முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்

 முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்

அதிமுக பாஜக கூட்டணி இல்லை என அதிமுக கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜக அதிமுக இடையே கடந்த சில நாட்களாக தொடர் மோதல் போக்கு இருந்து வந்த்து. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக மூத்த நிர்வாகிகள், பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும்,  பேரறிஞர் அண்ணா அவர்களையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை” சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது பாஜக. இந்தச் செயல்கள் கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்,எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏ ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...