செல்போன் சார்ஜரை வாயில் வைத்த குழந்தை பரிதாப பலி!
செல்போன் சார்ஜரால் விபத்துகள் ஏற்படுவது என்பது தற்போது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கவனக்குறைவாக செல்போன் சார்ஜர் மின் இணைப்பிணை துண்டிக்காமல் விட்டதால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு சானித்யா என்கிற 8 மாதபெண் குழந்தை ஒன்று உள்ளது .
இந்த நிலையில், நேற்று தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர். மொபைல் சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்த தம்பதியினர் பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை அணைக்காமல் விட்டுவிட்டனர்.
இதற்கிடையே அந்த சார்ஜர் வயரை பிடித்து குழந்தை சானித்யா விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அந்த வயரை தனது வாயில் திணித்து குழந்தை விளையாடியுள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் குழந்தையை தாக்கியது. இதில் சானித்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டது. செல்போன் சார்ஜரால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனி செல்போன் சார்ஜரை பயன்படுத்தியதும் மறக்காமல் ஒயர் இணைப்பை துண்டித்து விடும் வழக்கத்தினை அனைவரும் கடைப்பிடித்தால் நல்லது. முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீடுகளி்ல் பல மடங்கு கவனத்துடன் இருப்போம்.. விபத்துகளை தடுப்போம்…!