13 கெட்டப்புகளில் சிவாஜி

 13 கெட்டப்புகளில் சிவாஜி

13 கெட்டப்புகளில் சிவாஜி தோன்றிய மருதநாட்டு வீரன்

அறுபதுகளில் சிவாஜி நிற்க நேரம் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார். 1960 இல் எட்டுப் படங்களில் நடித்தார். அதாவது ஒன்றரை மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ். 1961 மார்ச் 16 ஆம் தேதி பாவமன்னிப்பு வெளியாகி பம்பர்ஹிட்டானது. அந்தப் படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கையில் ஏப்ரல் 21 ஆம் தேதி புனர்ஜென்மம் வெளியானது. பாவமன்னிப்பு, புனர் ஜென்மம் இரண்டும் ஓடிக் கொண்டிருக்கையில் மே 27 பாசமலர் வெளியாகி பட்டையை கிளப்பியது.

பாவமன்னிப்பு, பாசமலர் என்ற இருபெரும் படங்களுக்கிடையில் சிக்கி புனர்ஜென்மம் வெளியேற, இரண்டு ‘ப’ வரிசைப் படங்களும் 175 நாள்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்தன. இவையிரண்டும் தங்கள் ஓட்டத்தை முடிக்கும் முன் ஜுலை 1 ஆம் தேதி ஸ்ரீ வள்ளி, எல்லாம் உனக்காக என்று இரு படங்கள் ஒரே நாளில் வெளியாயின. பாசமலரில் அண்ணன், தங்கையாக உருக்கமான நடிப்பை வெளிப்படுத்திய சிவாஜியும், சாவித்ரியும் எல்லாம் உனக்காக படத்தில் காதலர்கள். சீச்சீ… அண்ணனும், தங்கையும் காதலர்களா என்று அதற்காகவே பலரும் எல்லாம் உனக்காக படத்தை தவிர்த்தனர்.

ஸ்ரீ வள்ளி, எல்லாம் உனக்காக படங்களுடன் பாசமலரும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி மருதநாட்டு வீரன் வெளியானது. டி.ஆர்.ரகுநாத் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி ஜீவகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஜீவகன் வீரன். அவன் மீது அந்நாட்டு இளவரசி ரத்னாவுக்கு மையல் ஏற்படும். ஜீவகனும் அவளை காதலிப்பான். இது அரசரின் பாதுகாவலன் வீரகேசரிக்குப் பிடிக்காது. பக்கத்து நாட்டு சுல்தானுடன் சேர்ந்து அரசரை வீழ்த்த வீரகேசரி திட்டம் தீட்டியிருப்பான். அவனால் பொய் குற்றம்சாட்டப்பட்டு ஜீவகன் நாட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்படும். இளவரசியும் அவனுடன் செல்வாள். வீரகேசரியின் சதித்திட்டத்தை ஜீவகன் அம்பலப்படுத்தி அரசரை காப்பாற்றினானா என்பது கதை.

வழக்கம்போல் சிவாஜி தனது முழு பலத்துடன் நடித்திருந்தார். படத்தில் அவருக்கு மொத்தம் 13 கெட்டப்புகள். இளவரசியாக ஜமுனா, வீரகேசரியாக பி.எஸ்.வீரப்பா, ஜீவகனின் தாயாக கண்ணாம்பா என அனைவரும் முன்னணி நட்சத்திரங்கள். தண்ணியாகிப்போன மோரில் எப்படி வெண்ணைய் திரளாதோ அதேபோல் இந்தக் கதையிலும் சுவாரஸியம் திரளவில்லை.

இன்னொருபுறம் பாசமலரை ரசிகர்கள் மறுபடி மறுபடி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். இன்னொரு இடியாக மருதநாட்டு வீரன் வெளியான 3 வது வாரம் பாலும் பழமும் வெளியாகி கூட்டத்தை தனது பக்கம் இழுத்துக் கொண்டது. அப்படி பாசமலர், பாலும் பழமும் என்ற இரு ‘ப’ வரிசைப் படங்களுக்கு நடுவில் மாட்டி மருதநாட்டு வீரன் அடிபட்டுப் போனது. இல்லையெனில் 100 நாள்கள் படம் திரையரங்கில் தாக்குப் பிடித்திருக்கும்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...