அண்ணாமலை வராமல் பாஐக கூட்டமா? | தனுஜா ஜெயராமன்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வர தாமதமானதால் அவர் வருவதற்கு முன்பே பாஜக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி பரபரப்பினை கிளறி உள்ளது.
சென்னையில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை கூட்டம் நடைபெறும் இடத்துக்கு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர். அண்ணாமலை வர தாமதமாகும் நிலையில் கேசவ விநாயகம், எச்.ராஜா உள்ளிட்டோர் நீண்ட நேரமாக மேடையிலேயே அமர்ந்திருந்தனர்.
அண்ணாமலை வெகுநேரம் வராததால் அவர் வரும் முன்பே வந்தே மாதரம் பாடலை பாடி கூட்டத்தை தொடங்கினர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய கேசவ விநாயகம், “நாம் பல முறை தனித்து போட்டியிட்டுள்ளோம். தனித்து போட்டியிடுவது ஒன்றும் பாஜகவிற்கு புதியது அல்ல. இதனை நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்களை டெல்லி தலைமை கண்காணித்து கொண்டு இருக்கிறது.” என தெரிவித்தார்.
பின்னர் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்து கலந்து கொண்டார்.
முன்னதாக டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இதனால், அண்ணாமலை தலைமையில் சென்னையில் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறவிருந்த அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.