கலைஞர்களின் ஆரம்ப நம்பிக்கையே சிறு பட்ஜட் படங்கள்- ‘இறுகப்பற்று’ தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ! தனுஜா ஜெயராமன்

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் இசைக்கு ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவிற்கு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேதா எழுதியுள்ளார்.

வரும் அக்-6ஆம் தேதி இப்படம் உலகெங்கும் ரிலீஸாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இறுகப்பற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இன்றைக்கு உலகமெங்கும் ‘மைய குடும்ப உறவு முறை’ தான் இருக்கிறது. கூட்டமாக இருந்தபோது வராத சிக்கல் இப்போது வெடித்திருக்கிறது. நவீன வாழ்க்கையில் கணவன், மனைவி பிரச்சனை நரக வேதனையாக இருக்கிறது. அந்த சிக்கலை ஆணித்தரமாக அலசும் படம் தான் இந்த ‘இறுகப்பற்று’. இந்த படம் வெளியாகும்போது ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” என்றார்.

படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பேசும்போது, “ஸ்கிரிப்ட்டில் நன்றாக இருக்கும் விஷயங்களை சினிமாவில் சொல்லும்போது சில நேரங்களில் அது பார்வையாளர்களிடம் சரியாக ரீசாகாமல் போய்விடும். ஆனால் இயக்குநர் யுவராஜ் அதை தெளிவாக கையாண்டு திரையில் கொண்டு வந்துள்ளார். படத்தில் நடித்தவர்களின் காட்சிகளை வெட்டுவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது. அந்த அளவுக்கு அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். கணவன், மனைவியாக படம் பார்க்க வருபவர்கள் படம் முடிந்து போகும்போது தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவந்து விட்டுதான் வீட்டுக்கு செல்வார்கள்: என்றார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசும்போது, “இயக்குநர் யுவராஜ் ஒரு குழந்தை மாதிரி. விக்ரம் பிரபு சின்னச்சின்ன கியூட் எக்ஸ்பிரஷன்களால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். விதார்த் அபர்ணதி ஜோடியுடன் எல்லாரும் தங்களை எளிதாக தொடர்புபடுத்தி பார்க்கும் படி இருக்கும் .குறிப்பாக அபர்ணதி இந்த படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளார் படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்து விடும்” என்றார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, “எனக்கு இந்த படம் ஒரு நல்ல டீச்சர் மாதிரி என்று சொல்வேன்.. அதேசமயம் ஒரு பிரச்சாரமாக இது இருக்காது. ஆனால் படம் முடிந்து செல்லும்போது எல்லோரும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்வீர்கள் என்பது மட்டும் உறுதி” என்றார்.

டிகை அபர்ணதி பேசும்போது, “தேன் படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். அடுத்த நிமிடமே இந்த படத்திற்காக எனது உடல் எடையை கூட்ட வேண்டும் என்று கூறினார். இது என்ன சாதாரணம் தானே என நினைத்து உடல் எடையை கூட்ட ஆரம்பித்தாலும் மூன்று மாதம் ஆகியும் கூட என்னால் அவர் சொன்ன அளவிற்கு எடையை கூட்ட முடியவில்லை. காலையில் துவங்கி எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். அதற்கே அதிக பட்ஜெட் ஆனது. ஒரு கட்டத்தில் சாப்பிடவே பிடிக்காமல் போய்விட்டது. நான் என்ன சூர்யாவா ? விக்ரமா ? எடையை கூட்டி குறைப்பதற்கு.. ஆனாலும் இதை ஒரு சேலஞ்சாக எடுத்து பண்ணினேன். நிச்சயமாக இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும். இடையில் விளம்பர படம், ஆல்பம் என தேடி வந்த சில வாய்ப்புகளையும் இதனால் மிஸ் செய்தேன்” என்று கூறினார்.

நடிகர் விதார்த் பேசும்போது, “நானும் விக்ரம் பிரபுவும் ஒரே இடத்தில் இருந்து அறிமுகமானவர்கள் தான். இந்த படத்தில் இப்போது இணைந்து நடித்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. அபர்ணதிக்கு பெரிய உதவி எல்லாம் நான் செய்யவில்லை. கைகாட்டும் வேலை மட்டும்தான் என்னுடையது. மற்றபடி உழைப்பு அவருடையது தான். எனது திருமண பத்திரிகையை எல்லோருக்கும் கொடுத்தபோது, பலரும் திருமண வாழ்க்கை குறித்து அறிவுரை சொன்னது பயமாக இருந்தது. ஆனால் நான் பயந்தது போல தான் நடந்தது. ஆனால் யாரிடம் போய் கேட்டாலும் அவர்களும் அதையே தான் சொன்னார்கள். அந்த சமயத்தில் தான் யுவராஜ் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். நான் எவ்வளவோ படங்களை என்னை அறியாமலேயே கூட சில காரணங்களால் மிஸ் பண்ணியிருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நினைத்தேன். இப்படி ஒரு படத்தில் நானும் இருக்க வேண்டும் என விரும்பினேன். மொத்தத்தில் என்னை நான் புரிந்து கொள்ள இந்த படம் உதவி இருக்கிறது” என்று கூறினார்.

