மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாமா? | தனுஜா ஜெயராமன்
சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் பண்டுகள் ஏற்றது. மியூச்சுவல் பண்டுகள் எளிமை, மலிவு மற்றும் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றை வழங்குகின்றன.
மியூச்சுவல் பண்டு என்பது ஒரு முதலீட்டு குழுவினர் பல முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய பணத்தை ஒன்றாக சேர்த்து பல வகையான பங்குகள், பாண்டுகள், பணச் சந்தை பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். இந்தப் பணத்தை தொழில்முறை பண்டு மேனேஜர் ஒருவர் நிர்வகிப்பார். இந்த பண்டின் நோக்கத்தைப் பொறுத்து அவர் முதலீடுகளை கவனித்து வருவார்.
இதனால் முதலீடுகளின் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்றதாக அமைகின்றன. தங்கள் முதலீடுகளை சுதந்திரமாக நிர்வகிக்க முடியாதவர்களுக்கு மியூச்சுவல் பண்டுகள் ஒரு புத்திசாலித்தனமான ஐடியா. இதில் சந்தை ஏற்ற இறக்கம் குறித்து முதலீட்டாளர்கள் கவலைப்பட தேவையில்லை.
பங்குச் சந்தையில் நாம் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதிலும் சந்தை அபாயம் உள்ளது என்ற எச்சரிக்கையையும் செய்கிறார்கள்.
ஆரம்பத்தில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை நினைத்த நேரத்தில் திரும்ப பெற முடியாது. ஆனால் தற்போது அந்த கட்டுப்பாடு கிடையாது. சில கட்டணங்கள் மற்றும் வரிகளுடன் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற பரஸ்பர நிதி நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.
பான் கார்டு மற்றும் புரோக்கிங் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ள எவரும் பல்வேறு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.