இன்று முதல் மகளிர் உரிமை தொகை! | தனுஜா ஜெயராமன்

 இன்று முதல் மகளிர் உரிமை தொகை! | தனுஜா ஜெயராமன்

உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி (இன்று) தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்காக விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. இது அந்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும், நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...