போதைக்கு எதிரான விழிப்புணர்வு – வெப் திரைவிமர்சனம்!
வேலன் ப்ரொடக்ஷன் சார்பில் முனிவேலன் தயாரித்திருக்கும் படம் “வெப்”. புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ள இப்படத்தின் லீட் ரோலில் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ளார். இவருடன் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் வகையை சேர்ந்த கதையினை மிக திறமையாக இயக்கியுள்ளார் டைரக்டர் ஹாரூன்.
ஐடி கம்பெனியில் பணிபுரியும் ஷில்பா மஞ்சுநாத் தனது தோழிகளான ஷாக்ஷி பாலா மற்றும் சுபஶ்ரீயுடன் சனி ஞாயிறுகளில் வீக் என்ட் பார்ட்டி என்கிற பெயரில் குடி, போதை என கும்மாளமடிக்கிறார்கள். புதுமண தம்பதிகளான முரளி & அனன்யா இருவருக்கும் பார்ட்டி தரும் வேளையில் எதிர்பாராத விதமாக நான்கு பெண்களும் கடத்தப்படுகிறார்கள்.
பெண்கள் ஊருக்கு ஒதுக்குபுறமான பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்வது நட்டியும் அவரது தோழி ஒருவரும். ஆனால் நட்டிக்கும் அந்த பெண்களுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை.
அங்கு ஏற்கனவே ஒரு பெண் இரத்த காயங்களுடன் இருக்கிறாள். மேலும் அனன்யா மற்றும் முரளியும் கொல்லப்படுவதை கண்டு தோழிகள் பயந்து நடுங்குகிறார்கள்.
ஷில்பாவும் அவரது தோழிகளும் தப்பி செல்ல எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் நட்டியால் முறியடிக்கப் படுகிறது.
இறுதியில் ஷில்பா தனது தோழிகளுடன் தப்பித்தாரா?
நட்டிக்கும் அந்த பெண்களுக்கும் என்ன சம்பந்தம் ? என்பதே மீதி கதை.
நட்டி முற்பகுதியில் சைக்கோ போன்றும், பிற்பகுதியில் பாசமுள்ள அண்ணனாகவும் வழக்கம் போன்று மிகசிறப்பான நடிப்பை தந்துள்ளார்.
ஷில்பா உட்பட அத்தனை பெண் கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளனர்.
கார்த்திக் ராஜா இசையமைப்பில் 🎵உலகமாய் வந்தாயே… பாடல் இரசிக்க வைக்கிறது. திரில்லர் படத்தின் தேவையை அறிந்து மிரட்டியுள்ளார் கார்த்திக் ராஜா.
திரைக்கதை மற்றும் திடுக்கிடும் காட்சியமைப்புகளை சிறப்பாக அமைத்துள்ளார் புதுமுக இயக்குனர் ஹாரூன். கதையை சுவராஸ்யமாக நகர்த்திய விதத்தில் தேர்ந்த இயக்குனரை போல தெரிகிறார் இயக்குனர் ஹாரூன்.
குடி மற்றும் போதைகளால் ஏற்படும் விபத்துக்கள் அதனால் நிர்மூலமாக்கப்படும் குடும்பங்கள் குறித்து படம் பேசுவதாலேயே படக் குழுவினரை பாராட்டலாம்.
படத்தில் அங்காங்கே ஏற்படும் தொய்வு நம்மையும் சற்று தொற்றிக் கொள்கிறது . அதனை தவிர்ந்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.
மொத்தத்தில் “வெப்” போதைக்கெதிரான விழிப்புணர்வு படம்.
இளம் தலைமுறையினருக்கான , சமூகத்திற்கான செய்தி சொல்லுகிறது “வெப்”…..!