மஞ்சள் மஞ்சளா ஓடப்போகும் தமிழக அரசு பஸ்கள்..
மஞ்சள் மஞ்சளா ஓடப்போகும் தமிழக அரசு பஸ்கள்.. வந்தது அறிவிப்பு.. புது மாற்றத்தில் போக்குவரத்து கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய புதிய மாற்றத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நீண்டதூர பேருந்து பயணம் என்றாலே, தமிழ்நாட்டை பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள்தான் சிறப்பான சேவைகளை வழங்கி வருவதாக பயணிகள் நினைக்கிறார்கள். காரணம், அரசு பேருந்துகளில் போதுமான அளவு வசதிகளும், முறையான பராமரிப்பும் இல்லை, அத்துடன், தாமதமாக செல்கின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளது.
இந்த கருத்துக்களை மாற்றியமைக்கும் வகையில், தமிழக அரசு அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்தது.. குறிப்பாக, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகளை புனரமைத்து, தனியார் பேருந்துகளுக்கு இணையான அளவில் சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது..
புதிய பஸ்கள்:
அத்துடன் போதுமான அளவுக்கு, புதிய பஸ்களையும் வாங்கவும், ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 450 டவுன் பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, தமிழக அரசு போக்குவரத்து கழகம், தன்னுடைய பஸ்கள் அனைத்தையுமே, புனரமைப்பதற்காக, டெண்டர் விடுக்கப்பட்டது.. இந்த டெண்டரின்படி பஸ்கள் புதுப்பிக்கப்படும்போது, அதற்கு புதிதாக மஞ்சள் நிறம் அடிக்கப்பட முடிவானது…
ஏற்கனவே சில்வர் மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பஸ்கள், இப்போது மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகின்றன.. புது புது மாற்றங்கள்: இது தொடர்பாக கடந்த மாதம், டிஎன்எஸ்டிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மஞ்சள் நிறமாக்கி கொண்டிருக்கும் பஸ்களின் போட்டோக்களை வெளியிட்டிருந்தது. அப்போது வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட உள்ளோம் என்ற விவரத்தையும் குறிப்பிட்டிருந்தது.. குறிப்பாக, பஸ்களில் தலையணையுடனான படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது..
பேருந்துகளில் ஏற்கனவே இருந்த யூஎஸ்பி சார்ஜருக்கு பதிலாக சார்ஜிங் பயன்கள் அமைக்கப்பட உள்ளன.. இருக்கை கவர்களில் துணிகளுக்கு பதிலாக, ரெக்சின்களை கொண்டு சீட் அமைக்கப்படும், ஜன்னல்கள் மற்றும் ரீடிங் லைட்டுகள் தரம் உயர்த்தப்படும், இன்னும் பராமரிப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தது.
மஞ்சள் கலர்: தமிழகம் முழுதும் பயன்படுத்த, 1,000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்கவும், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பராமரிப்பு பணிகளும் வேகம் எடுத்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு கூட தகவல் வெளியாகியிருந்தது. முக்கியமாக, பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், சென்னை, பெங்களூர் திருச்சி, கரூரில் புதிய பஸ்கள் தயாராகி உள்ள நிலையில், விரைவில் இயக்கத்துக்கு இவைகள் வரப்போவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்னொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தில், 100 மஞ்சள் நிற பஸ்களின் சேவை வருகிற 11ம் தேதியே துவங்க போகிறதாம்.. 3,200 புதிய பஸ்கள், 1,000 புனரமைக்கப்பட்பட்ட பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்களில் இணைக்கும் பணி நடந்து வரும்நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. 100 பஸ்கள்: இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, “அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள பணியாளர்களின் பற்றாக்குறையை போக்கவும், புதிய பஸ்களை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முதற்கட்டமாக தயாராக உள்ள புனரமைக்கப்பட்ட, 100 மஞ்சள் நிற பஸ்கள் சேவை வரும், 11ம் தேதி துவங்க உள்ளது.. ஒவ்வொரு பஸ்சுக்கும், 14 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டிருக்கிறது.. வழக்கமாக ஒரு பஸ்சில், 54 இருக்கைகள் மட்டுமே இருக்கும் இதனால், இடநெருக்கடியால் பொதுமக்கள் அவதியுறுவார்கள்.. ஆனால், மஞ்சள் நிற பஸ்களில் 50 இருக்கைகள் மட்டுமே இருக்கும். மற்ற 900 மஞ்சள் நிற பஸ்களும் அடுத்தடுத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்
.. போக்குவரத்து கழகங்களுக்கு புதிய டிரைவர், கண்டக்டர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் அதே 11ம் தேதியே துவங்குகிறது” என்று தெரிவித்துள்ளனர்.