தமிழ் ரைட்டர்களால் ராயல்டியால் வாழமுடியாதா?
தமிழ் ரைட்டர்களால் ராயல்டியால் வாழமுடியாதா?
புத்தகக் கண்காட்சி நெருங்கிவிட்டது. புதிய புத்தகங்கள் குறித்து அறிவிப்புகள், அறிமுக விழாக்களென எழுத்தாளர்களுக்கேயான கொண்டாட்டங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. போதுமான கவனம் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைப்பதில்லை, தமிழ் சமூகம் முழுக்க சினிமாவின் பின்னால் செல்லக்கூடியதாக இருக்கிறதென்கிற கருத்தில் உண்மை உள்ளதென்றாலும் இன்னொரு புறம் சினிமாவின் நிலை இலக்கியத்தினை விடவும் மோசம். பிரபல இயக்குநர் அல்லது நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே இங்கு கவனிக்கப்படுகின்றன. அவை வெறும் ஒரு சதவிகிதம். தொன்னூற்றி ஒன்பது சதவிகித திரைப்படங்களின் நிலை என்பது கண்ணீர்க் கதைகள். ஒரு புத்தகம் ஏற்படுத்தும் நஷ்டத்தை விடவும் ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் நஷ்டம் பல்லாயிரம் மடங்கு அதிகம். ஒரு தோல்விப்படம் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் எதிர்காலத்தைக் காலி செய்துவிடுகிறது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதென்பதுதான் யதார்த்தம்.
நிற்க.
நான் உரையாட விரும்பியது இதைக் குறித்தல்ல. காலங்காலமாக இலக்கியத்தில் நிலவி வரும் முக்கிய சிக்கலைக் குறித்து. ஏன் தமிழ் ரைட்டர்கள் ராயல்டியால் வாழ முடிவதில்லை. புதுமைப்பித்தன் துவங்கி இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளன் வரை இந்த நிலை ஏன் மாறவில்லை. எழுத்து ஒரு கலைஞனை உடல் ரீதியாகவும் மனரீதியாகம் பெரும் உழைப்பைக் கோரக்கூடியதொன்று. புனைவோ அ-புனைவோ எதுவாக இருப்பினும் ஒரு புத்தகத்திற்காக ஒருவன் ஏராளமாக மெனக்கெட வேண்டியுள்ளது. ஓரிரு வருடங்கள் உழைப்பிற்குப்பின் வெளியாகும் அந்தப் புத்தகங்கள் ஏன் பெரும் வாசகர்களைச் சென்றடைவதில்லை. அதிலும் சமீபத்திய வருடங்களில் சமூக வலைதளங்களின் பரவலாகத்திற்குப்பின் நிறைய விளம்பரப்படுத்தப்படுகிறது ஆனால் வியாபாரமாவதில்லை. ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகள் ஒரு நூல் விற்பனையாவதென்பது இன்றைக்கும் மலைப்பான காரியமாக இருப்பதன் காரணங்களை நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஸ்பாட்டிஃபை செயலியின் இந்தியக் குழு வெளியிட்ட அறிக்கையில் ‘இந்தியர்கள் இலவசமாக பயன்படுத்துவதையே விரும்புகிறார்கள் இந்த செயலிக்குக் கட்டணம் செலுத்துவதை விரும்புவதில்லை’ என துயரத்தோடு குறிப்பிட்டிருந்தார்கள். யோசித்துப் பார்த்தால் இதுதான் பெரும்பானமையினரின் மனநிலை. நல்ல திரைப்படமா, டெலக்ராம் லிங்க்கில் பார்த்துவிட வேண்டும், நல்ல புத்தகமா பி டி எஃபில் படித்துவிட வேண்டும். இன்னொரு பக்கம் இதே பயனாளர்கள் முப்பதாயிரத்திற்கும் நாற்பதாயிரத்திற்கும் செல்ஃபோன் வாங்குகிறார்கள்.
