தமிழகத்தில் அதிகரித்து வரும் காற்று மாசு! | தனுஜா ஜெயராமன்

 தமிழகத்தில் அதிகரித்து வரும் காற்று மாசு! | தனுஜா ஜெயராமன்

சென்னையில் தூத்துக்குடியைவிட இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. ஏற்கனவே டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளில் காற்று மாசு ப்ரச்சனைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் காற்று மாசு அதிகரிப்பதாக சொல்கிறார்கள். பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இதில், தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால் மாசு அதிகமாக இருப்பதும், சென்னையில் தூத்துக்குடியைவிட இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மாசுவை குறைக்க நடவடிக்கைகள் எடுக்காமல் தற்போது உள்ளபடியே தொழில் நடவடிக்கைகளை தொடர்ந்தால் 2030-ம் ஆண்டு சென்னை, திருச்சியில் அதிகபட்சமாக 27 சதவீதமும், மதுரையில் 20 சதவீதமும், தூத்துக்குடியில் 16 சதவீதமும் மாசு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் 2030-க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போதுள்ள நிலையில் இருந்து திருச்சியில் 36 சதவீதமும், மதுரை, சென்னையில் 27 சதவீதமும், தூத்துக்குடியில் 20 சதவீதமும் குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர்கள் , ‘எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது, தரமான சாலை உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசுவை குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காற்று மாசுவை குறைக்கலாம்’ என்கிறார்கள். இனிமேல் அரசு மாசுவை குறைக்க கட்டுபடுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்க பட வேண்டும் என்பதே இயற்கையை நேசிக்கும் அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...