுக்கு ’அநாதைரட்சகன்’ என்று பெயர் உண்டாம் – கோர்ட் வளாகத்தில். சிலநேரம் ஐந்து பைசா பெயராத கேஸிற்காக கூட மாதக்கணக்கில் உழைப்பார். கட்சிக்காரனுக்கும் சேர்த்து இவர் செலவு செய்வார். ”நமக்கும் குடும்பம் குழந்தைன்னு இருக்குங்க.! மாசம் எத்தனை செலவாகுது தெரியுமா? பால், மளிகை, மருந்துன்னு.! நீங்க இப்படி ஓட்டைக்கையா இருந்தா என்ன செய்ய?”

’ஓட்டக்கையின்னா…?! என்னம்மா” ஐந்து வயது அமுதாவின் கேள்விக்கு, கைவிரல்களை விரித்து சாதத்தில் ரசத்தை பிடிக்க சொல்வாள் புஷ்பா. வழிந்தோடும் ரசத்தைக் காட்டி ”பிடிச்சி வைக்க முடிஞ்சதா – இதுதான் ஓட்டைக்கை.!” என்பாள். ஐந்து வயது மகளுக்கு புரியும்படி உவமானம் சொல்லிய மனைவியை பார்த்து சிரிப்பான் கேசவன்.

”சிரிக்காதீங்க.! எனக்கு பத்திக்கிட்டு வர்றது. அங்கங்கே எப்படியெல்லாம் சம்பாரிக்கிறாங்க? நீங்க என்னடான்னா? வர்ற வருமானம் கைக்கும் வாய்க்கும் போயிடுது. நமக்குன் னு ஒரு வீடு வேணுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.”

”அததுக்கு காலநேரம் வந்தா அமையும் புஷ்பா. பொறுமையா இரேன்” கேவசனின் குரல் எந்தக் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ…!

மாதம் முதல் தேதியில் இருந்து ஐந்து தேதிக்குள் வாடகைக்கு என்று பணத்தை எடுத்து வைக்கும் ஒவ்வொரு மாதமும் அவளின் வலி.! யாரும் அறியவில்லை என்பது நிஜமே.

நடுத்தரக் குடும்பங்களின் தவிர்க்க முடியாத விஷயங்களில் சொந்த வீட்டு கனவுகளும் ஒன்று.

”ஏங்க எழுந்திருங்க நேரமாச்சு அய்யர் வந்திடுவாரு!”

”கொஞ்ச நேரம் தூங்கறேனே…”

”நல்லாயிருக்கு.! இத்தனை நாள் தூங்கினது போறாதா? காலையிலே ஹோமத்திலே நாம உட்கார வேண்டாமா? நான் போய் பிள்ளைகளை கிளப்பறேன். நீங்க அய்யருக்கு போன் பண்ணுங்க. அப்பறம் காலையிலே பந்தலும் வாழைமரமும் கொண்டு வரேன்னு சொன்னாங்க அவங்களுக்கும் பேசிடுங்க. பூஜை முடிந்ததும் டிபனுக்கு ஆள் சொல்லிட்டீங்களா ? வர்றவங்க எல்லாருக்கும் சின்னதா ஒரு நினைவுப்பரிசு, தாம்பூலம் எடுத்து பேக் பண்ணி வைச்சிருக்கேன். மறக்காம அமுதாவை விட்டு கொடுக்கணும். உங்க தங்கச்சியை வரச்சொல்லியிருந்தேன் அவளுக்கும்….. என்னங்க என்னையேப் பார்த்துட்டு இருக்கீங்க.!?”

”கொஞ்சம் மூச்சு விடு புஷ்பா.!”

”ஆமா…பெரிய வக்கீலுன்னுதான் பேரு…ஆள் அம்புன்னு ஒண்ணும் இல்லை, திருட்டுப் பயலுங்க சகவசாத்திற்கே உங்களுக்கு நேரம் சரியாயிருக்கு. இந்த பூஜைக்கு ஒரு துரும்பைக் கிள்ளி போட்டு இருக்கீங்களா? பேச நேரம் இல்லை, முதல்ல நான் சொன்னவங்களுக்கு எல்லாம் போன் பண்ணுங்க. பீரோவில புடவைத்தட்டுக்கு அடியில் பத்தாயிரம் பணம் வச்சியிருக்கேன். தேவைக்கு எடுத்துக்கோங்க அப்பறம் கணக்கு தரணும்.”

