கலை விமர்சன எழுத்தாளர் #தேனுகா நினைவு நாள்
கலை விமர்சன எழுத்தாளர் #தேனுகா நினைவு நாள்
காற்றில் வரைந்த சித்திரம்- பிருந்தா சாரதி
கல்லூரியில் படித்த நாட்களில் தேனுகாவை சந்திக்கப்போகும்போது அவர் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் இருப்பார். பாரத ஸ்டேட் வங்கியின் காசாளருக்கான கவுன்ட்டர் அது. என்னைப் பார்த்ததும் எழுந்து கண்ணாடிச் சுவர் தாண்டி நடந்து வருவார். தனது மென்கரங்களால் கைகொடுத்து வரவேற்பார். வங்கி வாசலில் இருக்கும் தள்ளுவண்டி காபி கடையில் ஸ்டிராங்காக இரண்டு காபி வாங்கி இருவரும் பேசியபடி பருகுவோம்.
அவர் அப்போது பேசியவை எல்லாம் என் அறிவு அதுவரை சந்தித்திராதவை.
பெரும்பாலும் ஓவியம், சிற்பம், கட்டடக் கலை ஆகியவையும் அவற்றின் பின்னணியில் இருந்த தத்துவங்களும் இஸங்களும். சிலவார்த்தைகளையும் பெயர்களையும் நினைவுபடுத்தி சொன்னால் டி கன்ஸ்டரக்ஷன், ஆல்பர்ட் காம்யூ, நீட்ஸே, நியோ ப்ளாஸ்டிசிசம், பியத் மோந்திரியான், வான்கா முதலியவை.
ஒரு சில மணித்துளிகள்தான். அதற்குள் காற்றில் அவர் வரையும் சித்திரங்களின் பேரழகின் மீது மோகம்கொண்டு சிலையென நிற்பேன். மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவல் பெருகும்.
அவரும் அப்போதுதான் சில கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருந்தார். டாக்ஸிடெர்மிஸ்டுகள் தேவை, #தோற்றம்பின்னுள்ளஉண்மைகள், ஆன்ம ஒத்தடங்கள் போன்ற அவரின் ஆரம்பகாலக் கட்டுரைகள் கட்டுரைத் தன்மையினைத் தாண்டி படைப்புச் சித்திரங்களாக மிளிர்ந்தன. கவிதைகள்மீது பெருங்காதல் கொண்டிருந்த எனக்கு அவரது மொழி அழகின்மீது மோகம் உண்டானது.
அப்போது கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். மாலை வேளைகளில் கல்லூரியில் இருந்து நேரடியாக வீடு திரும்பியதாக ஒரு நாளும் நினைவில் இல்லை. நேரடியாக காந்தி பூங்கா வருவேன். அங்கே எழுத்துலக வேந்தர்கள் எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, சில நேரங்களில் தஞ்சை பிரகாஷ் ஆகியோர் வந்திருப்பார்கள். தேனுகா வங்கியில் இருந்து பூங்கா வந்திருப்பார். வரும்போது வெற்றிலைப்பாக்கு வாசனை சுண்ணாம்பு வாங்கி வருவார்.
எம்.வி.வி வெற்றிலை போடும் அழகு ஒரு சிறுகதை சுவாரஸ்யம். கரிச்சான் குஞ்சு பேசிக்கொண்டிருக்கிறாரா, வெற்றிலை பாக்கு போடுகிறாரா..? இரண்டுக்கும் பிசிறே இல்லையே என்று நாங்கள் கமெண்ட் அடிப்போம். மாபெரும் ஆளுமைகளான அவர்கள் எங்கள் சிற்றறிவைப்பற்றிக் கவலைப்படாமல் வால்மீகி ராமாயணத்தைப்பற்றியும் தாகூரைப்பற்றியும் சரத்சந்திரர் பற்றியும் பேசிக்கொண்டிருப்பார்கள். காது கேட்கும் என்கிற ஒரே ஒரு தகுதிதான் எனக்கு.
அவர்கள் முன் நானும் ஒரு படைப்பாளி என என் கவிதைகளைக் கூறுவேன். சிலாகிப்பார்கள் அவர்கள். கவிதைகளின் தகுதி என பேதைமைகொள்வேன் அப்போது. அவர்களின் பெருந்தன்மையை இப்போது நினைத்துப் பார்க்கும்போது இதயத்தின் அடியில் ஒரு நெகிழ்ச்சி உருவாகிறது.
