மக்களவையின் அமர்வுகளில் பங்கேற்க வழிவகை வேண்டும்- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் கோரிக்கை…!
நாடாளுமன்றத்தின் நடப்பு மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. கோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை ஆகஸ்டு 4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், அவதூறு வழக்கில் தாம் குற்றவாளி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், அதை முன்னதாகவே செய்திருப்பேன் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, தம் மீதான தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், மக்களவையின் தற்போதைய அமர்வுகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது