பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பு!
தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசியது பரபரப்பினை கிளறி இருக்கிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாடு, தென் ஆப்ரிக்காவில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசியதாக செய்திகள் வந்துள்ளது.
இந்த பேச்சு வார்த்தை குறித்து பிரதமர் மோடி பேசுகையில், கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்து கவலை தெரிவித்ததாகவும், இந்தியா மற்றும் சீனா உறவு இயல்பு நிலைக்கு திரும்ப, எல்லை பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவது அவசியம் என்பதை அடிக்கோடிட்டு பேசியதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசிய இரு தினங்களில், சீன வெளியுறவுத்துறை வேறு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, அதிபர் ஷீ, பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அப்போது, ‘சீனா- – இந்தியா உறவுகளை மேம்படுத்துவது, இருதரப்பின் பொதுவான நலன்களுக்கு உதவும்.
மேலும் உலக அளவிலும், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்தது’ என, சீன அதிபர் வலியுறுத்தியதாக அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.