பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை மற்றும் நல்லடக்கம்! | தனுஜா ஜெயராமன்
பங்காரு அடிகளாருக்கு நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில மக்களும் நேரில் வந்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்கள் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். பங்காரு அடிகளார் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அரசு சார்பில், துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அடிகளாரின் உடல் நல்லடக்கத்துக்காக, மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் கருவறை பின்புறமுள்ள புற்றுக்கோயில் அருகே கொண்டுசெல்லப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள், தங்களை வழிநடத்திய பங்காரு அடிகளாரின் உடலுக்கு, கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். பிறகு பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.