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது, “தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது, இது என் திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எனக்கு தெரிந்திருக்கவில்லை. இயக்குநர் யுவராஜ் கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்த படத்தின் கதையை விவரித்தார். இதில் நடித்துள்ள எல்லா நடிகர்களுமே பிரகாசிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். எல்லோருமே கடின உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படத்தில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்த படம் எல்லாருக்குமே ஸ்பெஷல். எஸ்ஆர் பிரபு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கு என்று என்னை அழைத்தபோது, அவரே இப்படி சொன்னால் நிச்சயமாக அதில் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டது. 15 நிமிடம் கதை கேட்டதுமே உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். என் மனைவியின் பிறந்த நாளும் அக்டோபர் 6ஆம் தேதி தான். இந்த படமும் அக்டோபர் 6ல் தான் வெளியாகிறது. அதனால் உனக்காகத்தான் இந்த படமே என்று சொல்லி அவரை குளிர்வித்து விட்டேன். என்னை ஒரு நடிகராக தொடர்ந்து நிலைநிறுத்த உதவி வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு எனது நன்றி” என்று கூறினார்.

இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “இந்த படத்தின் புரமோஷனுக்காக நாங்கள் வெளியிட்ட 8 நிமிட ‘கேப்’ வீடியோ பற்றி பேசுவதா, இல்லை என்னுடைய திரையுலக பயணத்தில் விழுந்த 8 வருட ‘கேப்’ பற்றி பேசுவதா என்கிற எண்ணம் தான் இங்கே வந்ததில் இருந்தே ஓடிக்கொண்டிருந்தது.
என்னை மாதிரி ஒரு தோல்வி பட இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு வெற்றியை பரிசாக கொடுத்துவிட்டு அவரைப் பற்றி நிறைய பேசுவேன். சினிமாவை விட்டு விலகி வெகு தூரம் போனாலும் ஒரு நல்ல படத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் என் நண்பர் கமல்நாத் மூலமாக தயாரிப்பாளருடன் சந்திப்பு ஏற்பட்டது. ஆனால் ஒரு சின்ன கங்கு ஒன்றை என்னுள் பார்த்தவர்கள் அதை பெரிய நெருப்பாக மாற்றினார்கள். இந்தப் படத்தின் மூலம் எனது நேர்மையை நான் உங்களுக்கு காட்டுகிறேன். இதற்கு பிறகு நான் அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் உருவாக்கும் ஒவ்வொரு படமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். திரை உலகை சேர்ந்த பலரும் இந்த படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டோமே என்று பாராட்டினார்கள். அப்புறம் தான் அதன் பின்னணியில் எடிட்டர் மணிகண்டன் பாலாஜி இருக்கிறார் என்பது தெரிய வந்தது.

இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரிடம் தான் நான் உரிமையாக கேட்க முடியும். படத்தில் ஸ்ரத்தாவின் கதாபாத்திரம் அவருக்கெனன அளவெடுத்து தைத்தது போல கச்சிதமாக இருந்தது. என்ன சம்பளம் கொடுத்தாலும் சரி இந்த படத்தில் நடிக்க நான் தயார் என விதார்த் ரொம்பவே ஆர்வம் காட்டினார். அபர்ணதி படத்திற்காக எடையை கூட்டி குறைக்க என ரொம்பவே மெனக்கெட்டார். படம் பார்த்துவிட்டு நன்றாக வந்து இருக்கு என்கிற சந்தோஷத்தில் இப்போது பேசுகிறேன். நிச்சயமாக இந்த படம் ஒரு பிரச்சாரமாக இருக்காது.

சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே எந்த ஓடிடிடியில் வெளியாகிறது என்று தான் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை உருவாகி இருக்கிறது. ஆனால் சின்ன படங்கள் மூலமாகத்தான் தங்களது எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும் என பல கலைஞர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். சின்ன படங்களும் சினிமாவை தாங்கி தான் பிடிக்கின்றன. சிறு பட்ஜெட் படங்கள் முக்கியம் தான்.. ஆனால் அவற்றுக்கென ஒரு வியாபாரம் அப்போதிருந்தே இருந்ததில்லை. சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருகின்றன இதனால் தொழிலாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. சிறுபடங்கள் தான் சினிமாவில் முதுகெலும்பு. அதுக்கு எதிராக சொல்லப்படும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சமீபத்தில் விஷால் சொன்னது ஒரு எச்சரிக்கை உணர்வால் சொல்லப்பட்டது தான்.

இந்த படத்திற்கு வழக்கமான ஒரு டிரைலர் போல இல்லாமல் புரமோஷனுக்காக கேப் என்கிற ஒரு வீடியோவை வெளியிட்டோம். அது பெரிய அளவில் ரீச்சாகி இருக்கிறது. இரண்டு பேர் பகிர்ந்ததிலேயே 2 கோடி பேர் அதை பார்த்து இருக்கிறார்கள் என்பது சந்தோஷம் தருகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!