அப்போது தேனுகாவின் கட்டுரைகளைப் படித்து எம்.வி.வி-யும் கரிச்சான் குஞ்சுவும் பெரிய அளவில் பேசியதால் தேனுகாவுடன் நட்புகொள்ளும் ஆவல் உருவானது. அதனால் அடிக்கடி வங்கிக்குச் சென்று அவரைக் காணத் தொடங்கினேன். அறையில் அவர் முன் அப்போது கிடக்கும் புத்தகங்கள் சில நினைவுக்கு வருகின்றன. அவற்றில் ஒன்று ‘சிவானந்த நடனம்’ எனத் தமிழில் மொழிபெயர்ப்பான ‘Dance of Shiva’ என்ற ஆனந்த குமாரசாமியின் புத்தகம். வேறு சில ஆங்கிலத் தலைப்பில் வெளிவந்திருக்கும் கட்டடக் கலை நூல்கள்.
‘அது என்ன..?’ என்று ஒரு கேள்விதான் கேட்கவேண்டும். பின்வரும் பத்து நிமிடங்களில் அதன் சாரம், அதன் வரலாறு, அதன் உள்ளடக்கம் என்று அழகாக எடுத்துரைப்பார். படிக்காமல், அதற்கு நேரம் செலவழிக்காமல் ஒரு மாபெரும் ஞானம் நம்மை வந்து சேர்ந்துவிடும்.
பிறகு, நான் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடி சென்னை வந்து சாலிகிராமம் மற்றும் எம்.ஜி.ஆர் நகரில் ஒரு அறையில் லிங்குசாமியுடன் தங்கி இருந்தபோது தேனுகா, தனது த்மைக்கேல் ஏஞ்சலோ லியானார்டோ டாவின்சி ஆகிய நூல்களை அனுப்பிவைத்தார். அதை அஞ்சல்காரரிடம் இருந்து வாங்கிக்கொண்டு ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குள் சென்றபோது நடிகர் நாசர் அவர்கள் அவற்றைப் பார்த்துவிட்டு ‘இவற்றையெல்லாம் நீங்கள் படிப்பீர்களா..?’ என ஆச்சர்யமாகக் கேட்டார். பின்னாட்களில் அவர் இயக்கிய ‘அவதாரம்’, ‘தேவதை’ ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.
எளிய குடும்பத்திலிருந்து பிறந்து வந்த லிங்குசாமி ஒரு பிரபல திரைப்பட இயக்குநராக வளர்ந்ததையும் நான் வசனகர்த்தாவானதையும் தானே சாதித்ததுபோல் சொல்லி சொல்லி சந்தோஷப்படுவார்.
‘’வெள்ளத்தனைய மலர் நீட்டம்….’’ என வள்ளுவர் கூறுகிறாரே அப்படித்தான் நான் மிதந்துகொண்டிருப்பதாக நினைக்கிறேன். எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு, தேனுகா போன்றவர்கள் என்போன்ற இளம் எழுத்தாளர்கள்மீது பாய்ச்சிய அன்பு வெள்ளத்திலும் ஞான வெள்ளத்திலும்தான் நாங்கள் மிதக்கிறோம்.
அவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுவிட்டார்கள். கடைசியாக தேனுகா. அவர் இறந்ததாக சேதி கேட்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு அவருடைய செல்போனுக்கு ஒரு கவிதை அனுப்பிவைத்திருந்தேன். பின் அவரின் கருத்தை அறிய தொடர்புகொண்டேன். டயல் டோனில் நாதஸ்வர ஓசை நீண்டு கொண்டிருந்தது. அவரது மனைவிதான் பேசினார். அவர் குரல் கேட்டதும் அவரது கையால் நானும் நண்பர் இயக்குநர் லிங்குசாமியும் விருந்துண்டு மகிழ்ந்த தினம் நினைவில் எழுந்தது. செல்போனை மறந்து வீட்டில் வைத்துவிட்டு நாதஸ்வரம் பற்றிய ஒரு டாக்குமெண்டரிக்காக வெளியே சென்றிருப்பதாகக் கூறினார்.
இரவு வந்ததும் கவிதைபற்றி அவர் கருத்தறியக் காத்திருந்தேன். ஆனால், அவர் இறந்த தகவல்தான் வந்தது.
