தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாளின்று

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாளின்று😢

1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்தவர் தோழர் பி.ராமமூர்த்தி.1927இல் இங்கிலாந்திலிருந்து சைமன் என்பவர் இந்தியாவில் சுதேசித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தம் காண இந்தியா வந்தார். அவர் வரவைகாங்கிரசார் எதிர்த்தனர். நாடு முழுவதும் “சைமன் திரும்பிப் போ” என ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது கங்கை நதியில் படகு மூலம் நடந்த போராட்டத்தில் பி.ராமமூர்த்தி முக்கிய பங்கேற்றார். பகத் சிங் தொடங்கிய பாரதி நவ

ஜவான் சபா எனும் அமைப்பில் ராமமூர்த்தி ஓர் உறுப்பினர் ஆனார்.

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். அங்கு விடுதலை ஆன பிறகு சென்னைக்கு வந்து இங்கு அரசியல் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.1939இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார். அவரும் வெற்றி பெற்றார். காந்தி பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என்று ஒப்புக் கொண்டார். 1939இல் ஜெர்மனிபோர் தொடுத்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஹிட்லரின் இந்த யுத்தம் ஏகாதிபத்திய யுத்தம் என்று முதலில் கம்யூனிஸ்டுகள் வர்ணித்தனர். யுத்த எதிர்ப்புக் கொள்கைக்காக பல கம்யூனிஸ்டுகள் கைதானார்கள்.1940இல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932இல் நடைபெற்றது. இது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில்இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார். சென்னையில் இவர்கள் ஒரு முகாம் அமைத்து, அங்கிருந்து அரசுக்குஎதிரான வெளியீடுகளை சுற்றுக்கு விட்டும், பிரச்சாரங்களில் ஈடுபட்டும் கட்சிப் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்காணித்த போலீஸ் இவர்களைக் கூண்டோடு கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் ஏ.எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், ஆர். உமாநாத், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள்.

1941இல் இவர்கள் எல்லோரும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெல்லாரி சிறை கொடுமையான சிறையாக இருந்த போதிலும் அங்கு ராமமூர்த்தி மற்றகைதிகளுக்கு மார்க்சிசம் பற்றிய வகுப்புகள் எடுத்து வந்தார். 1946இல் ராமமூர்த்தி மதுரையில் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது ராமமூர்த்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் தொழிலாளர்கள் அவரைக்காப்பாற்றி விட்டனர். எனினும் மதுரை சதி வழக்கு என்றுஒன்றை இவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்தது. அதிலும் இவர் விடுதலையானார். சுதந்திரம் வரும் நேரம் இவரும் சுதந்திரமாக வெளிவந்தார். சுதந்திரத்துக்குப் பிறகுகம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். பின்னர் இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

1952இல் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கு தொகுதியிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும்அமைத்து, சில எதிர்க் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன்சேர்த்துக் கொண்டு அரசு செய்யலானார். பி.ராமமூர்த்திதான் எதிர் கட்சித் தலைவர். 1952இல் இவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னி, வைகை என்று இரண்டுபெண்கள். 1953இல் பி.ராமமூர்த்தி மதுரையில் நடந்த கட்சி காங்கிரசில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக ஆனார். கட்சியின் பத்திரிகையான “நியு ஏஜ்” இதழின் ஆசிரியராகவும் ஆனார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் பெரும் தலைவராகவும் இவர் விளங்கினார். பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு தொழிற்சங்கம் அமைந்தது. சிஐடியு அமைப்பை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி. இந்தியாவின் கம்யூனிஸ்ட் தலைவராக பி.ராமமூர்த்தி விளங்கினார். இவர் 1987 இதே டிசம்பர் 15 அன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!