ஜி-20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் சிறப்பு கண்காட்சிகள்..!தனுஜா ஜெயராமன்
ஜி-20 உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுவதை முன்னிட்டு டெல்லியில் உள்ள சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.
ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் தொழில்நுட்ப திறன் மற்றும் கைவினை பொருட்கள் திறனை பிரதிபலிப்பதாக இருக்கும்.
ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 9 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
அங்கு நிறைய கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கண்டுகளிக்கலாம்.
‘கலாசார வழித்தடம்-ஜி20 டிஜிட்டல் அருங்காட்சியகம்’ என்ற ஒரு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜி-20 நாடுகளின் பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பாரத் மண்டபத்தின் 4 மற்றும் 14-ம் எண் அறைகளில், ‘டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம்’ என்ற கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ‘கைவினை பொருள் பஜார்’ என்ற கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற தலைப்பில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த கைவினை பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா பள்ளிவாசலில், ஜி-20 உச்சி மாநாட்டை வரவேற்கும் விதமாக வண்ணமயமான மலர்கள் மற்றும் விளக்குகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.