விலை உயர்ந்த ஆவின் பொருட்கள் ! அதிர்ச்சியில் பொதுமக்கள்! | தனுஜா ஜெயராமன்
ஆவின் நிர்வாகம் பால், நெய், வெண்ணெய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றது.
இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரை லிட்டருக்கு ரூ. 50 அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் பால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்தவாறு இருப்பதாலும் மற்றும் உற்பத்தி செலவும் அதிகரித்த காரணத்தால் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை உயர்வு 14.09.2023 முதல் அமல்படுத்த இந்நிறுவனத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலையை விட ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தரமான ஆவின் பால் உபபொருட்களை பயன்படுத்தி சுமார் 4.5 இலட்சம் தமிழக பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, 15 மில்லி நெய் பாக்கெட் ரூ. 14-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ. 15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
100 மில்லி பாக்கெட் ரூ.70-ல் இருந்து ரூ.80-ஆகவும், 500 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.315-ல் இருந்து ரூ.365-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630-ல் இருந்து ரூ.700-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது அரை கிலோ வெண்ணெய் விலை ரூ.275-ஆக விற்பனை செய்யப்படுகிறது.