”சம்பாரிச்சித் தரவன்கிட்டே கணக்கா?”

”அதனால்தான் இப்படி முட்டிமோதி இந்த வீட்டை வாங்க முடிந்தது. இல்லைன்னா உங்க ஓட்டைக்கைக்கு அதெல்லாம் வாய்ப்பே இல்லை.!” அவள் தாடையில் வேகமாக ஒருமுறை இடித்துவிட்டு பிள்ளைகளை நோக்கி நகர்ந்தாள்.

வீட்டுவேலை செய்யும் கனகு புதுத்துணி சரசரக்க வந்தாள். ”பார்த்தியாம்மா நான் கரெக்ட்டா வந்திட்டேன்.”

”பதினைந்து நிமிஷம் லேட்டு.! கனகுபோ போய் அடுப்பை இலேசா கழுவி பொட்டு வைச்சிடு சாமி படத்துக்கு பூ போட்டு எல்லாம் எடுத்து நடு ஹால்ல வை நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன். அப்பறம் அய்யாகிட்டே கேட்டு சந்தனம்…உதிரிப்பூ….. பன்னீர் எல்லாம் வாங்கி வாசல்ல டேபிள்ல வைச்சிடு…..!”

”சரிம்மா.!”

புஷ்பா பிள்ளைகளைக் கிளப்பி தானும் குளித்து பட்டுடுத்தி வரும்போது கேசவனும் முன்தினம் எடுத்த பட்டுடையில், இருவரும் ஒருவரையொருவர் ஒரு கணம் மெய் மறந்து பார்த்துக் கொண்டனர். எத்தனை நாள் ஏக்கம் பலித்திருக்கிறது.

”வாங்கோ….என்ன அப்படியே நின்னுட்டீங்க? நாழியாகிறது,” அய்யர் அவசரப்படுத்தினார். ஓமக்குண்டத்தில் நெய் வார்க்கப்பட்ட மணம் வீடு முழுவதும், ”மாலையைப் போட்டுக்கிட்டு – நீ உட்காருக்கா.! அத்தானோட. வந்தவங்களை எல்லாம் நான் கவனிச்சிக்கறேன்.” தம்பி சாமியின் குரல்

”அம்மா மொட்டை மாடியில் போய் விளையாடட்டுமா?””வேண்டாம்டா வீட்டுக்காரங்க திட்டுவாங்க?!”

”வீட்டுக்கு ஒரு வண்டிதான் கணக்கு. உங்க பையன் புதுசா வாங்கினதுக்காக எல்லாம் ரூல்ஸை மாத்த முடியாது.”

”ஏம்மா பத்து மணி வரைக்கும் லைட் எரியுதே நிறுத்துங்க.”

”சத்தமா பாட்டு வைக்காதீங்க.!” மத்தவங்க எல்லாம் குடித்தனம் பண்ண வேண்டாமா?”

“இத்தனை விருந்தாளிகள் வந்தா தண்ணிக்கும் கரெண்டுக்கும் எத்தனை செலவாகும்.”

சிறுவயதில் இருந்து முகமும் மனமும் சுருங்க இவனும் அனுபவித்திருக்கிறானே, எலி வலையா இருந்தாலும் தனி வலை வேணும் அம்மா பெருமூச்சோடு அடிக்கடி சொல்லுவாள். இன்று அம்மா மட்டும் இருந்திருந்தால் எத்தனை மகிழ்ந்திருப்பாள்.

அய்யர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தார். வெளியே வெளிச்சம் எட்டிப் பார்க்க தொடங்கியது. தம்பதி சமேதராக இருவரும் அமர்ந்தார்கள். யாகம் வளர்க்கப்பட புஷ்பாவின் கண்களில் கண்ணீர்.

