அண்ணாதுரை பிறந்த தினம்

வரலாற்றில் இன்று-[ 15 செப்டம்பர் ]

அண்ணாதுரை பிறந்த தினம்: 15-9-1909

அண்ணாதுரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார்.

அண்ணாத்துரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.

அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக் கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர் 15, 1909-ல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்தார். மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர்.

பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார். 1934-ல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்), மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.

அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.

அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார். ‘‘கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்றுதான்” என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது.

அவர் ஒரு நேர்காணலில் “…..நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்……” என்றார். அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை. அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை.

கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில்- அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும். அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935-ல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917-ல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது. பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937-ல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது.

அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார். 1944-ல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார். பிரித்தானிய காலனிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது.

இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்டு 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று[15]. அண்ணாதுரை இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல[10] என்பதை வலியுறுத்தினார். திராவிடர் கழகம் ஜனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார்.

இதன் வெளிப்பாடாக 1948-ல் நடைபெற்ற கட்சிகூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார். பெரியார் தேர்தலில் பங்குபெருவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களை தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்.

இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

அண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக்க்டசி துவக்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பெற்றது. அண்ணாதுரை செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்திருந்தாலும் கீழ்தட்டு சாதி வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார். அவர் தொடங்கிய திமுகவும் செல்வாக்கை பெற்றது.

1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தி.மு.க வெற்றிபெற்றது. 1967 பிப்ரவரியில் சென்னை மாநில முதல் அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!