தமிழ் படத்தின் படப்பிடிப்புகள் “இந்தியாவில் எந்த இடத்திலும்நடைபெறாது” – ஆர்.கே செல்வமணி..! | நா.சதீஸ்குமார்
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதுபோன்று இதுவரை நடந்த நிகழ்வில் ஜெயம் ரவி, வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதனிடையே தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். இதையடுத்து திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 24ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ் திரைப்படத் துறையை சார்ந்த அனைத்து சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது மேடையில் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, “இந்த விழா நிச்சயமாக ஒரு சவாலாக அமையும். 1997ல் கார்கில் ஷோ நடத்தினோம். அதிலிருந்து கிட்டத்தட்ட 30 வருஷமாக பல்வேறு கலை நிகழ்சிகள் நடத்தியுள்ளோம். ஆனால் இந்த கலைஞர் 100 விழா, எல்லா விழாவை விட மிக சிறப்பான விழாவாக அமைய முடிவெடுத்துள்ளோம். அதற்காக வருகின்ற டிசம்பர் 23 மற்றும் 24 அன்று இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். அதே போல் அஜித், விஜய் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுக்கவுள்ளோம். விரைவில் அவர்களை பார்க்கவுள்ளோம். தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது இந்திய திரைத்துறையை சேர்ந்தவர்களையும் இணைக்க முயற்சி செய்துள்ளோம். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அவர் முதலைச்சராக பதவி ஏற்று தமிழ் திரைப்படத் துறையின் சார்பாக கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. இதற்கு ஒத்துக்கொண்ட முதல்வருக்கு எங்கள் நன்றி.” என்றார்.