”என்னக்கா கண் எரியுதா?”

”இல்லே சாமி எத்தனை வருஷ கனவு இனிமே நாம யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை பாரு. எனக்கு இன்னைக்குத்தான்டா ஆகஸ்டு 15.!”

அய்யர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையைத் தொடங்கினார். டிங் டிங் பூஜைமணி ஒலித்தது. ”சாமி.! நான் பூஜையில் உட்கார்ந்திட்டேன். அதனால நீதான் வர்றவங்களை கவனிக்கணும். சாப்பிடாமல் யாரையும் போக விட்டுடாதே?!”

”இதை நீ சொல்லணுமாக்கா.! நான் பார்த்துக்கிறேன்.” கண்களை மூடி தெய்வத்திற்கு நன்றி சொன்னாள் புஷ்பா….மீண்டும் டிங் டிங் மணியோசை

”புஷ்பா யாரோ வந்திருக்காங்க போய் பாரேன் கேசவனின் குரல்….?!”

”இந்த சாமி எங்கே போய் தொலைந்தான். வந்தவங்களை கவனிக்காமல்…. புஷ்பா எழுந்து கதவருகே வந்து தாழை விளக்கினாள். எதிரே கேசவனின் சித்தப்பா மகனும் அவன் மனைவியும்.”

”வாங்க வாங்க….ஒரு நா முன்னாடி வரவேண்டாமா? நெருங்கின சொந்தம் இப்படித்தான் கரெக்டா நேரத்துக்கு வர்றதா?” புஷ்பாவின் பேச்சில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

”என்ன அண்ணி.! நாங்க சொல்ல வேண்டியதை நீங்க சொல்றீங்க? அண்ணா எங்கே தூங்குறாங்களா?”

”இல்லையே.! இதோ பூஜையிலே…!”  புஷ்பா காட்டிய திசையில் – சற்று நேரம் முன்பு வரையில், யாகம் வளர்த்த ஐய்யரைக் காணவில்லை, பளபளவென்று ஒளிர்ந்த விளக்குகள் இன்றி ஒரு ஜீரோவாட்ஸ் பல்பு தூங்கி வழிந்தது. அவசரமாக தன்னை கவனித்தாள் கசங்கிய பழைய நைட்டியில். அப்போ நான்.! அவர்.! .கிரகப்பிரவேசம்..! எல்லாம்…..

”அண்ணி.! என்னாச்சு உங்களுக்கு ஏதோ கனவுலே இருந்து முழிச்சாமாதிரி இருக்கீங்க? இந்தாங்க வர்ற புதன்கிழமை பெரம்பூர்ல எங்க வீடு பால்காய்சிறோம். நீங்க அண்ணா எல்லாரும் குடும்பத்தோட வந்திடணும். பெரிய அக்காவீட்டுக்கு பத்திரிக்கை கொடுத்துட்டு நேரா இங்கேதான் வர்றோம்.” அவர்கள் பேசிக்கொண்டே இருக்க புஷ்பா கையில் வாங்கியப் பத்திரிக்கையோடு வெளியே ஓடினாள்.

பந்தலும் வாழைமரமும் கண்களுக்கு தெரியவில்லை…

”அமுதாம்மா.! டேங்க் கழுவப் போறாங்களாம். மதியம் வரைக்கும் தண்ணி வராது சீக்கிரம் தண்ணி பிடிச்சி வைச்சிக்க சொல்லி – ஹவுஸ் ஓனர் சொல்லிட்டுப் போனாங்க” ஏதோ ஒரு குரல்.

புஷ்பாவின் கண்களில் கண்ணீர் கையிலிருந்த பத்திரிக்கை அட்டையில் அலங்கரிக்கப்பட்ட வீட்டை நனைத்தது புஷ்பாவின் விரலிடுக்கில் வழிந்தது. ஓட்டைக்கையின் கனவு கலைந்தது. இது ஏதும் அறியாமல் கேசவன் தன் அருகில் புஷ்பாவை தேடிக் கொண்டு இருந்தான்.

(முற்றும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...