நண்பர் அபிலாஷ் சில நாட்களாகவே இலக்கியவாதிகளின் மீது சமூகம் கொள்ளும் விலக்கம் குறித்து எழுதிவருகிறார். கலைஞர்கள் ஏன் உதாசினப்படுத்தப்படுகிறார்கள் என்கிற கேள்வி ஒரு பக்கம் எழும்போதே இன்னொரு பக்கம் இன்ஸ்டாக்ராமில் ஒரு சிறுமி முப்பது நொடி நடனத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் கட்டணம் கேட்பதாக வரும் செய்தியும், கன்னியாகுமரியில் சிலர் ஜி.பி முத்துவிற்கு சிலை வைத்திருப்பதாக வரும் செய்தியும் இந்த சமூகத்தின் மீது அருவருப்பான ஒரு பிம்பத்தையே உருவாக்குகிறது. வெகுசனங்களின் மனநிலை இப்போது இருப்பதைப்போல் மிக மோசமாக இதற்குமுன் ஒருபோதும் இருந்ததில்லை.
தமிழ் சமூகத்தில் முழுநேர எழுத்தாளனாக வாழமுடிவது தற்கொலைக்கு ஒப்பான காரியம். இங்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் அரசு பணியில் இருக்கிறார்கள். குறிப்பாக பள்ளி கல்லூரி ஆசிரியர்கள். சிலர் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எழுத்து அறிவார்த்தமான பொழுதுபோக்கு. அல்லது வாழ்வின் பிடித்தமானதொரு சிறு பகுதி. முழுநேர எழுத்தாளனுக்கான அலைச்சலோ தவிப்புகளோ தோல்விகளோ பதற்றங்களோ எதுவும் இவர்களுக்கு இருப்பதில்லை, அப்படி இருக்க வேண்டுமென்கிற அவசியமுமில்லை. முழுநேர எழுத்தாளன் தோல்வியுற்ற ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய துயரம் இருப்பதாலயே பலரும் அதை முயற்சிக்கத் துணிவதில்லை. ஒரு சிலர் துணிந்தாலும் சில வருடங்களிலேயே வாழ்வை பாதுகாத்துக் கொள்ள அடிப்படையான ஏதோவொரு துறையில் தங்களைப் பொருத்திக் கொண்டுவிடுகிறார்கள்.
ஒரு எழுத்தாளன் எல்லாமுமாக இருக்க வேண்டும். அவனுக்கு தச்சுவேலைகள் செய்வது குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும், மதுக்கூடத்தில் நடக்கும் சண்டைகள் குறித்தும், கள்ளக்காதலில் நிகழும் கொலைகள் குறித்தும், மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் நோயாளியாகவும் மருத்துவராகவும் இருப்பது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். இதனால் அவன் எல்லாவற்றைக் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும் தான். அப்படி ஒருவன் எல்லாவற்றைக் குறித்தும் தெரிந்துகொள்ள எந்த வேலைக்கும் செல்லாதவனாக எல்லா வேலை செய்கிறவர்களையும் தேடிச் செல்கிறவனாக அவர்களோடு பயணிக்கிறவனாக இருக்க வேண்டும். ஒரு வியாபாரி மருத்துவரைப் பற்றிக் கதை எழுதும்போது அவன் ஆழ்மனம் என்னவாக இயங்குமென யோசியுங்கள்… ஒரு ஆசிரியர் கொலைக் குற்றவாளியைக் குறித்து எழுதும்போது அந்த பரிமாற்றம் என்னவாக இருக்கும். எழுத்தாளன் அவனாக வாழவேண்டிய ஆரோக்கியமானதொரு சூழல் உருவாக வேண்டியது அவசியம். இல்லாதபட்சத்தில் ஆரோக்கியமான இலக்கியம் உருவாகாது. வளமான இலக்கியத் தொடர்ச்சி இல்லாத ஒரு சமூகம் அதன் ஆன்மாவை முற்றாக இழக்கத் துவங்குகிறது. மனிதர்களைக் குறித்த அடிப்படை புரிதல்களே இல்லாத ஒரு தலைமுறை உருவானால் இங்கு எல்லாமே சரி தவறுகளுக்குள் வைத்துப் பார்க்கப்படும். ஒரு எழுத்தாளன் தனது பிழைப்பிற்காக தன்னை சமரசம் செய்துகொள்ளத் துவங்கும்போது அவன் படைப்புகளும் சமரசங்களோடு வெளிப்படத் துவங்கலாம்.
