ஆடி மாத பூர நன்னாள்
ஆண்டாளின் ஜன்ம நட்சத்திரமான ஆடி மாத பூர நன்னாள்தான் அம்மனுக்கும் உகந்த திருநாள். எனவே, இந்த நாளில், ஏராளமான அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். உமையவள் என்று போற்றப்படும் பார்வதிதேவிக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில் வரும் பூரம் நக்ஷத்திர நாள். கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல், அம்பிகைக்கு வளையல்கள் சாத்தி வழிபாடுகள் நடைபெறும். சுமங்கலிப் பிரார்த்தனைக்காகவும், கன்னிப் பெண்கள் நல்ல இடத்தில் திருமணம் நடைபெற வேண்டியும் அம்மனுக்கு வளையல்களை சமர்ப்பிப்பார்கள். இந்த வளையல்கள் பிறகு பிரசாதமாக வழங்கப்படும். இந்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துகொண்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்.