மறுநாள் நான், இயக்குநர் லிங்குசாமி மற்றும் ரவி சுப்ரமணியன் மூவரும் இறுதிச் சடங்கிற்காக லிங்குசாமி காரில் பயணம் செய்தோம்.
எவ்வளவு நினைவுகள் மூவருக்கும்….
லிங்குவின் ஓவியக் கண்காட்சி சென்னையில் நடந்தபோது மூன்று தினங்கள் இங்கு வந்து தங்கியிருந்து குழந்தைபோல எங்களோடு பழகிய சம்பவங்கள்.
ரவி சுப்ரமணியனின் கவிதைபற்றி அவர் பேசிய பொழுதுகள்..
நவராத்திரி காலங்களில் கும்பேஸ்வரன் கோவிலில் இருக்கும் எங்கள் கொலு பொம்மைக் கடையில் மாலை முழுவதும் அமர்ந்து அதன் அழகையும் அவற்றை வாங்கிச் செல்பவர்களின் முகமலர்ச்சியையும் பார்த்து ரசித்த நாட்கள்.
என பல நினைவுகள் சரம் சரமாய் வந்து விழுந்தன.
அவரை அவரது இல்லத்தில் கடைசியாகப் பார்த்தோம். கண்ணாடி பெட்டிக்குள் உறைந்துபோய் மகிழ்ச்சியாக உறங்குவது போலிருந்தது. நான் ஆரம்ப காலங்களில் பார்த்தபோது கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்து எழுந்து வந்து பார்த்து பேசிக்கொண்டிருப்பாரே அப்படி எழுந்து வரமாட்டாரா என உள்ளம் ஏங்கியது. ஆனால் இந்தக் கண்ணாடிச் சுவர் தாண்ட முடியாததாக இருந்தது. அவருக்கும் எனக்கு இடையில் இருந்த தூரம் முடிவிலியாகிவிட்டதை உணர்ந்துகொண்டேன்.
தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலிலும் கும்பகோணம் ராமசாமி கோவில், நாகேஸ்வரன் கோவில் சக்கரபாணி கோவில்களின் மண்டபங்களிலும் அமர்ந்து அவர் பேசிய சிற்பக் கலை பற்றிய சிந்தனைகள் அவற்றைப் பாதுகாக்க அவர்கொண்டிருந்த ஆர்வம் எல்லாம் இப்போது வெறும் நினைவுகள்தானா..?
திருபுவனம், திருநாகேஸ்வரம், திருவீழிமிழலை.. என ஓவ்வொரு ஊராக அவரது மொபட்டில் அமர்ந்து சென்று கோவில்களையும் சிற்பங்களையும் கண்டு மகிழ்ந்ததெல்லாம் இனி காற்றில் கரைந்திடுமா..?
சில மாதங்களுக்கு முன் அவரை சந்தித்தபோது ‘லூயி புனுவல்’ படங்களைப் பார்க்கும்படி கூறினார். ‘பெர்க்மனின் செவன்த் ஸீஸ் பார்த்திருக்கிறீர்களா..?’ எனக் கேட்டார். ஒரு மனிதன் மரணத்தை சந்திப்பது பற்றிய படம் அது.
‘காத்தவராயன்’ படத்தில் காத்தவராயனுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதும் பூமியில் இருந்து கழுமரம் தோன்றும் காட்சியைப்பற்றி வியப்பாகக் கூறினார்.
மரணத்தைப்பற்றி அப்போது ஏன் பேசினார் என்று அன்று புரியவில்லை. இப்போது யோசிக்கையில் மரணத்தோடு தன் கடைசி நாட்களில் அவர் அடிக்கடி உரையாடி இருப்பாரோ என்று நினைத்துக்கொள்கிறேன். ‘தோற்றம் பின்னுள்ள உண்மைகள்’ கட்டுரையில் அவர் எழுதிய மரணம் பற்றிய பகுதியை அதற்கும் படித்துக்காட்டியிருப்பார் என்றும் மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.
அவர் வீட்டில் நியூ பிளாஸ்டிசிசம்பற்றி விளக்கி அவர் அமைத்திருந்த வண்ண நாற்காலி ஒன்று உண்டு. அது இன்று வெறுமையாகிவிட்டது.
- நன்றி : அமிர்தா, ஜனவரி 2015
- பிருந்தா சாரதி