நீட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம்!

 நீட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், கவர்னரையும் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட்தேர்வும் தொடரும் அரசியல் சர்ச்சைகளும் என்பதாக தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மாணவனின் துயர சம்பவம் நீட் ப்ரச்சனைகளை திரும்ப கிளறியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வு, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களை மட்டுமன்றி அவர்தம் பெற்றோரையும் மரணத்தை நோக்கி தள்ளுகிறது. எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் ஒன்றிய அரசையும் , தமிழக ஆளுநரையும் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20 அன்று மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.

தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் நம் மாணவர்கள் , பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம் , நீட்டை ஒழிப்போம் என கூறியுள்ளார்.

மறுபுறம் ஆளுநர் ரவியோ நீட் தேர்வு குறித்த கருத்துக்களில் தீவிரமாக உள்ளார். சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் நான் கையெழுத்து போடமாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கிவிடும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று பேசி
கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...