பத்து வருடத்திற்கு முன்பு இருந்த ஒரு மனிதனின் வாழ்க்கை முறையும் இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை முறையும் ஒன்றல்ல. உணவு உடை என எல்லாவற்றிலும் சமூகத்தின் தேர்வுகள் மாறிவிட்டிருக்கின்றன. இலக்கியத்தைத் தவிர மற்ற எல்லாமுமே நுகர்தல் அதிகமாகியிருக்கிறது. புத்தகங்கள் நிறைய விற்கவில்லையா என்றொரு கேள்வியைக் கேட்கலாம். அந்தக் கேள்விக்குப் புரியும்படியாக பதில் சொல்வதென்றால் முதல் பத்தியில் தமிழ் சினிமாவின் சூழல் குறித்து நான் எழுதியிருப்பதை இன்னொரு முறை வாசிக்கவும். ஒரு எழுத்தாளனின் ஒரு வருட ராயல்டியைக் கொண்டு குடும்பத்தோடு நல்ல உணவகத்தில் ஒரு நேர உணவுக்குச் செல்ல முடியாது.
ஒரு புத்தகத்தின் விலையில் பத்த சதவிகிதம் எழுத்தாளனுக்கான ராயல்டி. அதாவது நூறு ரூபாய் கொண்ட ஒரு புத்தகத்தில் பத்து ரூபாய். இதையும் தராத பதிப்பங்கள் உண்டென்பது தனிக்கதை. நாம் ராயல்டியைக் கேட்டால் பதிப்பாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியைத் தடுக்கக் கூடும். உங்களுக்கு எதிராக தனது அடியாட்களை வைத்து சமூக ஊடகங்களில் இண்டர்நெட் பொறுக்கி என்று எழுதக்கூடும். அதனால் அப்படியான இலக்கியத் திருடர்களை பொருட்படுத்தாமல் செல்வது நலம். ஓகே.. ராயல்டி கதைக்கு வருவோம். ஒருவேளை உங்கள் புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்றாலும் வருட முடிவில் அதற்கு வரக்கூடிய தொகை பத்தாயிரம் ரூபாய். மற்ற மொழிகளில் எழுத்தாளன் பொருட்படுத்தப்படுகிறான். அரசாலும் கல்வி நிறுவனங்களாலும் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் அவர்களுக்கு நல்ல வெகுமதிகள் கிடைக்கின்றன. தனியார் நிறுவனங்கள் அவர்களைக் கவனித்துக் கொள்கின்றன. இங்கு நிலைமை அப்படியே தலைகீழ். கல்லூரி பல்கலைக் கழகம், பள்ளிகள் என எங்கு எடுத்தாலும் அரங்கங்களை நிறைப்பது டிவி பிரபல பேச்சாளர்கள். அல்லது தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி பிரபலங்கள். லட்சங்களில் அவர்களுக்கு சன்மானம். அபூர்வமாக ஒரு எழுத்தாளன் அழைக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாய். சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். அன்று என்னோடு ஒரு தொலைக்காட்சி பிரபலமும், நிகழ்ச்சி முடிந்து கிளம்பியபோது நான் வற்புறுத்தி கேட்டதற்காக என்னிடம் ஒரு கவர் கொடுக்கப்பட்டது. கவரைப் பிரித்தால் இரண்டாயிரம் ரூபாய். என் வீட்டிலிருந்து அந்த கல்லூரிக்கு வாகனத்தில் போய்வரச் செலவு ஆயிரத்து இரநூறு ரூபாய். என்னோடு பேசிய இன்னொரு பிரபலத்திற்கு ( அவர் பேசவில்லை நகைச்சுவை துணுக்குகள் சொன்னார்.) அவருக்கு ஒரு லட்ச ரூபாய். அந்தக் கல்லூரியில் ஒரு மருத்துவ சீட்டுக்கு அப்போதே ஒரு கோடி ரூபாய் கேபிடேஷன் கட்டணம். ஆனால் எழுத்தாளன் விருந்தினராகச் சென்றால் இரண்டாயிரம் ரூபாய்…
இன்னொரு புறம் சமீபத்திய வருடங்களில் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. பத்து நாட்களும் உரைகள் உண்டு, மேலே சொன்ன அதே தொலைக்காட்சி பிரபல பேச்சாளர்கள். அவர்களின் பிரபலத்தன்மையைக் கொண்டு ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் வரை கட்டணம் கொடுக்கப்படுகிறது. ஐயா பத்தாயிரம் ரூபாய்க் கட்டணத்தில் ஐந்து எழுத்தாளர்களை பேச அழைக்கலாமே? கேட்டல் எழுத்தாளர்களுக்கு பேச வராது என்கிறார்கள். பரவாயில்லை அவர்களைக் கட்டுரை எழுதி வந்து வாசிக்கச் சொல்லுங்க. அந்த எழுத்தாளனை சமூகத்துக்கு அறிமுகப்படுத்தும் விதமாக் அவர் பேசும் அரங்கில் அவரது சிறந்த படைப்பைக் குறித்த அறிமுகங்களை அச்சாக்கி மக்களிடம் விநியோகியுங்கள். பிரபல பேச்சாளர்கள் விமானங்களில் பறந்தபடி பல லட்சங்கள் ஒவ்வொரு மாதமும் ஈட்டும் சூழலில் தான் முப்பது நாற்பது வருடம் எழுதிய எழுத்தாளர்கள் இரண்டாம் வகுப்பு ரயிலில் பயணிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.
தனது அடிப்படைத் தேவைகளுக்கே போராடக்கூடிய எழுத்தாளன் எதிர்கொள்ளும் மனக்கொந்தளிப்புகளும் போராட்டங்களும் குரூரமானவை. விரிவாக எழுதினால் டெல்க்ராமில் திருட்டு பி.டி.எஃப் பில் படிக்கும் பெருங்கூட்டத்திற்கும் இந்த எழுத்தாளர்களைப் பொருட்படுத்தாத கல்வி நிறுவனங்களுக்கும் எரிச்சல் வரக்கூடும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஒரு எழுத்தாளன் தன்னை முழு நேர எழுத்தாளன் என்று சொல்வதற்குரிய ஆரோக்கியமான சூழலை அவனது நாற்பது வயதிற்குள்ளாவது உருவாக்கித் தாருங்கள். ஒரு மனிதனுக்கு எத்தனையோ இருக்கையில் கலையைத் தேர்ந்தெடுப்பான் எனில் அவன் மதிக்கப்பட வேண்டியவன். அங்கு வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி ஒரு சமூகம் அவனது பங்களிப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கவேண்டும். அந்த குறைந்தபட்ச அங்கீகாரம் தான் அவனை உன்னதமான கலைஞனாக்க உந்தித் தள்ளும். பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், பத்திரிகைகள் மட்டுமில்லாமல் அரசும் கலை இலக்கியத்தில் இயங்குகிறவர்களின் மீது அக்கறை செலுத்த வேண்டும். இல்லாது போனால் நான் செத்து எனக்குப் பிறகு வரும் அடுத்த தலைமுறையும் இதே போன்றதொரு புலம்பலையே எழுதக்கூடும். எனக்கும் முன்னால் அறுபது வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தன் தனது நோயிக்கு சிகிச்சை செய்து கொள்ள ஆளுக்கு ஒரு ரூபாய் அனுப்புங்கள் வைத்தியம் பார்த்துக் கொள்கிறேன் எனக் கேட்டபோது அவருக்கு வந்து சேர்ந்த தொகை பதினாலு ரூபாய்…. எனக்கு முன்னால் பிரபஞ்சன் இன்னும் கொஞ்சம் பசியோடு இல்லாமலிருந்தால் ஏராளமாக எழுதியிருக்க முடியும் என்று சொன்னதையும் கோபி கிருஷ்ணன் நோய்மையோடும் பசியோடும் இறந்து போனதும் இனியும் தொடரக்கூடாது என்பதுதான் எழுத்தாளனாக எனது ஒரே விருப்பம்.
லக்ஷ்மி சரவணகுமார்